சேந்தமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
சேந்தமங்கலம் கைலாசநாதர் சிவன்கோயில்,
சேந்தமங்கலம், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614708.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
பார்வதி
அறிமுகம்:
மன்னார்குடியின் நேர் கிழக்கில் செல்லும் திருக்கொள்ளிக்காடு சாலையில் திருவண்டுறை, குன்னியூர் தாண்டி கோரையாற்றின் தென் கரையிலே சேந்தமங்கலம் உள்ளது. மன்னார்குடியில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது. இவ்வூர் ஒரு வரலாற்று பெருமைகளை தன்னகத்தே கொண்ட ஒரு ஊராகும். இங்கு ஒரு சிவன் மற்றும் ஒரு பெருமாள் கோயில் இரண்டும் உள்ளன. இக்கோயிலில் இரண்டாம் இராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோரது கல்வெட்டுக்கள் உள்ளன. விளக்கு தானம் உற்சவமூர்த்தி தானம் செய்த தகவல்கள் விரிவாக உள்ளன.
சிவன்கோயில் பல சிதைவுகளின் பின்னர் மீண்டும் புது பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இவ்விரு கோயில்களின் காலம் 11 ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 12ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை எனலாம். இக்கோயில் இறைவன் – கைலாசநாதர் இறைவி- பார்வதி கிழக்கு நோக்கிய திருக்கோயில், சமீபத்தில் குடமுழுக்கு கண்டுள்ளது. கோயிலின் எதிரில் ஒரு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. பெரிய சுற்றுசுவற்றுடன் கோயில் அமைந்துள்ளது நடுவில் கருங்கல் திருப்பணியாக கருவறை முகப்பு மண்டபத்துடன் அமைந்துள்ளது கோயில். அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார்.
முகப்பு மண்டபத்தின் வெளியில் நந்தி தனி மண்டபத்தில் உள்ளார். அதுபோல் அம்பிகையின் எதிரில் உயர்ந்த ஒரு மேடையில் விநாயகர் இருப்பது ஏன் என தெரியவில்லை. இறைவனின் கருவறை கோஷ்டங்களில் அழகிய தக்ஷ்ணமூர்த்தியும், அவரின் கீழே பழமையான சனகாதியரும் உள்ளனர். பின்புறம் லிங்கோத்பவரும், வடக்கில் பிரம்மனும் துர்கையும் உள்ளனர். சண்டேசர் வழமையான இடத்தில உள்ளார். பிரகார தெய்வங்களாக விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன் தனி சிற்றாலயங்களில் உள்ளனர். முருகனை ஒட்டி சிறிய சன்னதியில் மகாலட்சுமி கையில் தாமரைகள் கொண்டு உள்ளார். கருவறையின் நேர் பின்புறம் ஒரு பெரிய வேம்பின் கீழ் நாகர் ஒரு மாடத்தில் உள்ளார். வடகிழக்கில் பெரிய பைரவர் மேற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். அருகில் ஒரு சிறிய மண்டபத்தில் இரு லிங்கமூர்த்திகள் உள்ளனர். அருகில் சந்திரன் ஒரு மாடத்தில், மறுபுறம் சூரியன் ஒரு மாடத்தில். உள்ளனர். வடகிழக்கில் ஒரு கிணறு ஒன்றும் உள்ளது. நித்ய பூஜைகள் நல்லமுறையில் நடந்து வருகின்றன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
11-12 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சேந்தமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருவாரூர்