சோமாசிமாற நாயனார்
சோமாசிமாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவர் ஆவார். இவர் எக்குலத்தவராயினும் சிவனடியார்கள் என்றால் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதை கடமையாக கொண்டிருந்தார். வேள்விகள் பல செய்து அதன் மூலம் பல தான தர்மங்களை, சிவனடியார்களுக்கு வழங்கி வந்தார். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் சிவபெருமானை வழிபட்டதனால், சோமாசிமாற நாயனார் எனப் போற்றப்படுகிறார். இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று எந்நேரமும் சிவதரிசனம் செய்து வந்தார். சிவபெருமானின் “நமச்சிவாய” எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் நித்த நியமம் உடையவர்.
சோமாசிமாற நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்.
“அன்பராம் சோமாசி மாறனுக்கும் அடியேன்”
– திருத்தொண்டத் தொகை.
சோமாசிமாற நாயனார் என்ற சிறப்புப் பெயர்:
சோழ நாட்டிலுள்ள அம்பர் மாகாளம் (தற்போது “கோவில் திருமாளம்’ என அழைக்கப்படுகின்றது) என்னும் தலத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் சோமாசிமாற நாயனார்.
இவர் சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு தேவையான பொருள் உதவிகளையும், அவர்களுக்கு வேண்டிய உணவுகளையும் அளிப்பது என்பது தமது தலையாய கடமையாக கொண்டிருந்தார். இவர் அறவொழுக்கங்களில் நெறிபிறழாது முறையோடு வாழ்ந்து யாவராலும் போற்றப்படும் அளவிற்கு மேம்பட்டு விளங்கினார். இவர் நாவிலே எந்நேரமும் நமச்சிவாய மந்திரம் ஒலிக்கும். இவர் எப்பொழுதும் சிவபெருமான் வீற்றிருக்கும் சிவத்தலங்களை அடைந்து, சிவதரிசனம் செய்து வந்தார்.
இறைவனின் திருவடி நீழலையே பற்றி வீடு பேற்றை அடைவதற்கான ஒப்பற்ற வேள்விகள் பல நடத்தி வந்தார். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் சிவபெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
சிவபெருமானின் திருவிளையாடல்:
ஒருநாள் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் சோமாசிமாற நாயனார், தான் நடத்தும் சோம யாகத்திற்கு சிவபெருமான் நேரில் வந்து அவிர்பாகம் பெற வேண்டும் என்ற மனதில் உள்ள நீண்ட நாள் ஆசையை தெரிவித்தார். அதை ஏற்ற சுந்தரமூர்த்தி நாயனாரும் திருவாரூர் தியாகேசனிடம் சோமாசி நாயனாரின் ஆசை பற்றி முறையிட்டார்.
தியாகேசன் தமது திருவிளையாடல்களையும் துவங்கினார்…
தியாகேசன் சுந்தரமூர்த்தி நாயனாரிடம் “நாளை நாம் யாகத்திற்கு எழுந்தருள்வோம். ஆனால் எந்த உருவத்தில் என்று கூற முடியாது, சோமாசிமாற நாயனார் எம்மை சரியாக அடையாளம் கண்டு அவிர்பாகம் அளிக்க வேண்டும்” என்று கூறினார். இதை சுந்தரர் சோமாசிமாற நாயனாரிடம் கூற யாகம், மிக சிறப்பாக நடைபெற தொடங்கியது. தியாகேசனே நேரடியாக வருவதால் நாட்டில் பல பகுதியிலிருந்தும் வேத விற்பன்னர்கள், முனிவர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் சூழ யாகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் யாகம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு நான்கு வேதங்களையும், நான்கு நாய்களாக கையில் பிடித்தபடி மகன்கள் இருவரும், மனைவியானவள் இடையிலே கள் நிறைந்த குடத்தை சுமந்தபடியும், தம்பட்டம் அடித்த வண்ணம், நந்தியை இறந்த கன்றாக மாற்றி தோளில் சுமந்துகொண்டு வேடர் உருவில் சிவபெருமான் குடும்பத்தினருடன் எழுந்தருளினார்.
இவர்களை கண்ட அந்தணர்கள் எல்லாம் பயந்து ஓட, சோமாசிமாற நாயனாரும் அவர் மனைவியும் சரியாக இவர்களை அடையாளம் கண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுத்தார்கள்.
அப்போது, தியாகேசன் கமலாம்பாளோடு காட்சி கொடுத்து அருளினார்.
சோமாசி மாற நாயனார் திருவாரூரிலேயே தங்கி தியாகேசர், சுந்தரமூர்த்தி நாயனார் திருவடிகளைப் பணிந்து போற்றி குருவருளும் திருவருளும் பெற்று ஈடு இணையில்லா சிவபதம் அடைந்தார்.
திருமாகாளம் மகாகாளநாதர் கோயிலில் பிராகாரத்தில் சோமாசிமாற நாயனார் அவர் மனைவி சுசீலை தனி சந்நிதி உள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.