தாமல் வராகீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோயில், தாமல், காஞ்சிபுரம் மாவட்டம் – 631551.
இறைவன்
இறைவன்: வராகீஸ்வரர்
அறிமுகம்
தாமல் வராகீஸ்வரர் கோயில் (வராகேசம்) என போற்றப்படும் இது, காஞ்சி மாவட்டத்திலுள்ள “தாமல்” கிராமத்தின் சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இத்திருக்கோயில் மிக மிகப் தொன்மையான கி.மு. ஐந்நூறு ஆண்டுகட்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது, மற்றும் இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் தாமல் என்னும் கிராம குளத்தின் தென்கரையில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயிலை ஒரு கிலோமீட்டர் கடந்தால் இக்கோயிலை அடையலாம். பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் என பல்வேறு மன்னர் களும் போற்றி வழிபட்ட திருக்கோவிலாக தாமல் சிவாலயம் திகழ்கின்றது. மன்னர்கள் காலத்திலேயே இவ்வூர் பல்வேறு போர்களைச் சந்தித்ததை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. தாமல் என்ற பெயர், மூன்றாம் சிம்மவர்மனின் செப்பேட்டில் (கி.பி. 1556) குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்ட சோழமண்டல தாமல் கோட்டத்தில், தாமர் நாட்டு, தாமநல்லூர் என பழங்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. தாமல் என்பதற்கு தடாகம் அல்லது குளம் என்று பொருள் கொள்ளலாம். இந்த ஊரில் மிகப்பெரிய பல்லவர் காலத்து ஏரி இருப்பது இதனை உறுதி செய்கின்றது. புறநானூற்றில் தாமல் பற்றிய குறிப்பு காணப்படுகின்றது. நலங்கிள்ளியின் சகோதரர் மாவலத்தான் பற்றி, தாமலைச் சேர்ந்த தமப்ப கண்ணனார் என்ற புலவர் இயற்றிய பாடல் வாயிலாக தாமலைப் பற்றி அறிய முடிகிறது.
புராண முக்கியத்துவம்
ஒரு முறை இரண்யாக்ஷன் என்ற அசுரன், பூமா தேவியைக் கடலுக்கு அடியில் கடத்திச் சென்று மறைத்து வைத்தான். இந்த அசுரன் இரண்யகசிபுவின் சகோதரன் ஆவான். இரண்யாக்ஷனின் இந்த செயலால் பூமியில் வாழ்ந்த உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. உலக இயக்கம் நின்று போனது. தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று பூமியைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். இதையடுத்து மகாவிஷ்ணு, வராக (பன்றி) அவதாரம் எடுத்து, கடலுக்குள் சென்று இரண்யாக்ஷனை அழித்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார். அசுரனை அழித்த பின்னரும் வராகரின் அவேசம் அடங்கவில்லை. இதையடுத்து அவர் கடலை கலக்கிக் கொண்டிருந்தார். இதனால் கடலில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. இதனைக் கண்ட முனிவர்களும், தேவர்களும், மகாவிஷ்ணுவின் கோபத்தை கட்டுப்படுத்தும்படி சிவபெருமானை வேண்டினர். சிவபெருமான், வேடன் வடிவில் தோன்றி, வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணுவுடன் மோதினார். வராகத்தின் கொம்பை உடைத்து, அவற்றை தனது அணிகலனாக ஆக்கிக்கொண்டான். இதற்கு பிறகு வராக உருவில் இருந்த திருமாலின் கோபம் தணிந்தது. பின்னர் திருமால், சிவபெருமானை வழிபட்டு வேடன் வடிவில் தோன்றி, வராகனை வீழ்த்தி அதன் கொம்புகளை உடைத்து அவற்றைத் தனது அணிகலன் ஆக்கினார். பின்னர் திருமால், இத்தல சிவபெருமானை வழிபட்ட பேறுபெற்றார் என்று காஞ்சி புராணம் கூறுகிறது. வராக அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, சிவபெருமானை வணங்கி வழிபட்டதால், இத்தல இறைவன் வராகீசுவரர் என்றும், பன்றீசுவரர் என்றும் அழைக்கப்படுகின்றார். இந்த வரலாறு நிகழ்ந்த இடம் தாமல் என்ற திருத்தலமாகும்.
நம்பிக்கைகள்
ராகு- கேது பரிகாரத் தலம் : தொடர்ச்சியாக ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் ராகு-கேது யாக பூஜைகளில் கலந்து கொண்டால், ராகு-கேது தோஷத்தில் இருந்து பூரணமாய் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சிறப்பு அம்சங்கள்
35 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்டு இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தினை ஒட்டி அழகிய திருக்குளம் உள்ளது. மேற்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், அண்மையில் திருப்பணியின் போது அடியார்களால் எழுப்பப்பட்டுள்ளது. பல்லவர், சோழர், ராஷ்டிரகூடர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் என அனைத்து மன்னர்களின் கலைப்பாணியும் இக்கோவிலில் காணப்படுகிறது. வெளிப்புற மண்டபம் விஜயநகர மன்னர் காலம், இதன் தூண்களில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் ராவணன் என ராமாயணக் காவியக் காட்சிகள் புடைப்புச் சிற்பங் களாகக் காட்சி தருகின்றன. உண்ணாழி எனும் உள்சுற்று மண்டபம் 50 தூண்களைக் கொண்டு சோழர் மற்றும் விஜயநகர மன்னர் பாணியில் அமைந்துள்ளது. இதில் சிவபுராணச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைந்துள்ளன. வராகீஸ்வரர் : கருவறையில் மேற்கு முகமாய் இறைவன் வராகீசுவரர் காட்சி தருகிறார். வட்ட வடிவ ஆவுடையாராக சிவலிங்கத் திருமேனியில் இறைவன் ஆசி வழங்குகின்றார். இவரே பன்றீசர், திருப்பன்றீசுவரர், திருப்பன்றீசுவரமுடையார், தாமலுடையார் எனப் பல்வேறு பெயர் களில் அழைக்கப்பட்டவர். இன்று இவரது திருப்பெயர் வராகீசுவரர் என்பதாகும். வெளிப்புற மண்டபத்தினையட்டி, தெற்கு முகமாக கவுரி அம்மன் சன்னிதி அமைந்துள்ளது. இந்த அம்மன், திருக்கோவில் புனரமைப்பின்போது புதிதாக உருவாக்கியதாகும். எனினும் அன்னை நின்ற கோலத்தில் எழிலோடு காட்சி தந்து அருளாசி வழங்குகின்றார். அம்மனின் எதிரே சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இருக்கிறது. அன்னை சகல சம்பத்துக்களையும் அள்ளித் தருபவள் என்பதால், அன்னையை சம்பத்கவுரி என்றும் அன்போடு அழைக்கின்றனர். தனிச் சிறப்புகள் : மாசி மாத ரத சப்தமி அன்றும், மகத்தன்றும் மாலை வேளையில், இத்தல இறைவனை, சூரியன் தன் ஒளிக்கதிர்களால் தழுவி வழிபடுவது தனிச்சிறப்பு. சரபேஸ்வரருக்கு, லிங்கத் திருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. நூற்றியெட்டு லிங்கம் அமைந்துள்ளதும், காளாஸ்திரிக்கு இணையான பரிகாரத் தலமாக விளங்குவதும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்..
திருவிழாக்கள்
பிரதோஷம், கிருத்திகை, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு -கேது பூஜை, அஷ்டமி பூஜை, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாமல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை