Thursday Dec 19, 2024

திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை அஞ்சல் 612 605 கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 435-246 8001

இறைவன்

இறைவன்: செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர், இறைவி: ஞானாம்பிகை, ஞானவல்லி

அறிமுகம்

திருச்சேறை செந்நெறியப்பர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 95ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் திருச்சேரையில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் வழியாகச் சென்றால் 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் தமது ஆத்மார்த்த மூர்த்தியாக இத்திருக்கோயிலின் உட்பிரகாரத்தில், வினாயகருக்கு அருகில் ஒரு லிங்கம் ஸ்தாபித்து, வணங்கி வந்தார். அந்த லிங்கமே கடன் நிவர்த்தீஸ்வரராக விளங்கக்கூடிய ரிணவிமோசன லிங்கேஸ்வரர் ஆகும். (ரிண- கடன், விமோசனம் – நிவர்த்தி. கடன் நிவர்த்தி செய்யும் ஈசன் – ரிண விமோசன லிங்கேஸ்வரர்) மனித பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய ஜீவிதத்தில் சுகமாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஒருவர் பிறக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடனும், அறிவு உள்ளவராகவும், கல்வியுடையவராகவும் இருந்தாலும் வறுமை இருக்குமானால் அவரால் சுகத்தை அனுபவிக்க முடியாது. ஆகையால் அப்பேர்ப்பட்ட வறுமை வராமல் இருக்க, வறுமையை நீக்கி செம்மையான வாழ்வு அளிக்கும் இறைவனே ரிண விமோசன லிங்கேஸ்வரர் ஆகும். இவ்விறைவர், ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 வாரம் திங்கட்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிக்ஷேகத்தில் கலந்து கொண்டால் பிரார்த்தனை நிறைவேறும். கடன் நீங்கி, வறுமை விலகி, செல்வ வளம் பெருகும். மக்கட்பேறு, கல்வி, பொருள் என அனைத்தும் கிடைக்கும் என்பது திண்ணம். வெளிப்பிரகாரத்தில் மூலவர் சாரபரமேஸ்வரருக்கு இடப்பால் இறைவி அம்பிகையாக ஞானவல்லி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இறைவன் நெறிப்படுத்திய வாழ்க்கையின் ஞானத்தை அருள்பவர் அவனது துணைவியராக ஸ்ரீ ஞானவல்லி அம்பாள் அமைந்துள்ளதாக புராணச்செய்தி மூலம் அறிய முடிகிறது. உள்பிரகாரத்தில் விநாயகர், நடராஜர், இடபாரூடர், தெட்சிணாமூர்த்தி, காலபைரவர், துர்க்கை, சூரியன், சனிபகவான் முதலிய சன்னதிகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் தல விநாயகரும், அவரையடுத்து மார்க்கண்டேயரும், அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான, மக்களின் வறுமையை போக்கி செல்வத்தை கொடுக்கவல்ல ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரரின் சன்னதி ஆகும். இவருக்கு அடுத்து ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சன்னதியும் பாங்குற அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சோழர் காலத்தில் குலோத்துங்க சோழன் எனும் சோழ மகாராஜாவால் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.

நம்பிக்கைகள்

கடன், பிணி தீர இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கடன் நிவர்த்தி செய்யும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் இங்கு சிறப்பு. இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இங்குள்ள பைரவருக்கு அப்பர் தனியாக தேவார பாடல் பாடியுள்ளார். மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன.இங்கு தலவிருட்சமான மாவிலங்கை வருடத்தின் நான்கு மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த நான்கு மாதங்கள் வெள்ளை வெளேரென்று பூக்களாகவும், அதற்கடுத்த நான்கு மாதங்கள் பூ, இலை எதுவுமின்றி காணப்படும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 158 வது தேவாரத்தலம் ஆகும். மனிதனுக்கு செம்மை தரும் நெறியை – முக்தி நெறியை அளித்தருளும் இறைவன் வெளிப்படும் தலமிது என்ற பொருளில் திருச்சேறை பெருமானுக்கு “”செந்நெறியப்பர்’ என்ற பெயர் வழங்கப்படுவதும் சிறப்பானதாகும். பஞ்ச க்ஷேத்திரம் எனும் பெருமாள் கோயில் அருகில் இருப்பதால் நமது இறைவன் ஸ்ரீ செந்நெறியப்பரையும் ஸ்ரீ சாரபரமேஸ்வர் என அழைக்கலாயினர். மற்ற எங்கும் இல்லாத சிறப்பு இத்தலத்தில் மட்டுமே மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை, விஷ்ணு துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சன்னதியில் காட்சியளிப்பது சிறப்பாகும். இத்துர்க்கையை வெள்ளிக்கிழமை தோறும் இராகு காலத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்ததாகும். நவக்கிரஹத்தை தரிசித்து, நடராஜபெருமான் சன்னதிக்கருகில் சென்றால் பைரவர் அருள்காட்சியளிக்கிறார். எந்த சிவாலயத்திலும் இல்லாத தனி சிறப்பு இங்குள்ள பைரவருக்கு அப்பரால் பாடல் பெற்ற தனி தேவார பாடல் இங்கு மட்டும் உள்ளது. மற்றும் இடதுமேல் கரத்தில் சூலம் போட்ட மணியுடன் உள்ளது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். விரித்தபல் கதிர்கொள்சூலம் வெடிபடு தமருங்கை தரித்ததோர் கோலே கால பயிரவனாகி வேழம் உரித்துமை யஞ்சக்கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’ சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும் தேவாரப் பாடலாகும். ஸ்ரீ பைரவருக்கு அஷ்டமியன்று வடைமாலை சாற்றி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் காரியானுகூலம், வழக்கு விவகாரங்களில் வெற்றி, நவக்கிரஹ தோஷங்கள் நீங்குதல் ஆகியவற்றின் பிரார்த்தனா மூர்த்தியாய் ஸ்ரீ பைரவர் விளங்குவது மிக சிறப்பான அம்சமாகும். சூரிய பூஜை : தக்கன் யாகத்தில் தான் செய்த தவறுக்கு கழுவாய் தேடி, சூரியன் பல இடங்களிலும், இறைவனை வழிபட்டான் அவ்வாறு சூரியன் பூஜித்த ஸ்தலங்களுள் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ஸ்தலமும் ஒன்றாகும் என்பது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பாகும். ஆண்டுதோறும் மாசி மாதத்து 13, 14, 15 தேதிகளில் காலையில் இங்கே சூரியனது கிரகணங்கள் இத்தலத்து இறைவன் மீதும், அம்பிகையின் பாதங்களிலும் நேரடியாக படுகின்றன. அப்போது சூரிய பூஜை மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த மூன்று நாட்களிலும் மாலை வேளைகளில் கண்டியூரில் சூரிய பூஜை நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. மாசி மாதம் முழுவதும் காலையில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் இவ்வூர் ஆற்றூர் ஆறை என மருவி வழங்குதல் போலச் சேற்றூர் என்ற பெயர் சேறை என வழங்கியது எனலாம். தேவாரப் பாடல்களில் வயல்களால் சூழப் பெற்ற வளநகர் என இத்தலத்தை குறிக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சேறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top