திருமாலழகி தயார் சமேத ஶ்ரீ தாமோதர பெருமாள் கோவில்), காஞ்சிபுரம்
முகவரி
அருள்மிகு தாமோதரப் பெருமாள் திருக்கோயில், தாமல், காஞ்சிபுரம் மாவட்டம் – 631551. Mobile: +919629406140 , +919944812697
இறைவன்
இறைவன்: தாமோதரப் பெருமாள் இறைவி: திருமாலழகி
அறிமுகம்
சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் (காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. பாலுசெட்டி சத்திரத்திலிருந்து (திருப்புட்குழி 3 கி.மீ) உள்ளது ‘தாமல்’ என்ற அழகான செழிப்பான கிராமம். இவ்வூரிலுள்ள திருமாலழகி தாமோதரப் பெருமாள் கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். திருமாலின் பன்னிரு நாமங்களில் நாராயணன் கோயில்கள் அமைந்துள்ளதை அறிந்திருப்பிர். யசோதையால் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டவன் என்ற பொருளில் தாமோதரன் என்ற பெயர் கண்ணனுக்கு ஏற்பட்டது. மகரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க தாமல் திருத்தலத்தில் தாமோதரனாகக் காட்சி தருகின்றார். பழைமைக்குச் சான்றாக தாமல் பெருமானின் திருவயிற்றில் கயிறு பதிந்த தழும்பு கொண்ட அரிய அமைப்பாக உள்ளது. வேறு எங்குமில்லாமல் ‘தாமோதரன்’ என்ற பெயருடன் இங்கு மட்டும்தான் பெருமாள் காட்சியளிப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
புராண முக்கியத்துவம்
வெண்ணெய் திருடும் கோபாலனாக இருந்த குட்டிக் கண்ணன் மீது அக்கம் பக்கத்தவர்கள் குறை சொல்லிக் கொண்டே இருந்தார்களாம். பார்த்தாள் யசோதை. கயிற்றை எடுத்து கண்ணனைக் கட்ட முயன்றாளாம். அன்புக்குக் கட்டுப்பட்டவன் கயிற்றுக்காக கட்டுப்படுவான். மனம் நெகிழ்ந்த யசோதை மாலவனையே நினைத்து ஒருவாறு உரலிலே கட்டிப்போட்டு விட்டாள். அப்போதும் மாயக் கண்ணனின் விளையாட்டிற்கு யார்தான் கட்டுப்பட முடியும்? உரலுடன் இரண்டு மரங்களுக்கு இடையே புகுந்து இரு தேவர்களுக்கு சாப விமோசனம் அளித்தருளினாள். ஈரேழு பதினான்கு உலகங்களும் வியந்தன. கண்ணனின் வயிற்றில் கயிறு பதிந்த வடு ஏற்பட்டது. அப்போதிலிருந்து கண்ணனுக்கு ‘தாமோதரன்’ என்ற திருப்பெயரும், புகழும் ஏற்பட்டது. ‘தாம்’ என்றால் ‘கயிறு’ அல்லது ‘தாம்பு’ என்று பொருள். உதரன் என்றால் ‘வயிறு’ என்று பொருள். அதாவது ‘கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை’ உடையவன் என்று அர்த்தம். அதனாலேயே தாமோதரன் என்கிற பெயர் வந்தது. கண்ணனின் இந்த லீலையில் மனதைப் பறிகொடுத்த மகரிஷிகள் இப்பூவுலகில் அதே திருப்பெயருடன் எழுந்தருளி மக்களை ரட்சிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தனர். அவர்களின் பிரார்த்தனையை ஏற்ற பகவான், மகாலட்சுமியுடன் ‘தாமல்’ என்ற திருத்தலத்தில் எழுந்தருளினான். யசோதையின் அன்பிற்குக் கட்டுப்பட்ட கண்ணன், மகரிஷிகளின் பிரார்த்தனைக்கும் கட்டுப்பட்டான்.
நம்பிக்கைகள்
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தாமோதரப் பெருமாளுக்கு கொலுசு அணிவிப்பதாக வேண்டிக்கொண்டால் கண்ணனின் கருணைப் பார்வை பிறக்கும். பிரார்த்தனை நிறைவேறியதும் கொலுசு வாங்கி சாத்தலாம்.
சிறப்பு அம்சங்கள்
தாமோதரப் பெருமாள் மூலவர் மற்றும் உத்ஸவர் உபய நாச்சியார்களோடு காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல், பெருமாள் நெற்றியிலே ‘கஸ்தூரி திலகத்துடன்’ காட்சி தருவது இத்தலத்தின் தொன்மையான வழிமுறைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. ‘கஸ்தூரி திலகத்துடன்’ , ‘காட்சி தரும் பாண்டுரங்க விட்டலனையும் ஞாபகப்படுத்துகிறான் எனலாம். பொதுவாக வைணவத்தில் எம்பெருமாள்கள் சந்நதியில் திருமால் நெற்றியில் திருமண், ஸ்ரீசூர்ணத்துடன் தானே காட்சியளிப்பான். இங்கு மட்டும் ஏன் ‘கஸ்தூரி திலகத்துடன்’ காட்சி தருகிறான் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படுகிறது. அதற்கு விடையளிக்கிறது இக்கோயிலின் ஸ்தல புராணம். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயில் மத்வ ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்களால் ஆராதனை செய்யப்பட்டு வந்ததாகவும், காலப்போக்கில் வைணவர்களுக்கு தானமாக வந்ததால் ‘தானமல்லபுரம்’ என்று இருந்து பின் மருவி ‘தாமல்’ என்று அழைக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. தனிக்கோயில் நாச்சியாரிடமும் ஒரு தனிச்சிறப்பு. பெயரே தூய தமிழில் ‘ ஸ்ரீதிருமாலழகி’ என்ற திருநாமத்துடன், அழகுடன் திவ்ய தரிசனம் தருகிறாள். இத்தலத்து நாயகன் ‘கேட்டது கொடுக்கும்’ தாமோதரனாகவும், நாயகி ‘கேட்டதும் கொடுக்கும் திருமாலழகியாகவும் இங்கு கோயில் கொண்டு அடியார்களின் பிரார்த்தனைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
திருவிழாக்கள்
தீபாவளி, மாசி மகம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் திருகல்யான உற்சவம் போன்ற பண்டிகைகள் மற்றும் பூஜைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
காலம்
1400 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாமல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை