திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில், விழுப்புரம்
முகவரி
அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில், திருவெண்ணெய்நல்லூர்-607 203. விழுப்புரம் மாவட்டம். போன்: +91-93456 60711
இறைவன்
இறைவன்: கிருபாபுரீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை
அறிமுகம்
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் எனும் ஊரில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். விழுப்புரத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்லும் இருப்புப்பாதையில், திருவெண்ணெய்நல்லூர் ரோடு தொடர் வண்டி நிலையத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயிலுள்ள மூலவர் கிருபாபுரீசுவரர் என்றும் தடுத்தாட்கொண்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை எனப்படுகிறார். இங்குள்ள இறைவர், முதலாம் இராசராச கல்வெட்டில், திருவெண்ணெய்நல்லூர்த் திருவருட்டுறை ஆள்வார் என்றும், இரண்டாம் இராசாதிராச முதலானோர் கல்வெட்டுக்களில் திருவெண்ணெய் நல்லூர் ஆட்கொண்டதேவர் என்றும், தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் அழைக்கப் பெறுகிறார்.
புராண முக்கியத்துவம்
தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி சிவபெருமானைக் கொல்ல ஏவினர்.அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள்.இறைவன் அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருட்டுறை (அருள் துறை) எனப்பெயர் பெற்றது.முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர் எனப்பெயர் பெற்றார். மறைகள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில் இறைவன் தீயுருவாகத் தோன்றினான் அவை கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினான்.
நம்பிக்கைகள்
இங்கு வந்து வணங்கினால் மனதுக்கு நிம்மதியும் , வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும். பொல்லாப்பிள்ளையார் : இத்தலத்தில் அருள்பாலிக்கும் பொல்லாப்பிள்ளையார் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர் மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஊமையாய் இருப்பவர்கள் வழிபட்டால் பேச்சு வரும் அம்பிகை சன்னதியில் நால்வகை எண்ணெய் நெய், இலுப்பு, தேங்காய், ஆமணக்கு நல்லெண்ணெய் ஆகியவற்றை கலக்கி ஏற்றினால் திருமண வரம், குழந்தை வரம், உத்தியோக வரம், தொழில் விருத்தி ஆகியவை கைகூடும்.
சிறப்பு அம்சங்கள்
திருமண நாளன்று திருநாவலூரில் திருமணக்கோலத்திலிருந்த சுந்தரரை வயதான வேடம் கொண்டு ஈசன் தடுத்தாட் கொண்டார். நீ எனக்கு அடிமை என்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட அதிலுள்ள கையெழுத்து உண்மையானதுதான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள். கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை பித்தன் கிறுக்கன் என்றெல்லாம் திட்டினார்.அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன்தான் என்பதை அறிந்த சுந்தரர் ஈசனை வணங்கி நிற்க, என்னப் பற்றி பாடு என்று ஈசுவரன் கேட்க எப்படிப் பாடுவது என்று சுந்தரர் கேட்க என்னை பித்தா என்று திட்டினாயே அதையே பாடு என்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போதுதான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானே என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து ஈசன் எழுந்தருளியிருக்கும் தலம் தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறம் வடக்கு பக்கத்தில் சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.பரமன் நின்று சாய்ந்திருந்த தூணில் இன்றும் வெதுவெதுப்பாக உஷ்ணம் உள்ளது. மேலும் பரமன் அடி வைத்த இம்மன்றத்திலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்துச் சென்று பூஜையில் வைத்து பூஜிப்பவர்களும் உண்டு அர்ச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது.தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் இங்கு உள்ளது.மகாவிஷ்ணு பூஜித்த சங்கரலிங்கம் இங்கு உள்ளது. இங்குள்ள சண்முகநாதர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். முருகன் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம். மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்க நிதி, பதுமநிதி , ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இங்கு இருப்பது சிறப்பு. பாண்டவரில் அர்ச்சுணன் தன்மூத்தோனாகிய தருமனும் பாஞ்சாலியும் தனித்திருந்த பாவத்தை இங்குள்ள இறைவனை வழிபட்டப் போக்கிக் கொண்டான். மேலும் இறைவனை வேண்டி மகப்பேறு அடையவும் வரத்தை பெற்றான். கருவுற்றப் பசுவை வேள்வி செய்த பாவத்தை வித கோத்திரர் என்னும் அந்தணர் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி பாடிப்பணிந்து போக்கிக் கொண்டார். சடையப்ப வள்ளல் இவ்வூரில் வாழ்ந்திருக்கிறார் என்ற சிறப்பும் முக்கியமானது.
திருவிழாக்கள்
ஆடி சுவாதி சுந்தரருக்கு 2 நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பங்குனி உத்திரம் கொடி தேரோட்டம் 10 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனம், ஆவணி மூலம் புட்டு உற்சவம், கந்த சஷ்டி ஆகிய நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவெண்ணெய்நல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவெண்ணெய்நல்லூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை