சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் திருக்கோயில்

முகவரி
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் திருக்கோயில், சாந்தோம் சாலை, எம்.ஆர்.சி. நகர், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை மாவட்டம் – 600 028
இறைவன்
இறைவன்: ஐயப்பன்
அறிமுகம்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவில் என்பது ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இது சென்னையின் கடலோரப் பகுதியான ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
ஐயன் ஐயப்பனின் தீவிர பக்தரும், ஐயப்பமார்களுக்கு வழிகாட்டும் குருசாமியுமான அந்த அன்பரின் பெயர் சம்பத்குமார். தமிழகத்தின் மிகப்பெரிய வணிகக் குழுமம் ஒன்றில் ஆடிட்டராகப் பணிபுரிந்தவர். ஒருநாள் அவரது எண்ணத்தில் புகுந்து ஒரு சிந்தையை விதைத்தான் சபரிமலைவாசன். ஆம்! அவருடைய முதலாளியிடம் சென்று, `மாலையணிந்து சபரிமலைக்குப் புறப்படு’ என்று உத்தரவு கொடுக்கச்சொல்லும்படி ஆடிட்டரைப் பணித்தான் ஸ்வாமி ஐயப்பன். `முதலாளிக்கு நான் உத்தரவிடுவதா…’ என்று முதலில் ஒரு தயக்கம் உண்டானாலும், `உலகுக்கே முதலாளி ஐயன். இது அவன் இட்ட உத்தரவு. நாம் கருவி மட்டுமே’ எனும் சிந்தனை மேலோங்க, முதலாளியிடம் சென்று ஒரு குருசாமியாய் உத்தரவு கொடுத்தார்… “இந்த வருடம் மாலையிட்டு சபரிமலைக்கு வா’’ என்றார். தெய்வச் சன்னதம் வந்தவர்போல் ஆடிட்டர் சம்பத்குமார் உத்தரவிடும் தொனியில் பணிக்க, அவர் சொன்னதை ஐயனின் கட்டளையாகவே கருதி சபரிமலைக்குச் செல்ல சம்மதித்தார் முதலாளி. அந்த வருடம் சம்பத்குமார் கையாலேயே மாலையணிந்து, அவரையே குருசாமியாக ஏற்று, மலைக்குப் புறப்பட்டார் அந்தத் தனவான். அவர் வேறுயாருமல்ல, தமிழகம் நன்கு அறிந்த ராஜா சர் எம்.ஏ.முத்தையா செட்டியாரின் புதல்வர் ராமசாமிச் செட்டியார். 1973-ம் ஆண்டு, மாலையணிந்து முறைப்படி விரதமிருந்து சபரிமலைக்குச் சென்றவருக்கு, சபரிமலை ஸ்வாமி ஐயப்பனின் சந்நிதியில் அவனருளால் ஓர் ஆவல் எழுந்தது. ‘அனைத்து பக்தர்களும் பயன்பெறுமாறு இதுபோன்றதொரு கோயிலைச் சென்னையில் கட்ட வேண்டும்’ என்பதுதான் அது. இதற்காகவே அந்த ஐயன் அவரை தன் சந்நிதிக்கு வரவழைத்திருப்பான் போலும்! அங்குவைத்தே தனது விருப்பத்தைக் குருசாமியிடம் பகிர்ந்துகொண்டர் ராமசாமிச் செட்டியார். `எல்லாம் ஐயனின் திருவுள்ளம்’ என்பதை அறிந்த குருசாமி சம்பத்குமார், மனதார வாழ்த்தினார். ஊர் திரும்பியதும், தன் தந்தையிடம் அனுமதியும் ஆசியும் பெற்றார் ராமசாமிச் செட்டியார். விரைவில் தேவையான நிலம் ஒதுக்கப்பட்டு, ஐயனின் கோயிலுக்கான கால்கோள்விழா நடத்தப்பட்டது. திருக்கோயில் அமைப்பு சபரிமலை சந்நிதானத்தைப் போன்றே அமையவேண்டிய அவசியத்தைச் சொல்லி, திறமையான ஸ்தபதி களிடம் திருப்பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அவர்களும் பலமுறை சபரிக்குச் சென்று ஆராய்ந்து, அற்புதமாக ஓர் ஆலயத்தைச் சென்னையில் உருவாக்கினர். இந்தத் திருக்கோயிலில் குடிகொள்ளப்போகும் மூலவர் திருமேனியைச் செய்யும்படி, நாகர்கோவிலைச் சேர்ந்த ‘பட்டன் ஆசாரி’ எனும் சிற்பியிடம் வேண்டிக்கொண்டனர். அவரும் பாரம்பர்ய முறைப்படி, ஐம்பொன் உலோகங்களை உரிய அளவில் சேர்த்து உருக்கி வார்த்து, மிக அற்புதமாக ஐயன் ஐயப்பனின் திருமேனியைச் செய்து கொடுத்தார். அந்த ஐயப்ப ஸ்வாமி 25.1.81 அன்று சிறப்பு ஆராதனைகளை ஏற்றுக்கொண்டு, நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு தன் அருள் உலாவைத் தொடங்கினார். தமிழகம் முழுவதுமுள்ள திருத்தலங்கள் வழியே சுமார் 7,000 கி.மீ தூரம் பயணம் செய்து, 9.2.1981 அன்று சென்னையை வந்தடைந்தார் ஸ்வாமி ஐயப்பன், ராஜா அண்ணாமலைபுரம் ஆலயத்தில் மிக அற்புதமாய் எழுந்தருளினார். ஐயனோடு கன்னிமூலை கணபதி, நாகராஜா, மஞ்சமாதா, சின்னக்கடுத்த சாமி, கருப்பாயி, பெரியகடுத்த சாமி ஆகிய தெய்வங்களும் இங்கு சந்நிதி கொண்டுள்ளனர். 29.1.82 அன்று சிருங்கேரி சாரதாபீடம் ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகள் இருவர் முன்னிலையிலும் வேதம் முழங்க, துதிப் பாடல்கள் ஒலிக்க, மங்கல வாத்திய இசையுடன் குடமுழுக்கு விழா இனிதே நடந்தேறியது. மகிமை வாய்ந்த இந்தத் தலத்தை ‘வடசபரி’ என்று ஆன்றோர்கள் போற்றினர். ஆகம முறைப்படி ஆலயத்தின் 2-வது குடமுழுக்குவிழா 1994 – ம் ஆண்டிலும் 3-வது குடமுழுக்குவிழா 2008-ம் ஆண்டிலும் நடைபெற்றது. 3-வது குடமுழுக்கு விழாவினை, சபரிமலை கோயிலின் பிரதான தந்திரி பிரம்மஸ்ரீ டி.கே.மஹேஸ்வரன் வந்திருந்து சிறப்பாக நடத்திக்கொடுத்தார். அந்தத் தருணத்தில் ஐயனுக்கு வெள்ளி ரதமும் தங்க ரதமும் சமர்ப்பிக்கப்பட்டன.
சிறப்பு அம்சங்கள்
“காலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 5.30 மணியளவில் கணபதி ஹோமம் நடைபெறும். தினமும் கணபதி ஹோமம் நடைபெறுவது, இந்தக் கோயிலின் விசேஷங்களில் ஒன்று. தினமும் ஆறுகால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இரவு 9 மணிக்கு ஹரிவராசனம் பாடி, பானக நைவேத்தியம் செய்து நடை சாத்தப்படும். கார்த்திகை மாத மண்டலபூஜை இங்கு விசேஷம். தினமும் நெய் அபிஷேகம் நிகழும். மார்கழி 6-ம் தேதி, சபரிமலை தந்திரிகள் வந்திருந்து கொடியேற்றம் செய்வார்கள். ஒரு வாரத்துக்கு உற்சவம் நடக்கும். சபரிமலையில் நடைபெறுகிற வைபவங்கள் அனைத்தும் இங்கும் நடைபெறுகிறது. “48 நாள்கள் விரதமிருந்து இங்குள்ள ஐயப்பனை வழிபட்டு மகிழ்கின்றனர் பக்தர்கள். ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் இங்கு வந்து ஐயனை தரிசித்துச் செல்கிறார்கள் ஐயப்பமார்கள். மிகப்பெரிய தங்க ரதம் இங்கே இருக்கிறது. பிரம்மோற்சவ காலத்தில் ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி நகரில், வெள்ளி ரதத்தில் ஸ்வாமியின் திருவீதியுலா சிறப்பாக நடைபெறும். தங்கத் தேரில் பவனி வருகிறான்… கோயில்களில் காணப்படும் தேரினை நடமாடும் கோயில் என்று கூறுவது வழக்கம். வடசபரியில் உள்ள தங்கத்தேர் 11.1 அடி உயரம் கொண்டது. பந்தளராஜன் குழந்தை வரம் வேண்டி சிவனாரை வழிபடும் காட்சி, ஐயப்பன் புலிப் பால் கொண்டு வரும் காட்சி, ஐயனுக்குப் பந்தள மகாராஜா கோயில் கட்டித் தருவது போன்ற சம்பவங்கள், இந்தத் தங்க ரதத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. ரதத்தின் 18 துாண்களிலும் தூணுக்கு ஒன்றாக அமைந்து `வியாழங்கள்’ (உருவில் யாழி போன்ற மிருகங்கள்) ரதத்தைத் தாங்கி நிற்கின்றன. நாள்தோறும் இங்கு நடைபெறும் தங்க ரத பவனி சேவையை தரிசித்தால், சகல நன்மைகளும் உண்டாகும் என்கின்றன பக்தர்கள்.
திருவிழாக்கள்
கோவிலில் திருவிழாக்கள் கார்த்திகை முதல் நாள் (நவம்பரில்) மண்டல பூஜைகள் மற்றும் பிரம்மோத்ஸவத்துடன் தொடங்குகின்றன. கோயிலில் உள்ள பூஜைகள் சபரிமலையில் உள்ள விதிகளின்படி செய்யப்படுகின்றன, வித்தியாசம் என்னவென்றால், சபரிமலை கோயில் ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே திறந்திருக்கும், அதே சமயம் ராஜா அண்ணாமலைபுரம் கோயில் பக்தர்களுக்காக ஆண்டு முழுவதும் பகல் வேளையில் திறக்கப்பட்டுள்ளது.
காலம்
1982
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராஜா அண்ணாமலைபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மந்தவெளி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை