தொண்டி சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம்
முகவரி :
தொண்டி சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்,
தொண்டி,
இராமநாதபுரம் மாவட்டம் – 623409.
இறைவன்:
சிதம்பரேஸ்வரர்
இறைவி:
சிவகாமி அம்பாள்
அறிமுகம்:
தன்னை நாடி வந்து வணங்குவோரின் துயர் தீர்க்கும் தெய்வமாக சிதம்பரேஸ்வரர் என்ற திருப்பெயருடன் இறைவன் அருளும் தலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு இராமநாதபுரம், திருவாடானை, மதுரை, அறந்தாங்கி, தேவகோட்டை ஆகிய இடங்களில் இருந்து நேரடியாகப் பேருந்து வசதிகள் உள்ளன.
புராண முக்கியத்துவம் :
இடைக்காலத்தில் இவ்வூர் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அக்காலத்தில் பவித்திரமாணிக்கம் என்கிற பெண் இப்பகுதியில் செல்வாக்கோடு வாழ்ந்த ஒரு நடன மங்கை என்றும் அவரது பெயராலேயே அழைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அவ்வேளையில் கீழ் சிம்பில் நாடு என்ற உள்நாட்டு பிரிவில் ஊர் அடங்கியிருந்தது. சங்க காலம் தொட்டே இக்கடற்கரைப் பட்டினத்தில் பெயர் தொண்டி என்றே இருந்துள்ளது. இடைக்காலத்தில் பெயர் மாற்றப்பட்டாலும் மறுபடியும் புராதான பெயரான தொண்டி இன்றுவரை இருந்து வருகிறது.
ஒருசமயம் சிவனும் பார்வதியும் பூலோக மக்களை பார்த்தவாறு வானில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தாராம். அதன் அழகில் மயங்கி கீழே இறங்கி அங்குள்ள சோலையில் சற்று நேரம் ஓய்வெடுத்து சென்ற அந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக பிற்காலத்தில் இந்த சிவாலயம் ஒன்று அமைத்து மக்கள் வழிபட்டு வந்ததாகவும் தலபுராண செய்தியாக சொல்லப்படுகிறது. கோயிலில் எங்கும் கல்வெட்டுகள் எதுவும் இல்லாத நிலையில் இதன் கட்டிடக் கலை அமைப்பை வைத்து பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது
நம்பிக்கைகள்:
வடக்குச் சுற்றில் அமைந்துள்ள இரட்டை விநாயகர் சன்னதி மிகவும் பிரபலம். திருமணத்தடை நீங்கவும் சந்தான பாக்கியம் கிட்டவும் வேண்டிவருவோர் மொட்டை விநாயகரிடம் கோரிக்கை வைத்து விட்டு வேண்டி சென்றதும் அடுத்த சில வாரங்களிலேயே அடியார்கள் நினைத்த காரியம் நிறைவேறி விடுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோயில் கிழக்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. பிரதான வாசல் தாண்டியதும் உள்சுற்று காணப்படுகிறது. கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பின் கற்றளியாக கட்டப்பட்டுள்ளது. முக மண்டபத்தின் வலதுபுறம் சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு பார்த்த வண்ணம் உள்ளது. இதற்கு எதிரே மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. பவுர்ணமி நாளில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மகா மண்டப வாசலில் அனுக்ஞை விநாயகரும் மகாமண்டபம் வடபுறம் ஆனந்தக் கூத்தன் நடராஜ தரிசனம் தருகின்றனர். இதன் எதிரே பின்புற வாசல் அமைந்துள்ளது. ஆருத்ரா தரிசன நாளில் நடராஜப் பெருமான் அபிஷேக ஆராதனைகள் கண்டு திருவீதி எழுதழல் வைபவம் நடைபெறுகிறது.
வாயிலில் ராகு கேது வினாயகர் இருக்க கருவறையில் மூலவராக சிதம்பரேஸ்வரர் எழுந்தருளி உள்ளார் அடியார்கள் உள்ளன்போடு அவன் தாள் வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைத்து விடுகிறதாம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளன. தெற்கு சித்தி விநாயகருக்கு குடைபிடித்து இருப்பது மாதிரி வன்னிமரம் வளர்ந்து நிற்கிறது. மேற்குச் சுற்றில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதியும், வடக்குச் சுற்றில் சண்டிகேசுவரர், நவகிரக சன்னதிகளும், தீர்த்தக்கிணறு, காலபைரவர், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் சன்னதிகளும் உள்ளன.
திருவிழாக்கள்:
பிரதோஷ வழிபாடும், பைரவருக்கு அஷ்டமி வழிபாடு நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடும் நடைபெறுகிறது. தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. சித்திரை தமிழ் வருடப்பிறப்பு, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம் தோறும் 108 சங்காபிஷேகம், கார்த்திகை சோமவார நாளில் திருவிளக்கு பூஜை, கார்த்திகை மகா தீபம், மார்கழி முப்பது நாள் திருப்பள்ளி எழுச்சி, தைப்பொங்கல், மகாசிவராத்திரி அன்று உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தொண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
இராமநாதபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை