Wednesday Dec 18, 2024

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நகாப்பட்டினம்

முகவரி

அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் – 609 113. நகாப்பட்டினம் மாவட்டம். போன்: +91-94865 24626

இறைவன்

இறைவன்: முல்லைவனநாதர் இறைவி: அணிகொண்ட கோதையம்மை

அறிமுகம்

திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் தென்திருமுல்லைவாயில் எனவும் அழைக்கப்பெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 7வது தலம் ஆகும். சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.

புராண முக்கியத்துவம்

கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீரவேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு ரத்தம் பெருகியது.அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய வளவன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார்.எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.

நம்பிக்கைகள்

சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

பொதுவாக எல்லா பெரிய சிவத்தலங்களிலும் பள்ளியறை உண்டு. தினமும் அதிகாலை வேளையிலும், இரவு வேளையிலும் பள்ளியறை பூஜை நடப்பது வழக்கம். ஆனால், பள்ளியறையே இல்லாத சிவத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருமுல்லை வாசல் ஆகும். திருமுல்லை வாசல் என்ற இத்தலத்தின் இறைவன் முல்லைவனநாதர். மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பாளின் பெயர் அணிகொண்ட கோதை என்ற சத்தியானந்த சவுந்தரி. பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். எனவே இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது. சுசாவி என்பவரின் மூத்தபிள்ளை வாமதேவர். தந்தை இறந்ததும் அவரது எலும்பை புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றிலும் போட்டார். அப்படி போட்டு வரும் போது இத்தலத்து தீர்த்தத்தில் போடும்போது அந்த எலும்பு, ரத்தினக்கல்லாக மாறியது. உடனே தந்தைக்கு இங்கு பிதுர் கடனாற்றினார். அத்துடன் தந்தைக்கு முக்தியளித்த தனயரானார். இத்தலத்தின் வாயு திசையில் உள்ள கிணற்றில் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். இத்தலம் 1300 வருடங்களுக்கு முன் கிள்ளி வளவனால் கட்டப்பட்டது. இத்தலத்தைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடியுள்ளார்.

திருவிழாக்கள்

மாசி மகத்தன்று தீர்த்தவாரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top