Thursday Dec 26, 2024

திருமீயச்சூர் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்,(லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர் – 609 405, திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-239 170, 94448 36526

இறைவன்

இறைவன்: சகலபுவனேஸ்வரர், இறைவி: மேகலாம்பிகை, செளந்தரநாயகி

அறிமுகம்

திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.ஸ்ரீ மின்னும் மேகலை சமேத ஸ்ரீ சகல புவனேஸ்வரர் இளங்கோயில், திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயிலின் உள்ளே அமைந்து உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 57ஆவது சிவத்தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 120 வது தேவாரத்தலமாகும். தல விருட்சம்: மந்தாரை, வில்வம் தீர்த்தம்: சூரியபுஷ்கரிணி

புராண முக்கியத்துவம்

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவர்கள் தங்களை காக்க வேண்டி அன்னை பராசக்தியை வேண்டினார்கள். வேண்டுதலை ஏற்ற பராசக்தி, அசுரனை வதம் செய்வதற்காக ஒரு வேள்வி குண்டத்திலிருந்து ஸ்ரீசக்ர ரதத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அசுரனுடன் போர் செய்து அவனை அழித்தாள். உக்ரமாக இருந்த அவளைச் சமாதானம் செய்யும் பொறுப்பு சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. உலக உயிர்களின் நன்மை கருதி அவளை கோபம் தணியும்படியும், இதற்காக “மனோன்மணி’ என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யுமாறும் சிவன் பணித்தார்.அம்பிகையும் இத்தலம் வந்து தவம் செய்து சாந்தமானாள். தன் முகத்திலிருந்து, “வசின்யாதி வாக் தேவதைகள்’ என்பவர்களை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே “ஸ்ரீ மாத்ரே’ என துவங்கும் “லலிதா சகஸ்ரநாமம்’ ஆயிற்று.

நம்பிக்கைகள்

இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர். பக்தர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் லலிதாம்பிகையிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் லலிதாம்பிகைக்கு கொலுசு காணிக்கை செலுத்துகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

கோயிலின் ராஜ கோபுரம் ஐந்து நிலை களுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலை களுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள் பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். சேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 120 வது தேவாரத்தலம் ஆகும். இங்கு மூலவர் சகல புவனேஸ்வரர் சுயம்புலிங்கமாக உள்ளார். இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். இத்தலத்தில் தான் கருடன், அருணன்(சூரியனின் தேரோட்டி), வாலி, சுக்ரீவன், எமன், சனீஸ்வரன் ஆகியோர் பிறந்துள்ளனர். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. ஒரு காலத்தில் சாபத்தால் பீடிக்கப்பட்டிருந்த சூரியன், இங்கு வந்து வழிபட்டு, தனது கருமை நீங்கி, செவ்வொளி பெற்று இன்புற்றான். இது காளிதேவி பூஜித்த தலம். அருணனின் கதை: சூரியனின் தேரோட்டி யார் என்றால் “அருணன்’ என்பீர்கள். இவரது கதையை மியச்சூரில் தான் கேட்க முடியும். காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழி பட்டனர். அவர்களுக்கு ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்தது. அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது. கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள். சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் “அருணோதயம்’ என வழங்குவர் என்றும் அருள் செய்தார். அருணன் சிவபக்தனாக திகழ்ந்தான். சிவதரிசனம் வேண்டி தவமிருந்தான். இதையறிந்த சூரியன் உடலில் குறைபாடுள்ள நீ எப்படி கைலாயம் செல்ல முடியும் என கேலி செய்தான். இருந்தாலும் விடாமுயற்சியால் சிவனை குறித்து தவம் செய்து, சிவனின் தரிசனத்தைப் பெற்றான் அருணன். மேலும் அவனைக் கேலி செய்த சூரியனை ஒளி யிழக்கும்படி சபித்து விட்டார் சிவன். பதறிப்போன சூரியன், பார்வதி பரமேஸ்வரனை யானையில் அமர வைத்து வழிபாடு செய்து, மீண்டும் ஒளி பெற்றான். இந்த சிவனே இங்கு “மேகநாதன்’ என்ற பெயரில் அருளுகிறார். சுவாமியின் கருவறை விமானம் யானையின் பின் பக்கமான கஜப்பிருஷ்ட வடிவில் உள்ளது. இந்த விமானத்தின் மேல் மூன்று கலசங்கள் உள்ளன. சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்டு வந்ததின் அடிப்டையில் இத்தலம் “மீயச்சூர்’ என அழைக்கப்படுகிறது. ஸ்ரீசக்ர நாயகி: அம்மன் லலிதாம்பிகை. இவளுக்கு சவுந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. இரண்டு லிங்கம் : இக்கோயிலில் இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. இங்கே லிங்கவடிவில் சிவன் காட்சி தருகிறார். ராஜ கோபுரத்தின் நேர் உள்ள சன்னதியில் உள்ள சிவனை திருஞான சம்பந்தரும், வடக்கு பிரகாரத்தில் உள்ள இளங்கோவில் சிவனை அப்பரும் பாடியுள்ளனர். அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் தலம், தேவாரப் பாடல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க அம்சம். பிரண்டை சாத நைவேத்தியம். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கடலில் சங்கு தோன்றுவதால் அதற்கு ஆயுளை காக்கும் தெய்வீக சக்தி உண்டு என்பார்கள். சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், இத்தல இறைவனை நீண்ட ஆயுளைத்தரக்கூடிய 1008 சங்குகளால் அபிஷேகம் செய்து, எமலோகத்தின் தல விருட்சமும் சக்தி வாய்ந்ததுமான பிரண்டை என்னும் தாவரம்(கொடி வகையைச் சார்ந்தது) கலந்த அன்னத்தை மேகநாத சுவாமிக்கு நைவேத்யம் செய்து வழிபட்டான். பிரகாரத்தில் இரு விமானங்களுக்கு மத்தியில் நின்று பார்த்தால் பிரம்மா, லிங்கோத்பவர் (சிவன்), விஷ்ணு ஆகிய மும்மூர்த்தி சன்னதிகளை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரர் நான்கு முகங்களுடன் அருள்பாலிக்கிறார். க்ஷேத்திர புராணேஸ்வரர் சிற்பம் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள அம்மனின் முகத்தை வலதுபுறமிருந்து பார்த்தால் கோபமாக இருப்பது போலவும், இடதுபுறமிருந்து பார்த்தால் சாந்தமாக இருப்பதை போலவும் தெரியும்.

திருவிழாக்கள்

தை மாத ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்குரிய, அம்பிகைக்குரிய அனைத்து வருடாந்திர விழாக்களும் நடக்கும்.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமீயச்சூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top