Wednesday Dec 25, 2024

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக் கோயில், திருஇந்தளூர்- 609 003. நாகப்பட்டினம் மாவட்டம்

இறைவன்

இறைவன்: பரிமளரங்கநாதன் இறைவி: பரிமள ரங்கநாயகி

அறிமுகம்

மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதி. பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.

புராண முக்கியத்துவம்

நினைத்ததை எல்லாம் பெற்றுத்தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தான். இவன் ஏகாதசியில் விரதம் இருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான். இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் தேவலோகத்திலோ அனைவரும் கலக்கமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதம் முடித்து விட்டால் தேவலோகப்பதவி கூட கிடைத்து விடும். மானிடனுக்கு இப்பதவி கிடைத்து விட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் என பயந்தனர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர். துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க பூமிக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். அவன் ஏகாதசி விரதம் முடித்திருந்தாலும் துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்போது தான் ஏகாதசியின் முழுப்பயனும் அவனுக்கு கிடைக்கும். துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தான். அதற்குள் துர்வாசர் வந்து விட்டார். தன் விரதத்தை தடுக்கத்தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது. முனிவரை வரவேற்ற மன்னன்,””தாங்களும் என்னுடன் உணவருந்தினால், எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்’என்றான். முனிவரும் சம்மதித்துவிட்டு நதியில் நீராடிவிட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறி சென்றார். முனிவரின் திட்டம் என்னவென்றால், தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும். மன்னன் நமக்காக காத்திருந்தால் அவனது விரதம் தடை படும் என்பது தான். துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது. கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்துவிடுவார். இன்னும் சிலநிமிடங்களே இருந்தது. வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தான். உடனே தலைமைப்பண்டிதர்,””உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்துவிடும்,’என்று கூறினர். அதேபோல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தான். இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த துர்வாசர் மிகுந்த கோபமடைந்தார். உடனே துர்வாசர் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்லுமாறு ஆணையிட்டார். அம்பரீசன் இதற்கு பயந்து பரிமளரங்கநாதரிடம் சென்று,””பெருமாளே! உனக்காக ஏகாதசி விரதம் இருக்கக்கூடாது என்பதற்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடம் இருந்து என்னைக்காப்பாற்று’என பெருமாள் பாதத்தில் சரணடைந்தார். பெருமாள் கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதையெல்லாம் அறிந்த துர்வாசர் பெருமாளிடம் மன்னிப்பு கேட்க, பெருமாளும் மன்னித்து அவரது கர்வத்தை அடக்கினார். நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த மன்னனிடம், “”வேண்டியதைக்கேள்’ என்றார். அதற்கு மன்னன்,””தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து வரும் பக்தர்களின் குறைகேட்டு அருள்புரிபுரிய வேண்டும்,’என வேண்டினான். பெருமாளும் மன்னனின் விருப்பப்படி இத்தலத்தில் அருள்புரிந்து வருகிறார்.

நம்பிக்கைகள்

ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. கேட்டதெல்லாம் கொடுக்கும் பெருமாள்

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும் 230 அடி அகலமும் கொண்ட பெரிய கோயில் இது. வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இதில் நீராடித்தான் சந்திரன் தன் சாபம் நீங்கப்பெற்றான். பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதத்தை சூரியனும், நாபிக்கமலத்தை பிரம்மனும் பூஜிக்கிறார்கள். தலைமாட்டில் காவிரித்தாயாரும், கால்மாட்டில் கங்கை தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள். கங்கையை விட காவிரி புனிதமானவள் என்று பெயர் பெற்ற தலம்.

திருவிழாக்கள்

சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு. ஆடி மாதம் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் பத்து நாள். ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு. புரட்டாசி மாதம் தாயாருக்கு நவராத்திரி உற்சவம். ஐப்பசியில் பத்துநாள் துலா பிரம்மோற்சவம். மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம். தை முதல் நாள் சங்கராந்தி உற்சவம். பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருஇந்தளூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top