Wednesday Dec 18, 2024

சோமலிங்கபுரம் சோமலிங்க சுவாமி திருக்கோயில், திண்டுக்கல்

முகவரி

அருள்மிகு சோமலிங்க சுவாமி திருக்கோயில், சோமலிங்கபுரம், கன்னிவாடி, திண்டுக்கல்-624 705. போன்: +91 99769 62536

இறைவன்

இறைவன்: சோமலிங்க சுவாமி

அறிமுகம்

திண்டுக்கல் மாவட்டம், சிரங்காடு கிராமம், கன்னிவாடி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அரிகேச பர்வத மலையில் மெய்கண்ட சித்தர், வாழையானந்த சித்தர், குண்டலி சித்தர், முத்தானந்த சித்தர் ஆகியோர் தங்களுக்கு சிவனருள் கிடைக்கவும், சித்துக்கள் கைகூடவும் மலைப்பகுதியில் தவமிருக்க ஆயத்தமாயினர். இதற்காக இங்கு வந்தவர்கள் மலையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அவர்களுக்கு அருளிய சிவன் இங்கேயே எழுந்தருளினார். இவருக்கு சோமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது.இறைவன் எம்பெருமான் சிவபெருமானை சோமலிங்க சுவாமியாக பிரதிஷ்டை செய்து வணங்கிய புண்ணிய ஸ்தலம் ஆகும். கோரக்கர் எழுதிய மலைவாகடம் என்ற நூலில் இருந்து இம்மலையில் சித்தர்கள் வாசம் செய்திருக்கிறார்கள் என்று தெளிவாகியுள்ளது.பழனியில் முருகனுக்கு நவபாஷாண சிலை வடித்த போகர் சித்தரும் இம்மலையில் தவம் செய்துள்ளார். மெய்கண்ட சித்தர், குண்டலி சித்தர், முத்தானந்த சித்தர், வலையானந்த சித்தர் ஆகியோரால் எம்பெருமான் சிவபெருமானை சோமலிங்க சுவாமியாக எழுந்தருளச் செய்து வணங்கி அருள் பெற்ற புண்ணிய ஸ்தலம். பூர்வ ஜென்மம் தோஷம் நீங்கும் இடம். ஓம் வடிவில் விநாயகர், நந்தி கழுத்தில் சிவலிங்கம் உள்ளது. சித்திரை மாதம் பவுர்ணமி காலங்களில் சித்தர்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி, அவர்களது அரிய விஷயங்களை கூறிக் கொள்வார்கள். அப்படி சந்தித்த இடங்களில் இத்திருக்கோயிலும் ஒன்று. அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள் கிடையாது. கோயில் வளாகத்தில் வேம்பு, வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும் இருக்கிறார். இவருக்கு எதிரே தந்தைக்குரிய நந்தி வாகனம் இருப்பது விசேஷமான அமைப்பு.

புராண முக்கியத்துவம்

நம் முன்னோர்கள் கோயில் வழிபாட்டை மூன்றாக பிரித்து உள்ளார்கள். அந்த முறைப்படி பார்த்தால், மலைக்கோயில், குகைக்கோயில், தரைக்கோயில் என இம்மூன்றும் ஒருங்கே அமைய பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். சித்தர்கள் கண்ட சிவவழிபாடு அருளாளர்களாலும், ஆன்றோர்களாலும் மக்கள் அமைதியுடன் மகிழ்வான வாழ்வு பெற ஓர் உந்து சக்தியாய் அமைக்கப்பட்டதே ஆலய வழிபாட்டு முறையாகும். குறிப்பிட்ட இடங்களில் மனதைக் குவித்து நல் வழிப்படுத்தும் திருவருள் நிரம்ப இருப்பது கண்டு, சித்தர்களும் நம் முன்னோர்களும் அவ்விடங்களில் கோயில்கள் அமைத்து, இறைவன் திருஉருக்களைப் பிரதிஷ்டை செய்து அனைவரும் பயனடையச் செய்துள்ளனர். மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் இம்மூன்றும் இயற்கையாகவே சித்தர்கள் அமைத்து வழிபட்ட புண்ணிய ஸ்தலமாகும். இயற்கை எழில் மிகுந்த மலையடிவாரத்தில் அமைதியான சூழலில் மன அமைதியோடு இறைவனை வழிபட ஏற்ற இடமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கரூரார் ஜலத்திரட்டு என்ற நூலின் மூலமாக போகர் சித்தர் இத்திருக்கோயிலுக்கு வந்த பொழுது, (ஒரு சமயம் அவர் கவுரிபூஜை செய்வதற்காக, தமக்கு அனைத்து அங்கலட்சணங்களும் பொருந்திய பெண் வேண்டுகின்றார். அவருடைய சீடர்களான கொங்கணர், கரூரார் ஆகிய இருவரை பெண்களில் உயர்ந்த ரகமான பத்மினி ரகத்தைச் சேர்ந்த பெண் தேடி சென்ற போது பெண் கிடைக்காத காரணத்தால் அந்த ரக கல்சிலை ஒன்று இருந்ததைக் கண்டு அந்த சிலையை உயிராக்கி கொண்டு சென்றனர். அப்போது போகர் கல் நீ வாடி என்று அழைத்ததின் பேரில் அது நாளடைவில் கன்னிவாடி என்ற ஊர் பெயராக விளங்குகிறது. இதேபோல் திருவிளையாடல் புராணத்தில் எம்பெருமான் பன்றிக் குட்டிகளுக்கு பால் கொடுத்து விட்டு ஆகாய மார்க்கமாக அம்மையும் அப்பனும் செல்லும் போது, அம்மலையின் அழகை பார்த்து அம்மன் தயங்கி நிற்க, அப்பன் ஆடு மயில் வாகனமே ஆறணங்கே, பூவை கன்னிவாடி என்று சொன்னானே வாழும் ஊர் சொல்லலையே, என்று அழைக்க அதுவும் கன்னிவாடி என்று பெயர் வரக் காரணம். இத்தனை பெருமை மிக்க புண்ணியஸ்தலமானது பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அச்சமயம் கேரளாமாநிலம் மூணாறு மாவட்டத்தை சேர்ந்த மாதவன் சுவாமிகள் இத்திருக்கோயிலில் தங்கி பூஜைகள் செய்து 3 வருட காலம் தங்கினார். அச்சமயத்தில்தான் இத்திருக்கோயிலின் எல்லா ஆதாரங்களையும் திரட்டினார். அதன்பின் இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டதென்று அறிந்தார். இத்திருக்கோயிலில் அகத்தியர் முதற்கொண்டு அநேக சித்தர்களும் அருள்தரும் சோமலிங்க சுவாமியை வணங்கி அருள்பெற்றுச் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்தனர். போகருக்கு பெண் தேடி கொங்கணரும், கரூராரும் சென்று கற்சிலையை உயிராக்கி கொண்டு வந்த சமயம் போகர் கற்சிலை என்று அறிந்து கொங்கணருக்கு தவளையாகும்படியும், கரூராருக்கு சித்த பிரமை பிடித்தவராகவும் சாபம் கொடுத்து உள்ளார். அச்சமயத்தில் சித்தர்கள் எல்லோரும் கூடிய போது, கொங்கணரையும், கரூராரையும் காணாமல் புலிப்பாணியை அகஸ்தியர் அவர்கள் எங்கே என்று கேட்க, அதற்கு நடந்த சம்பவங்களை புலிப்பாணி அகஸ்தியரிடம் கூற அதற்கு அகஸ்தியர் அவர்கள் போகரை கோபித்து, நீ நாம் வணங்கும் தமிழ் கடவுளான முகப் பெருமானை நவபாசனத்தில் செய்து முடிக்கும் வரை உனக்கு சித்துப் பலிக்காது என்று கூறி சாபம் விட்டார். அதற்கு போகர் அகஸ்தியரை வணங்கி எனக்குச் சித்து பலிக்கவில்லை என்றால் நான் இந்தப் பணியை எப்படி செய்வேன் என்று வேண்ட அதற்கு அகஸ்தியர் ககன குளிகை என்னும் மூலிகை மாத்திரையை போகரிடம் கொடுத்து, இதை நீ வாயில் போட்டு அடக்கி கொண்டால் ஆகாய மார்க்கமாக பறக்கலாம் என்று கூற, அந்த ககனக்குளிகை மாத்தரையை போகர் பெற்றுக் கொண்டு முருகன் சிலை செய்து சாப விமோசனம் நீங்கியதாக கதை உண்டு.

நம்பிக்கைகள்

இறைவன் சோமலிங்க லிங்க சுவாமியை வணங்கினால் நினைத்த காரியங்களை சித்தி அடையச் செய்வார் என்பது மட்டுமின்றி தடைப்பட்ட கல்வி, திருமணம், மாங்கல்யதோஷம், செவ்வாய் தோசம், மற்றும் குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து வருவதாகவும் நவக்கிரக தோஷங்களும், பூர்வ ஜென்ம தோஷங்களும் நிவர்த்தியாகி வருகின்றன என்று பக்தர்கள் ஏராளமானோர் பிரார்த்திக்கின்றனர். நீண்ட நாட்கள் திருமணம் தடையை நீக்க இத்திருக்கோயில் பிரதோஷ காலத்தில் வில்வமாலை அணிவித்து வழிபாடு செய்தால் திருமணம் கைகூடுகின்றன. சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

மலையின் சிறப்பு: அரிகேசபர்வதம் என்னும் மலையின் அடிவாரத்தில் அமைந்த கோயில் இது. சிவலிங்கம் போன்று அமைந்த குன்றுக்கு, ஆதிசேஷன் என்னும் நாகம் குடைபிடிப்பது போல அமைந்த மலை இது. பாறையை ஒட்டி சிறிய சன்னிதியில் சிவன் காட்சி தருகிறார். பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது. பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது. வயிற்று வலி, தீராத நோயால் அவதிப்படுவோர் நிவர்த்திக்காக இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச் செல்கின்றனர். தீப வடிவ குகை: சோமலிங்கசுவாமி சன்னிதிக்குப் பின்பறம், மெய்கண்டார் தவம் செய்த குகை உள்ளது. பாறையில் இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர். மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை,பிரதோஷ விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றனர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சோமலிங்கபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டுக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top