Saturday Jan 18, 2025

சோழவந்தான் சனீஸ்வர பகவான் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், சோழவந்தான், மதுரை மாவட்டம்-625 214. போன்: +91 97504 70701

இறைவன்

இறைவன்: சனீஸ்வர பகவான்

அறிமுகம்

சனிபகவான் பெரும்பாலும் அனைத்து சிவாலயங்களிலும் நவகிரகங்களில் ஒருவராகவும் சில ஆலயங்களில் தனிச்சந்நிதி கொண்டும் அருள்பாலிப்பார். அதேபோன்று சனிபகவானே மூலவராக அருள்பாலிக்கும் தலங்களும் சில உண்டு. அவற்றுள் சுயம்புவாய் எழுந்தருளி பக்தர்களின் சங்கடங்கள் தீர்க்கும் மங்கள சனியாக அருள்பாலிப்பவர் சோழவந்தான் படித்துறை சனீஸ்வரர். சோழவந்தான், மதுரை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலம். இங்கு பாயும் வைகை ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது சனிபகவான் ஆலயம். சிருங்கேரி மற்றும் காஞ்சி சுவாமிகளின் அருளாசியுடன் சுயம்பு சிலையை நிறுத்தி பீடம் அமைத்து கோயில் கட்டடம் கட்ட அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மக்கள் விரும்பினர். 1975ல் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை,மாலையில் சனீஸ் வரபகவானுக்கு பூஜைகள் நடந்து வருகிறது.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் நந்தவனமாக பூக்களின் புகலிடமாக விளங்கிய இந்த சோலைவனத்தில் பாரிஜாதம், நாகலிங்கம், மாவலிங்கம் உள்ளிட்ட பல்வேறு மரங்களும் மூலிகை செடிகளும் நிறைந்து விளங்கியிருக்கின்றன. எழில் கொஞ்சும் இந்தப் பிரதேசத்தில் இறைவனுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட முடிவு செய்தனர் இந்த ஊர் மக்கள். சிறியவர் முதல் பெரியவர்வரை அந்தப் பகுதியில் பணி செய்துகொண்டிருந்தபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. மாவலிங்க மரத்தடியில் சுத்தம் செய்துகொண்டிருந்த பாலகன் ஒருவன் அங்கு தடுக்கி விழுந்தான். எது தடுக்கியது என்று அவன் பார்த்தபோது ஒரு கல்லால் ஆன விக்ரகம் போல ஏதோ தட்டுப்பட்டது. ஊர் மக்களைக் குரல் கொடுத்து அழைத்தான் சிறுவன். எல்லோரும் ஓடிவந்து அந்த இடத்தைத் தோண்டினர். அப்போது அங்கு அவர்களுக்கு ஓர் அழகிய விக்ரகம் கிடைத்தது. கண்டதும் அதை முருகப் பெருமான் என்றே முடிவு செய்தனர். ஆனால் உற்றுநோக்கினால் சிறு சந்தேகம் வந்தது. விக்ரகத்தில் இருந்த பறவையின் இறகுப் பகுதியில் இருந்து ஒரு நிஜ இறகு ஒன்று உதிர்ந்தது. என்ன அதிசயம் அது காகத்தின் இறகு. இப்போது விக்ரகத்தை சிற்ப சாஸ்திரம் தெரிந்தவர்கள் நன்கு ஆராய்ந்து அது முருகன் இல்லை. சனிபகவான் என்பதை எடுத்துச் சொல்லினர். சுயம்புவாய் சனிபகவான் சிலைகள் கிடைத்த தலங்கள் என்பன மிகவும் அபூர்வமானவை. எனவே சனிபகவானுக்கு இங்கு தனி ஆலயம் எடுக்க விரும்பினர் ஊர்மக்கள். ஆனால் அவர்கள் மனதில் பல சந்தேகங்கள். சனிபகவானை மூலவராக வைத்துக் கோயில் எழுப்பலாமா… என்று திகைத்தனர். தங்களுக்கு வழிகாட்ட மகான் ஒருவரின் உத்தரவு தேவை என்று எண்ணினர். அப்போதுதான் கலியுகத்தின் காருண்ய மூர்த்தி மகாபெரியவாவின் காதுகளுக்கு இந்தச் செய்தி எட்டியிருக்கிறது. அவர் நேரடியாக இந்தத் தலத்துக்கு வந்து விக்ரகத்தைக் கண்டார். அங்கே சனிக்கெனத் தனிக்கோயில் அமைக்க உத்தரவிட்டார். அவரின் சொல் விரைவில் செயல்வடிவம் பெற்றது. சனிபகவானுக்குக் கோயில் எழுந்தது. மகாபெரியவா வந்திருந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வித்தார்.

நம்பிக்கைகள்

பகவான் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது ஒரு விசாக நட்சத்திர நாளில். எனவே விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார சேத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். மகாபெரியவா வந்திருந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வித்தார்.

திருவிழாக்கள்

சனிப்பெயர்ச்சி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சோழவந்தான்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top