நடப்பூர் நடனபுரீஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி :
நடப்பூர் நடனபுரீஸ்வரர் சிவன் கோயில்,
நடப்பூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610101
இறைவன்:
நடனபுரீஸ்வரர்
இறைவி:
நடந்தநாயகி
அறிமுகம்:
இறைவன் இவ்வுலகில் தர்மம் சிறந்து விளங்க இந்திரன் முதலான தேவர்களுடன் அம்பர்மாகாளம் என்ற இடத்தில சோமாசி நாயனார் நடத்தும் சோமயாகத்திற்கு செல்லும் பொருட்டு புலவன், புலைச்சி வேடம் பூண்டு இந்த ஊரில் நடனமாடி, இங்கிருந்து நடந்தே சென்றதால் இவ்வூருக்கு நடப்பூர் என பெயர் வந்ததாக கூறுகின்றனர். கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும் பிரதான வாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் எதிரில் பெரிய நாகலிங்க மரமும் தீர்த்தகுளமும் அமைந்துள்ளது. இறைவன் நடனபுரீஸ்வரர் உத்திராட்சப் பந்தல் கொண்டு அருள்பாலிக்கிறார். கருவறை வாயிலில் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கிறார்கள். எதிரே பிரதோஷ நந்தியும் அமைந்துள்ளது. அம்பிகை நடந்தநாயகி தெற்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சிற்றாலயங்களில் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, வடக்கில் துர்க்கை, வடகிழக்கில் பைரவர், சூரியன், சந்திரன் நவக்கிரகங்கள், நாகலிங்க மரத்தின் கீழ் நாகர் மற்றும் பின்னமான சண்டேசர் முருகர் ஆகியோர் உள்ளனர். மண்டபத்தின் வெளியில் தனி மேடையில் பலிபீடம், நந்தி அமைந்துள்ளது. பிரகாரத்தில் மதிலை ஒட்டி சில லிங்க பாணங்கள் விஷ்ணு சிலை மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு சிலையும் உள்ளது.
திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், நாகதோஷம் நீங்கவும், தீராத நோய்கள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சோழர்களது ஆட்சியில் கட்டிய 108 கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இக்கோயிலில் பல்வேறு கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளது. காலப்போக்கில் பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து. பின் காஞ்சி மடாதிபதி ஜெகத்குரு ஜெயயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பரம் 7ம்தேதி நேரில் வருகை தந்து இறைவனை வணங்கினார். பின்னர் பணிகள் வேகமெடுத்து புதிதாக கோயில் கட்டி பிற விக்ரஹங்கள் பிரதிஷ்ட்டை செய்து 2013 செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். திருப்பணிகளின் போது பூமிக்கடியில் கிடைத்த ஐம்பொன்னாலான 14 சிலைகள் அரசு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நடப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி