திருவில்வமலா வில்வத்ரிநாதர் திருக்கோயில், கேரளா
முகவரி
திருவில்வமலா வில்வத்ரிநாதர் திருக்கோயில், திருவில்வமலா, திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம் – 680588.
இறைவன்
இறைவன்: இராமர் மற்றும் லக்ஷ்மணன் இறைவி: லட்சுமிதேவி, பூமாதேவி
அறிமுகம்
வில்வத்ரிநாதர் கோயில் என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலையில் அமைந்துள்ள கோயிலாகும். விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் மற்றும் அவரது சகோதரர் லக்ஷ்மணன் இந்த கோவிலின் முக்கிய தெய்வங்கள். கேரளாவில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. மேலும் லக்ஷ்மணன் வீற்றிருக்கும் இந்தியாவிலேயே மிகவும் அரிதான கோவில்களில் ஒன்றாகும். மகாவிஷ்ணுவின் அம்சமான ராமர் மற்றும் லட்சுமணர் சன்னிதிகள் எதிரெதிரே அமைந்துள்ளன. ராமரை இங்கு ‘வில்வாத்ரி நாதர்’ என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். பீஜ க்ஷேத்திரங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த க்ஷேத்திரம் என்று புராணத்தில் திருவில்வமலையைக் குறிப்பிட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவில்வமலை கிராமத்தின் நடுவில், கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் மலையின் உச்சியில் இக்கோயில் அமைந்துள்ளது. கேரளாவின் இரண்டாவது பெரிய நதியான பாரதப்புழா, கோயிலில் இருந்து 3 கி.மீ தொலைவில் வடக்குப் பகுதி வழியாக பாய்கிறது, மேலும் கோயில் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், கோயிலில் இருந்து நதியை தெளிவாகக் காணலாம்.
புராண முக்கியத்துவம்
’ஸ்ரீ வில்வாத்ரி மகாத்மியம்’ என்று சமஸ்கிருதத்தில் 18 அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ள புராணத்தில், பரமசிவனும் பார்வதியும் நடத்திய உரையாடல் மூலமாகத் திருவில்வமலைத் தல வரலாறு விளக்கப்பட்டிருக்கிறது. இருபத்தியொரு முறை பல்வேறு க்ஷத்திரியர்களை எதிர்த்துக் கொன்ற பரசுராமர், அந்த மகா பாவத்திலிருந்து விமோசனம் பெற வழி தேடி, சிவனை நோக்கித் தவம் இருந்தார். அவருக்கு சிவபெருமான், தான் கைலாயத்தில் நித்திய பூஜை நடத்தி வந்த விஷ்ணுவின் சுயம்பு விக்கிரகத்தைக் கொடுத்து, ஆசீர்வதித்தார். அதனைப் பிரதிஷ்டை செய்ய திருவில்வமலையே சிறந்த இடம் என்று பரசுராமர் தேர்வு செய்தார். அங்கு அவர் நிறுவியதுதான், கிழக்கில் கோயில் கொண்டுள்ள விஷ்ணுவின் அம்சமான லட்சுமணர் விக்கிரகம். பிறகு, தன் பித்ருக்களை வரவழைத்து, தான் பிரதிஷ்டை செய்த மகாவிஷ்ணுவைத் தரிசிக்கச் செய்ததில், அவர்கள் பாவங்கள் நீங்கின; முக்தி பெற்றார்கள்; பரசுராமரின் பாவங்களும் நீங்கின. சுமார் ஐந்து அடி உயரத்தில், நிரந்தர தங்கக் கவசம் அணிவித்து இந்த சுயம்பு விக்கிரகம் தற்போது திருவில்வமலை ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிவபெருமானால் பூஜை செய்யப்பட்ட விக்கிரகம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்றும், அதன் மகிமை அளவிடற்கரியது என்றும் பல இடங்களுக்குச் செய்தி பரவியது. அதனைக் கேள்விப்பட்ட பஞ்சபாண்டவர்கள் பித்ரு ப்ரீதிக்காக வில்வ மலைக்கு விஜயம் செய்தார்கள். பாரதப் புழை என்ற நதிக்கரையில் பகவான் கிருஷ்ணரின் முன்னிலையில் பித்ரு தர்ப்பணம் நிகழ்த்தினார்கள். பின் வில்வாத்ரிநாதர் ஆலயம் வந்து அவரை வணங்கிப் பணிந்து, திரும்பிப் போனார்கள். காஷ்யப மகரிஷியின் மகன் ஆமலகன் (நெல்லிக்கனியை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தவன்.) மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும் தவம் இருந்தான். இதனால் அசுரர்கள் தங்களுக்கு அழிவு நேரும் என்று அஞ்சினர். எனவே, ஆமலகனுடைய தவத்துக்குத் தொல்லை தர ஆரம்பித்தனர். தவத்தில் இருந்த ஆமலகன், தன் கண்களைத் திறந்து பார்த்தான். அவனுடைய விழிகளில் இருந்து புறப்பட்ட தீப்பொறி பாய்ந்து அசுரர்கள் சாம்பல் ஆனார்கள். அந்தச் சாம்பல் ஒரு பாறையாக இறுகியது. அதுவே, இன்று ‘ராட்சஸப் பாறை’ என்று அழைக்கப்படுகின்றது. ஆமலகன் தொடர்ந்து தவம் செய்வதில் ஈடுபட்டான். மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து அவன்முன் தோன்றி, ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார். அதற்கு ஆமலகன், ‘‘எனக்குத் தனியாக வரம் ஏதும் வேண்டியதில்லை. பிரபு! உலகில் துயரப் படுபவர்களின் கஷ்டங்கள் நீங்க, நீங்கள் எப்போதும் இங்கே இருக்க வேண்டும். இந்த வரத்தை அருளினால் போதும்!’’என்று கோரினான். அதை மகாவிஷ்ணு ஏற்றார்; திருவில்வ மலையில் இறைத் திருவுருவாகக் கோயில் கொண்டார். அனந்த நாகத்தின் கீழே லட்சுமிதேவி, பூமாதேவி சமேதராக, மகாவிஷ்ணு கிழக்கு திசையை நோக்கியபடி எழுந்தருளியிருக்கிறார். அசுர சக்திகள் ஆலயத்தின் அருகே வர முடியாவிடினும், தொலைவிலிருந்தே இக்கோயிலை இரண்டு முறை தீக்கிரையாக்கியதைத் தொடர்ந்து, ராட்சத சத்துருவாகிய அனுமனை இந்த ஆலயக் காவல் பொறுப்பை ஏற்குமாறு பிரதிஷ்டை செய்தனர். வீர அனுமர் ஆலயத்தின் தென்கிழக்கு திசையில் கோயில் கொண்ட பிறகு, எந்த அனர்த்தங்களும் ஆலயத்துக்கு உண்டாகவில்லை!
நம்பிக்கைகள்
அகலமான பிராகாரங்களும் நீண்ட நடைகளுமாக அற்புதமாகக் காட்சியளிக்கிறது இக்கோயில். நுழைந்ததுமே உயரமான ஆலயத்துக்குச் செல்ல, படிக்கட்டுகள்; துவக்கத்தில் வலப்புறம் ஒரு மரத்தின் அடியில் ஆண்களும் பெண்களுமாய் மரத்தைச் சுற்றியுள்ள மேடையில் கற்களை சிரத்தையுடன் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ‘’மனதில் ஏதாவது வேண்டுதலை நினைத்துக்கொண்டு ஐந்து, ஏழு, ஒன்பது என்று கற்களை அடுக்க வேண்டும். கூடவே வில்வாத்ரி நாதரையும் மனதில் வழிபட்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!’’ மகாவிஷ்ணுவின் அம்சமான ராமச்சந்திர சுவாமியும், லட்சுமண சுவாமியும் இங்கு மூலவர்கள். உப சுவாமிகளாக, மகா கணபதி, வீர ஹனுமான், ஐயப்பன், சிவபெருமான், பார்வதி ஆகியோர் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துக்கு அரை கி.மீ. தொலைவில் உள்ளது, பாரதப் புழை என்கிற நதி; இதைக் ’கேரள கங்கை’ என்று அழைக்கப்படுகிறது. தங்கள் முன்னோருக்காக தர்ப்பணம் முதலான சடங்குகள் இங்கு செய்யப்படுகிறது. சடங்குகள் முடிஞ்சதும் திருவில்வமலை ஆலயத்துக்கு வந்து இரண்டு மகாவிஷ்ணுக்களையும் தரிசித்தால், அவர்களின் பாவங்கள் அகலுவதோடு, எல்லா வளமும் அவங்களை வந்து சேரும் என்பது பக்தர்களின் நெடுங்காலமான நம்பிக்கையாக உள்ள விஷயம்!
சிறப்பு அம்சங்கள்
திருவில்வமலையில் உள்ள மூலவருக்குக் காலடியில் ஒரு துவாரம் இருந்தது. அதில் தீர்த்தம் நிரம்பி வழியுமாம். ஒரு முறை வாழைப்பழம் ஒன்று அந்தத் துவாரத்தில் விழுந்து, அதை எடுக்க ஒரு நீண்ட கம்பியால் முயன்றபோது, அந்தக் கம்பியும் உள்ளே போய்விட்டது. சுவாமியின் காலடிக்குக் கீழே ஒரு சுரங்கம் இருப்பது அப்போதுதான் தெரியவந்தது. பின்னர் ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்ட சமயம், சுரங்கத் துவாரத்தில் இறங்கி, படிக்கட்டுகளில் சென்று பார்த்திருக்கிறார்கள். ரொம்பதூரம் செல்ல முடியாதபடி, இருட்டாக இருந்ததால் அதை அப்படியே கற்களால் மூடி வைத்து விட்டார்களாம். அந்தக் குகையில், தங்கத்தினால் ஆன வில்வ மரம் ஒன்று இருப்பதான நம்பிக்கை பக்தர்களிடையே ரொம்ப காலமாக நிலவி வருகிறது! இதனால்தான் இந்தக் கோயில் உள்ள குன்றுக்கு ‘திருவில்வமலை’ என்று பெயர் வந்ததாகவும் மக்கள் கூறுகிறார்கள்! 1. ஸ்ரீ ராமர் மற்றும் லக்ஷ்மணருக்கு அமைந்த திருக்கோயில். இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற பிறகு, ஸ்ரீ ராமரும், அவரது இளவல் லக்ஷ்மணரும் இவ்விடம் வந்ததால், திருக்கோயில் வளாகத்தில் சீதையை காண முடியாது. 2. “சீதையைக் காணவில்லை” என ஸ்ரீ ராமர், அனுமன் உட்பட வேறு பல வானர வீரர்களிடம் உரைத்த திருத்தலம். 3. மூலவரான ஸ்ரீ ராமர் சுயம்பு மூர்த்தி ஆவார். 4. அரிதாக லக்ஷ்மணருக்கு அமைந்த திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. 5. கடல்மட்டத்திலிருந்து சுமார் 100 அடி உயரமுள்ள குன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்
ராமநவமி, நிறமாலை என்ற திருவிழாக்கள் ரொம்ப சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகின்றன. ஏகாதசி திருவிழா இங்கு விசேஷம். புகழ்பெற்ற சுவாமியான குருவாயூரப்பன், ஏகாதசியன்னைக்கு குருவாயூரிலிருந்து புறப்பட்டு திருவில்வமலை வந்து, வில்வாத்ரிநாதரைத் தரிசிச்சு, பின் திரும்பிச் செல்வதாக ஐதீகம்!
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவில்வமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
லக்கிடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சூர்