Saturday Jan 18, 2025

தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோயில், பெரம்பலூர்

முகவரி

தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோயில், தேனூர், வழி எதுமலை, பெரம்பலூர் மாவட்டம் – 621114

இறைவன்

இறைவன்: நந்திகேஸ்வரர் இறைவி: மகாசம்பத் கெளரி

அறிமுகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் திருத்தலம் இருக்கிறது. திருச்சிராப்பள்ளி – துறையூர் நெடுஞ்சாலையில், மண்ணச்சநல்லூர் கூ.களத்தூர் வழியே செல்லும் வழித்தடத்தில், தேனூர் திருத்தலம் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் இருந்து 34 கி.மீ. தொலைவில் இதனை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து எதுமலை வழியாக துறையூர் செல்லும் சாலை வழியில் வடக்கே சுமார் 32 கி.மீ. தொலைவில் தேனூர் உள்ளது. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்தும் வடமேற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். ஆதியில் இத்தல சிவலிங்கத் திருமேனி, இங்குள்ள வாகை மரத்தடியில் இருந்தது. ஒரு முறை சாபம் பெற்ற காமதேனு, பூலோகம் வந்து இத்தல இறைவனிடம் விமோசனம் கேட்டு வழிபாடு செய்தது. தினமும் தன்னுடைய பாலை சொரிந்து வழிபட்டதால் இத்தலம் ‘காமதேனூர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி ‘தேனூர்’ என்றானதாக சொல்லப்படுகிறது. ‘தேனு’ என்பது பசுவை குறிக்கும் சொல் ஆகும். பசுக்கள் நிறைந்த தலமாக இருந்ததால் இது ‘தேனூர்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர இன்னொரு பெயர்க்காரணமும் இருக்கிறது. இத்தல சிவலிங்கத் திருமேனி இருந்த மரத்தின் மீது இருந்து தேன் வடிந்து சிவலிங்கத்தின் மீது பட்டதால், ‘தேனூர்’ பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

ஆலய கருவறையின் வலதுபுறச் சுவரில் கி.பி. 17-ம் நூற்றாண்டினைச் சேர்ந்த கல்வெட்டு காணப்படுகிறது. இதில் கோவிலுக்கு துறையூரைச் சார்ந்த அடியார் ஒருவர் அளித்த தானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தானத்தை நிறைவேற்றாவிட்டால், கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவம் வந்து சேரும் என அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இத்தலம் திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் வைப்புத் தலமாகப் போற்றப்படுகிறது. “தேனூரான் செங்கட்டான் குடியான் சிற்றம்பலத்தான், கானூரான், கழுமலத்தான் கணபதீச்சரத்தானே” என சம்பந்தரும், “மூவலூர் மேவினாய் நீயே, சிந்தையாய் தேனூராய் நீயே” என்று திருநாவுக்கரசரும் புகழ்ந்துரைத்துள்ளனர். இத்தலத்து இறைவன், இறைவி திருமேனிகள் பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆலய கருவறை முன் மண்டப வெளிச்சுவரில் பழமையான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை பழங்கால கல்வெட்டுகளை நினைவுபடுத்துவதால், இக்கோவில் மன்னர் காலத்தில் எழுப்பப்பட்டு இருப்பதை அறியமுடிகிறது. ஆய்வு செய்தால் இதன் தொன்மை மற்றும் புதிய வரலாற்றினையும் அறிய ஏதுவாக அமையும். எளிய வடிவில் இருந்த ஆலயம், துறையூர் ஜமீனால் விரிவு படுத்தி கட்டப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. இத்தலத்து இறைவனே, ஜமீன்தார் தம்பதியரின் கனவில் தோன்றி தனக்கு ஆலயம் எழுப்ப கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனை உறுதிசெய்யும் விதமாக மகாமண்டபத் தூண்கள் இரண்டில் வடக்கு நோக்கி வணங்கும் விதமாக ஜமீன்தார், அவர்தம் மனைவியின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் வீற்றிருக்கும் சுவாமியும், அம்பாளும் தங்களை வழிபடுபவர்களுக்கு தீராத வயிற்று வலி, குடல் நோய், சூலை நோய் நீக்கும் கண்கண்ட தெய்வங்களாக விளங்குகின்றனர். நோயுற்றவர்கள் தாங்கள் சாப்பிடும் மருந்துகளோடு, அன்னைக்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை சிறிதளவு நீரில் கலந்து, நம்பிக்கையோடு குடித்து வந்தால், அவர்களின் நோய் பூரணகுணமாகும் என்பது ஐதீகம். அது இந்தப் பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

இந்த ஆலயத்திற்கு கிழக்கு மற்றும் தெற்குத் திசையில் எளிய நுழைவு வாசல்கள் அமைந்துள்ளன. இவை சுவாமி, அம்பாள் சன்னிதிக்கு எதிரில் காட்சியளிக்கின்றன. கிழக்கில் பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் காட்சிதர, எளிய ராஜகோபுரம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும், அழகிய தூண்களைக் கொண்டு விளங்கும் மகாமண்டபம் இருக்கிறது. மகா மண்டபத்தின் விதானத்தில் சரபேஸ்வரர் புடைப்புச் சிற்பம் கண்களைக் கவரும் வகையில் வடிக்கப்பட்டிருக்கிறது. கருவறை முன்மண்டப முகப்பில் தேனூர் வரகவியின் பாடல்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அதற்குள் நுழைந்ததும் அம்மன் சன்னிதி தெற்கு முகமாய் காட்சிதர, கருவறை சுற்றில் ஐந்து அம்மன்களின் திருவுருவங்கள் கோஷ்ட தெய்வங்களாக அமைக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக கிழக்கு நோக்கிய நந்திகேஸ்வரர் சன்னிதி துவார பாலகர்களுடன் காணப் படுகிறது. கருவறைச்சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரது வடிவங்கள் இருக்கின்றன. நிருதி மூலையில் நிருதி கணபதி, மகான் குருமூர்த்தி ஜீவ சமாதி, கிருஷ்ணர், வள்ளி – தெய்வானை சமேத முருகப்பெருமான், பாதாள லிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர், தீர்த்தக்கிணறு, நடராஜர், நவக்கிரகங்கள், சந்திரன், சூரியன் என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன. ஆலய கருவறையில் நந்திகேஸ்வரர் எளிய வடிவில் கிழக்கு முகமாய் காட்சியளிக்கிறார். இறைவனின் வடிவம் சிறிதானாலும், அருள் ஆற்றல் மிகப்பெரியதாக உள்ளது. தன்னை வழிபடும் அடியாரின் பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டு, தன் பக்தரைக் கவுரவிக்கும் குணம் கொண்டவர் சிவபெருமான். அந்த வகையில் தன்னை வழிபட்டுப் பேறுபெற்ற நந்தியின் நினைவைப் போற்றும் விதமாக, இத்தல ஈசன் ‘நந்திகேஸ்வரர்’ என்ற திருப்பெயரோடு அருள் வழங்குகின்றார். இத்தலத்தில் சக்தி சொரூபமாக வீற்றிருக்கும் அன்னை, ‘மகா சம்பத்கவுரி’ என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் எளிய வடிவாகக் காட்சி தருகின்றாள். நான்கு கரங்கள் கொண்டிருக்கும் அன்னையானவள், மேல் இரு கரங்களில் மலர்களைத் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடும் காணப்படுகிறாள். நந்திகேஸ்வரர், மகா சம்பத்கவுரி எழிலான சரபேஸ்வரர் : இந்த ஆலயத்தின் மகா மண்டபத்தின் நடுப்பகுதி விதானத்தில் சிவபெருமான் மான், மழுவுடன் சரப பட்சியாக தோன்றி நரசிம்மரை அடக்கும் காட்சி, சரப பறவையை நரசிம்மரை வணங்கும் காட்சி ஆகிய படைப்புகள் உள்ளன. நட்சத்திர வடிவ விளிம்பும், அதனைச் சுற்றி சூரியன் – சந்திரன் மற்றும் தேவர்கள் வணங்கும் காட்சி தெரிகின்றது. இதன் இடதுபுறம் பிரம்மன் நான்கு தலைகளுடன் அட்சயமாலை மற்றும் கெண்டி போன்றவற்றை தன் கரங்களில் தாங்கிய கோலம் அமைந்துள்ளது. இந்த அழகிய புடைப்புச் சிற்பம் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மகான் குருமூர்த்தி ஜீவ சமாதி: பெரும்பாலான சிவாலயங்கள் மகான் ஒருவரின் ஜீவ சமாதியை கொண்டதாக விளங்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இத்தலத்திலும் சுவாமி கருவறையின் பின்புறம் மகான் குருமூர்த்தியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இதன் மீது அகண்ட தீபம் எந்நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது. இவரது ஜீவ சமாதிக்கு அருகில் திருவண்ணாமலை கோவிலில் உள்ளது போல, பாதாள லிங்கம் தரையின் கீழ் பகுதியில் இருக்கிறது. இதனுள் காசியில் இருந்து தருவிக்கப்பட்ட சிவலிங்கத் திருமேனி உள்ளது. இந்த பாதாள லிங்க அறையில் அமர்ந்து தியானம் செய்வோரின் நல்ல எண்ணங்கள் ஈடேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தேனூர் வரகவி : அறுபத்துமூவர் வரலாற்றைக் கூறுவது சேக்கிழாரின் பெரிய புராணம். அதுபோல முருகப்பெருமானின் 63 அடியார்களை வரிசைப்படுத்தி ‘சேய்தொண்டர் புராணம்’ என்ற நூலை எழுதி இயற்றியவர் தான் தேனூர் வரகவி சொக்கலிங்கனார். இவரின் சொந்த ஊர் தேனூர். பொருளாதாரத்திற்காக மலேசியாவுக்குச் சென்ற இவரை இறைவன் ஆட்கொள்ள நினைந்து திருநாவுக்கரசரைப் போல, சூலை நோயைத் தந்தார். பல்வேறு மருத்துவம் பார்த்தும் குணம் பெறாத நிலையில், தேனூரில் வாழ்ந்த இவரின் பெரியப்பா சீயாளிப்பிள்ளை, இத் தலத்து அம்பிகைக்கு அபிஷேக ஆராதனை செய்து, சந்தனக் காப்பிட்டு வணங்கினார். அந்தப் பிரசாதத்தை மலேசியாவிற்கு அனுப்பினார். அதனை நீரில் கரைத்து உட்கொண்ட சொக்கலிங்கனாருக்கு, சூலை நோய் பூரண குணமானது. அதோடு அந்தப் பிரசாதம், அவருக்கு ஞானத்தையும், தெய்வ கடாட்சத்தையும் அருளியது. அவருக்கு ஏற்பட்ட ஞானத்தால் உருவானதே ‘சேய் தொண்டர் புராணம்.’ இவர் எண்ணற்ற பாடல்களும் பாடியுள்ளார்.

திருவிழாக்கள்

சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மகம் மாதம் திருவிழா நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top