Sunday Nov 24, 2024

திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரர் திருக்கோவில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம்- 612 203. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 435 246 9555, 94439 43665, 94430 47302.

இறைவன்

இறைவர்: சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், இறைவி: பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி

அறிமுகம்

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59ஆவது சிவத்தலமாகும். நுழைவாயிலை அடுத்து விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அடுத்து ராஜகோபுரம் உள்ளது. மூலவராக லிங்கத்திருமேனியாக சேசபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக வலது புறம் விநாயகர், இடது புறம் சுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் சன்னதியை அடுத்து தனியாக வண்டார்குழலி சன்னதி உள்ளது.

புராண முக்கியத்துவம்

விநாயகர் கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை வணங்கிய போது, அவர் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்க சாபமிட்டார். பின்னர் அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக மற்றவர்களையும் தண்டிக்கலாகாது என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும்படியும் சிவனை வேண்டினர். மகாசிவராத்திரியன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் வந்து வேண்டி சாபவிமோசனம் பெறலாம் என சிவன் அருளினார். இது தவிர இன்னொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. இதனால் வாயுபகவான் தன் வலிமையால் மலைகளை புரட்டி போட, ஆதிசேஷன் தன் வலிமையால் அதனை தடுத்தி நிறுத்தியது. இருவரும் சமபலம் கொண்டதால் கோபம் கொண்ட வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை தடுத்து நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்தன. தேவர்களின் வேண்டுகோளின் படி ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கியது. பின்னர் திருப்பாம்புரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து மன்னிப்பு கேட்டது.

நம்பிக்கைகள்

போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 – 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்திற்கு 2ல் ராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும். சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும் என்றும் கூறுவர். இவைகள் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். இந்த கோயில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது. ராகு, கேது சன்னதி: பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

சிவனுக்குரிய அனைத்து திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பேரளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top