Saturday Jan 18, 2025

திருவிசநல்லூர் சிவயோகிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்- 612 105.தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-200 0679, 94447 47142

இறைவன்

இறைவன்: சிவயோகிநாதர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி, சாந்த நாயகி

அறிமுகம்

யோகநந்தீசுவரர் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் யோகநந்தீஸ்வரர், தாயார் சவுந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 43வது சிவத்தலமாகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மகான் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள், உய்யவந்த தேவநாயனார் ஆகியோர் அவதரித்த தலம்.

புராண முக்கியத்துவம்

படைப்புக்கடவுளான பிரம்மதேவர் விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப்பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை ஏழு ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இன்றும் இருக்கின்றன. ஒரு காலத்தில், ஏராளமான பாவம் செய்த ஒருவன், தன் கடைசி காலத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம்,””அழைப்பது யார்?”என கேட்க, நந்தி திரும்பி பார்த்தது. (இத்தலத்தில் நந்திசிலை திரும்பிப்பார்த்த நிலையிலேயே உள்ளது) அவன் அப்படி அழைத்தது “பிரதோஷ தினம்’ ஆகும். நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது. அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனைத் தடுத்தார். எமனுக்கும் நந்திக்கும் சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடிமரத்தின் உள்ளே நந்தி இருக்கும். ஆனால், இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

நம்பிக்கைகள்

இங்கு நந்தி ரிஷபவாகனமாக காத்து நிற்பதால், ரிஷப ராசிக்காரரர்களின் (கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரம்) பரிகார தலமாக விளங்குகிறது. இவரை பிரதோஷம், சிவராத்திரி, சோமவார நாட்களில் வழிபடுவது சிறப்பு.

சிறப்பு அம்சங்கள்

இத்தலம் நான்கு யுகம் கண்டு தலமாக புராணம் கூறுகிறது. கிருதயுகத்தில் புராதனேஸ்வரர், திரேதாயுகத்தில் வில்வாரண்யேஸ்வரர், துவாபரயுகத்தில் யோகநந்தீஸ்வரர், கலியுகத்தில் சிவயோகிநாதர் என இறைவன் வணங்கப்படுகிறார். திருவுந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலைப்பாடிய உய்யவந்த தேவநாயனார் இத்தலத்தில் அவதரித்தவர். சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தலத்தில் பூஜை செய்வதாக ஐதீகம் உள்ளது. சில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும், இங்கே லட்சுமியுடன் சேர்ந்து லட்சுமி நாரயணனாக அருள்பாலிக்கிறார். ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும், அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் தல புராணம் கூறுகிறது. சதுர்கால பைரவர்: இங்குள்ள பைரவர் சதுர்கால பைரவர் என அழைக்கப்படுகிறார். யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள்பாலிக்கின்றனர். ஞானகால பைரவர் அருகில் தெட்சிணாமூர்த்தியும், சொர்ணாகர்ஷன பைரவர் அருகில் மகாலட்சுமியும், உன்மத்த பைரவர் அருகில் பாலசனியும் உள்ளனர். யோக பைரவர் அருகில் உத்திரகைலாய லிங்கம் இருக்கிறது. இவர்களை அஷ்டமி திதியில் வழிபடுவது சிறப்பு. இங்கேயும் ஒரு கங்கை: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர அய்யாவாள் என்பவர் தன் வீட்டில் திவசம் கொடுத்து கொண்டிருக்கும் போது, பசியால் ஒருவன் யாசகம் கேட்டான். திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்க கூடாது என்பது மரபு. இருந்தும் பசியுடன் வந்த அவனுக்கு இவர் உணவளித்தார். இதனால் அவ்வூர் மக்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். இதற்கான பரிகாரம் கேட்க, கங்கையில் குளிக்க வேண்டும் என்றார்கள். இவர் இத்தல இறைவனை வேண்ட, அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கைநீர் பெருக்கெடுத்தது.

திருவிழாக்கள்

சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளி பூஜை சிறப்பானது. ஐப்பசி கடைசி நாள் பஞ்சமூர்த்தி புறப்பாடு. காவிரியில் தீர்த்தவாரி. மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம். திருக்கார்த்திகை. கார்த்திகை சோமவாரம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவிசலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top