Saturday Jan 18, 2025

திருப்பாண்டிக் கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு

முகவரி

அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில், திருப்பாண்டிக் கொடுமுடி – 638 151 கொடுமுடி, ஈரோடு மாவட்டம். போன்: +91- 4204-222 375.

இறைவன்

இறைவன்: மகுடேஸ்வரர்,கொடுமுடிநாதர் இறைவி: வடிவுடைநாயகி

அறிமுகம்

தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேசுவரர் கோயில் (திருப்பாண்டிக் கொடுமுடி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்றது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும். இத்தலம் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. திருச்சி-ஈரோடு ரயில் பாதையில் கொடுமுடி ரயில் நிலையம் இருக்கிறது. கோவில் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் கரைக்கருகில் இக்கோயில் உள்ளது. வடக்கிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இவ்விடத்தில் கிழக்கு நோக்கி திசைமாறிச் செல்கிறது.

புராண முக்கியத்துவம்

ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர். ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக்கொண்டான். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவிலிருந்து தள்ள முயன்றார். காற்று படுவேகமாக வீசியபோது மேருமலை சிதறி ஏழு துண்டுகளாக விழுந்தது. ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கமாக ஆனது. கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம். இது ஒரு நாகர் ஸ்தலம். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.

நம்பிக்கைகள்

ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள். ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும். நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும். நவக்கிரக பூஜைசெய்து, வாழை மரத்திற்கு தாலிகட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார். வன்னிமரத்தை இன்னொரு முகமாக பாவித்துக் கொள்ள வேண்டும். அகத்தியர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களுக்கு இங்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சிதந்தார். ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர்வழிபாடு விசேஷம். ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி செல்வது போன்ற தோற்றத்தில் உள்ளார். வாலில்மணி கட்டப்பட்டுள்ளது. பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர். இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர்.

திருவிழாக்கள்

சித்திரை திருவிழா 11 நாள் நடக்கிறது. ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கொடுமுடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஈரோடு

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top