திருப்புறம்பியம் பள்ளிப்படைகோயில், (பகவதி அய்யனார் கோயில்), தஞ்சாவூர்
முகவரி :
திருப்புறம்பியம் பள்ளிப்படை கோயில் (பகவதி அய்யனார் கோயில்),
திருப்புறம்பியம், கும்பகோணம் தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம் – 612303.
இறைவன்:
பகவதி அய்யனார்
அறிமுகம்:
திருப்புறம்பியம் காவிரியின் கிளை நதியான மணியாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமையப்பெற்ற வளமையான ஊர் திருப்புறம்பியம். தமிழக வரலாற்றில், குறிப்பாக சோழவரலாற்றில், தவிர்க்கவே முடியாத ஒரு வார்த்தை திருப்புறம்பியம். எத்தனையோ போர்கள். போரில் கங்கமன்னர் பிருதிவீபதி போர்க்களத்தில் மடிந்தார். அவருக்கு இவ்வூரில் நடுகல் நட்டு பள்ளிப்படை கோவில் கட்டப்பட்டது போரில் படுகாயமடைந்த விஜயாலயரும் பின்னர் இறைவனடி சேர போரில் மடிந்த இரு மன்னர்களுக்கும் பள்ளிப்படை கோயில் கட்டப்பட்டது. பல நூறாண்டுகள் இது பள்ளிப்படை கோயில் என அறியாமல் காலம் சென்றது,
பின்னர் வரலாற்று ஆய்வாளர்கள் இங்குள்ள பகவதி அய்யனார் கோயிலே அந்த பள்ளிப்படை என ஊகித்து அறிந்தனர். அய்யன் என்றால் அரசன், பிரித்விபதி என்பது பகவதி என மருவியிருக்கலாம். தற்போது அய்யனார் கோயில் என்றே அறியப்படும் இக்கோயிலை பரம்பரையாக பூஜித்து வரும் திரு. சிங்காரவேலு என்பவர் திருப்புறம்பியத்தில் வசிக்கிறார். ஊரின் மேற்கில் ஒரு கிமீ தூரத்தில் கொந்தகை எனும் ஊரினை ஒட்டி செல்லும் மண் சாலையில் சென்றால் எளிதில் இவ்விடத்தை அடையலாம். வயல்களால் சூழப்பட்டிருந்த ஐயனார் கோவிலை சென்றடைந்தோம். பெரும் வயல் வெளியின் நடுவில் ஓங்கி உயர்ந்த மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த ஐயனார் கோவில் பெரிய திடலின் மையத்தில் உள்ளது. அங்கு பிரித்திவி மன்னன் பெயரால் பகவதி ஐயனார் சன்னதியும், விஜயாலயச்சோழ மன்னன் பெயரால் பெரிய ஐயனார் சன்னதியும் ஒட்டியபடி கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.
கோவிலுக்கு வெளியே செங்கற்களால் ஆன பல நடு கற்கள் நடப்பட்டிருந்தன. அந்த ஐயனார் கோவில் சுவற்றில் பள்ளிப்படை கோயில் பற்றி எழுதப்பட்டிருந்தது. கோயிலின் எதிரில் பெரிய வேல் ஒன்றும் நிறுத்தப்பட்டு உள்ளது. அருகில் இரு நடுகற்கள் புரியாத குறியீடுகளுடன் உள்ளன. கோயிலின் நேர் எதிரில் உயர்ந்து நிற்கும் ஆலமரத்தின் கீழ் சற்றே சிதைவடைந்த கொற்றவை சிலை ஒன்று உள்ளது. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த பள்ளிப்படை கோயில் இன்று எப்படி இருக்கிறது? ஒன்றரை அடி கனமுடைய செங்கல் சுவர்கள் அதன் மேல் பரப்பப்பட்ட கருங்கல் பாளங்கள் உள்ளன. அவ்வளவு தான். மேலே விமானம் என்றோ வேலைப்பாடுகள் கொண்ட சுதைகளோ மாடங்களோ எதுவுமில்லை. கோயில் வரை செல்ல சரியான பாதைகள் இல்லை. இருக்குமிடம் அறிய தகவல் பலகை இல்லை. கோயிலில் வீற்றிருக்கும் மன்னர்களின் ஆன்மாக்கள் இன்றும் இம்மண்ணை காத்து நிற்பதால் தான் இன்றும் மக்கள் அவர்களை காவல் தெய்வமாக கொண்டாடுகின்றனர். போற்றி பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்று சின்னம். ஒன்று சேர்ந்து நடந்தால் பாதைகள் தானே உருவாகும்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்புறம்பியம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி