Friday Nov 15, 2024

திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி- 609 101. மாவட்டம். போன்: +91- 4364 – 278 272, 277 800.

இறைவன்

இறைவன்: சிவலோகத்தியாகர், இறைவி: திருவெண்ணீற்று உமையம்மை

அறிமுகம்

திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில். இது மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ஐந்தாவது தலமாகும். சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

புராண முக்கியத்துவம்

சீர்காழியில் சிவபாதஇருதயரின் மகனாக அவதரித்தவர் சம்பந்தர். இவருக்கு 16 வயது நடக்கும் போது, இவரை திருமணம் செய்து கொள்ளும்படி தந்தை கூறினார். முதலில் மறுத்த சம்பந்தர், பின் “இறைவனின் விளையாட்டு தான் இது’, என்று சம்மதித்தார். மயிலாப்பூரில் சிவநேச செட்டியாரின் மகளை பெண் பார்த்து முடித்தனர். அவள் திடீரென இறந்து போனாள். அவளுக்கு உயிர் கொடுத்த சம்பந்தர் அவளை தன் மகளாக ஏற்றார். அப்பெண் இறைப்பணியில் மூழ்கி விட்டார். இதன்பிறகு, நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாள் நிச்சயித்தார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது “இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்” என்று கூறி, “கல்லூர்ப் பெருமணம்’ என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,””நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக”என்று அருள்புரிந்தார். இந்த காட்சியைக்கண்ட ஞான சம்பந்தர் மெய்சிலிர்த்து “”காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம் பாடி அனைவருக்கும் சிவலோகம் வழங்கி, தாமும் தன் துணைவியார் மங்கை நல்லாளுடன் சிவஜோதியில் கலந்தார். இந்த பதிகம் தான் சம்பந்தர் தன் வாழ்நாளில் பாடிய கடைசிப்பதிகமாகும். ஆண்டு தோறும் வைகாசி மூல விழாவில் இந்த காட்சி திருவிழாவாக நடக்கிறது. இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்து ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜ கோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும், அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது. நூற்றுக்கால் மண்டபத்தில் சம்பந்தப்பெருமான், ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அடுத்து கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும், திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது. திருமால், காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

நம்பிக்கைகள்

இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி, முக்தி கிடைப்பது நிச்சயம். இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

சிறப்பு அம்சங்கள்

சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வேத நெறி தழைத்தோங்கவும், சைவத்துறை விளக்கம் பெறவும் திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. அதேபோல் தனது திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவருடன் தானும் சிவ ஜோதியில் கலந்த தலம் ஆச்சாள்புரம். இவரை உடலால் சிறியவர், உணர்வால் பெரியவர் என சேக்கிழார் போற்றுகிறார். ஆச்சாள், ஆயாள் என்பது அம்பிகையின் பெயர்கள். ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது. வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம். காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார். சம்பந்தர். திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநீறு பிரசாதம்: இந்த அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், தரித்திரம் நீங்கி சரித்திரம் படைக்கலாம், பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஸ்டி

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top