Wednesday Dec 18, 2024

திருப்ரயார் இராமசாமி திருக்கோயில், கேரளா

முகவரி

திருப்ரயார் இராமசாமி திருக்கோயில், திருப்ரயார், திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680567

இறைவன்

இறைவன்: இராமசாமி இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி

அறிமுகம்

திருப்ரயார் இராமசாமி கோயில் என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் திருப்ராயாரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோயிலில்ல் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், நான்கு கைகளுடன் கைகளில் சங்கு, ஒரு சக்ராயுதம், வில் மற்றும் பூச்சரத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த கோயில் தீவ்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயில் தெய்வம் அரட்டுப்புழா பூரத்தின் முதன்மை தெய்வமாவார். இங்குள்ள சிலையை விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கிருஷ்ணர் வணங்கினார் என்று நம்பப்படுகிறது. இங்கு இராமருடன், சிவன், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சாஸ்தா, கிருஷ்ணர் போன்ற தெய்வங்களுக்கும் சிற்றாலயங்கள் உள்ளன. நாலம்பலம் என்று பிரபலமாக அழைக்கபடும் தசரதனின் நான்கு மகன்களுக்காக கேரளத்தில் அமைக்கபட்டுள்ள நான்கு கோயில்களில் இது முதன்மையானதாகும். மலையாள மாதமான கர்கடகம் மாதத்தில் ஒரே நாளில் இந்த நான்கு கோயில்களை வழிபடுவது மிகவும் புனிதமானது என்று நம்பப்படுகிறது. இதனால் பல பக்தர்கள் இந்த கோயில்களுக்கு வருகை தருகின்றனர். திருபிராயர் கோயில் கொச்சின் தேவஸ்வம் வாரியத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு 3 பிரபலமான நம்பூதிரி குடும்பங்களான செல்லூர் மனா, ஜனப்பள்ளி மனா மற்றும் புன்னப்பிள்ளி மனா ஆகியவற்றால் நிர்வகிக்கபட்டு வந்தது. இன்னும், இந்த மூன்று குடும்பங்களின் தலைவர்களும் கோயிலின் ஓரலன்களாக பணியாற்றுகிறார்கள் மேலும் பழக்கவழக்கங்களின்படி சடங்குகள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்கிறார்கள்.

புராண முக்கியத்துவம்

திருப்பிரையார் ராமர் கோவிலின் கருவறை சதுரமாகக் கட்டுமானம் செய்யப்பட்டு, அதன் மேற்கூரை கூம்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் ராமர் சங்கு, சக்கரம், அட்சமாலை, கோதண்டம் ஆகியவற்றுடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் அட்ச மாலையை வைத்திருப்பது இங்கு மட்டுமே காணக்கூடிய காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் இறைவனான இராமர் திருப்பிரையாறப்பன் என்று அழைக்கப்படுகிறார். இங்கு இராமருக்கு வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் இருக்கின்றனர். ராமர் கோவிலில் சீதாதேவி இல்லாமல், ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் பெற்றிருப்பது ஏன்? என்பதற்கு இங்கிருப்பவர்கள் ஒரு கதையைச் சொல்கின்றனர். கேரளத்தில் புகழ்பெற்ற வில்வ மங்கலம் சுவாமிகள், ஒரு சமயம் இக்கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தார். அப்போது அவர் ராமர் சன்னிதி முன்பாக நின்றிருந்த போது, கோவிலின் மேற்கு வாசல் வழியாக ஸ்ரீதேவியும், பூதேவியும் இங்கு கோவில் கொண்டிருக்கும் ராமரை வழிபடுவதற்காக வந்ததைக் கண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் இங்கேயே இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், அவர்களிருவரும் திரும்பிச் செல்ல முடியாதபடி கோவிலின் மேற்கு வாசலை மூடித் தாளிட்டு விட்டாராம். அதன் பின்னர் ராமருக்கு இருபுறமும் ஸ்ரீதேவியையும், பூதேவியையும் இருக்கச் செய்துவிட்டுச் சென்றாராம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இந்த ஆலயத்தின் மேற்கு வாசல் இன்றும் மூடியே கிடக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, தெற்கு வாசலுக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, வெளிச்சுற்றின் தென்பகுதியில் சாஸ்தா, வடக்குப் பகுதியில் கோசாலை கிருஷ்ணர் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலின் கிழக்குப் பகுதியில் திருப்பிரையாறு எனும் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.

நம்பிக்கைகள்

கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது. இந்த ஆலயத்தில் வெடி வழிபாடு செய்பவர்களுக்கு, அவர்கள் வேண்டியதை இறைவன் மகிழ்ச்சியுடன் விரைவில் செய்து கொடுப்பார் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்

இக்கோவிலில் ஆஞ்சநேயருக்குத் தனிச் சன்னிதி எதுவும் இல்லை. சீதையைத் தேடி இலங்கை சென்று திரும்பிய ஆஞ்ச நேயர், இந்தக் கோவில் இருக்கும் இடத்தில்தான் ‘கண்டேன் சீதையை’ என்று ராமரிடம் சொன்னதாகச் கூறப்படுகிறது. இதனால், இக்கோவில் கருவறைக்கு நேர் எதிரில் இருக்கும் வழிபாட்டு மண்டபத்தில் ஆஞ்சநேயர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த மண்டபத்தை ‘ஆஞ்சநேயர் மண்டபம்’ என்றே அழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் ஒன்று, வெடி வழிபாடு. சாஸ்தா சன்னிதிக்கு அருகில் குழாய் ஒன்றில் வெடி மருந்திட்டு, அதை வெடிக்கச் செய்து வழிபடுகின்றனர். ஒரு வெடியில் இருந்து ஆயிரம் வெடி வரை, அவரவர் வேண்டு தலுக்கேற்ப வெடிக்கச் செய்யப்படுகிறது. வெடிகளின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த வெடி வழிபாடு முக்கியத்துவம் பெறுவதற்கு அனுமன்தான் காரணம் என்கின்றனர். ராமனின் கட்டளைப்படி, சீதாதேவியைச் தேடிச் சென்ற அனுமன், இலங்கையில் ராவணனிடம் சிறைப்பட்டிருக்கும் நிலையைக் கண்டு வந்து, ராமனிடம், ‘கண்டேன் சீதையை’ என்ற இன்பச் செய்தியை அதிர்வெடியைப் போட்டுச் சொன்னது போல் சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாராம். அதன்படி, அந்த மகிழ்ச்சியைத் தாமும் பெற வேண்டும் என்பதற்காக, பக்தர்களும் அதிர் வெடி போட்டு தங்கள் வேண்டுதலை இறைவனிடம் சொல்கின்றனர். வெடி வழிபாடு செய்பவர்களின் வேண்டுதலைக் கேட்கும் இறைவன், அவர்கள் வேண்டுதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, அதை விரைவில் நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது பக்தர் களின் நம்பிக்கை.

திருவிழாக்கள்

இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழா காலத்தில், இக்கோவிலில் ‘ஆன்கியக் கூத்து’ எனும் இசை நாடகம் நடத்தப்படுகிறது. கார்த்திகை ஏகாதசிக்கு இரு வாரங்களுக்கு முன்பிருந்தே, தினமும் கோவில் முழுக்க அதிகமான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. அதனை ‘நிறை மாலை’ என்று அழைக்கின்றனர். அவ்வேளையில் கோவிலில் லட்சதீபம் ஏற்றுகிறார்கள். பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் கொண்ட திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. பங்குனி பூரம் நாளில் சிறப்பு ஊர்வலத்துடன் இவ்விழா நிறைவடைகிறது. இது போல் தசமி நாளில் சாஸ்தாவும், ஏகாதசி நாளில் ராமரும் கோவிலில் இருந்து ஊர்வலமாகச் செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் யானைகளின் அணிவகுப்பும் உண்டு. இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் மூன்று வேளைகளில், கருவறையில் இருக்கும் மூலவரைப் போன்ற உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வரும் ‘சீவேலி’ ஊர்வலம் நடக்கிறது. நாலம்பலப் புனிதப் பயணத்தின் முதல் வழிபாடாக இக்கோவிலின் அதிகாலை வழிபாடு அமைந்திருப்பதால், அதிகாலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும். கோவிலின் கிழக்கே ஓடிக்கொண்டிருக்கும் திருப்பிரையாறு எனும் ஆற்றில், அதிக அளவில் மீன்கள் உள்ளன. இந்த மீன்களுக்கு அவல், செவ்வாழை போன்ற உணவுப் பொருட்களைப் போட்டுப் பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனை ‘மீனூட்டு’ என்று அழைக்கின்றனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடலில் மிதந்து கொண்டிருந்த ராமர் மற்றும் அவரது சகோதரர்களின் சிலைகளைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்ததை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் விதமாக, பக்தர்கள் இந்த ‘மீனூட்டு’ நடைமுறையைச் செயல்படுத்தி இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருப்ரயார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top