செட்டிபுண்ணியம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள்(ஹயக்ரீவப் பெருமாள்) திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில் (ஹயக்ரீவப் பெருமாள்), செட்டிபுண்ணியம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் — 603 204. போன்: +91 8675127999
இறைவன்
இறைவன்: ஸ்ரீ வரதராஜப் பெருமாள் / தேவநாத சுவாமி / ஹயக்ரீவர் இறைவி: ஹேமபுஜ நாயகி
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகருக்கு அருகிலுள்ள செட்டிபுண்ணியம் கிராமத்தில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஹயக்ரீவர் கோயில் என்றும் தேவநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும், கல்வி மற்றும் அறிவாற்றலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் யோக ஹயக்ரீவர் கோயில் என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. மூலவர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் என்றும், உற்சவர் தேவநாதப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் கோயில் மூன்று பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள தாயார் ஹேமபுஜ நாயகி என்று அழைக்கப்படுகிறார். ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது. கல்வியைத் தொடங்கும் முன் அல்லது எந்த வேதம் படிக்கும் முன் சரஸ்வதி தேவியை வழிபடுவது போல, வைஷ்ணவ மரபில், புனித மற்றும் உலகப் பாடங்களைப் படிக்கத் தொடங்கும் போது ஹயக்ரீவரின் ஆசிகள் பெறப்படுகின்றன. சிங்கப்பெருமாள் கோயிலுக்குப் பிறகு ஜிஎஸ்டி சாலையின் மேற்கே தாம்பரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் செட்டிபுண்ணியம் கிராமம் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவநாத பெருமாள் கோவிலில் வரதராஜப்பெருமாள் மூலவராக இருந்து சேவை சாதித்து வருகிறார். கடந்த 1848-ம் வருடம் திருவஹிந்தபுரத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்ட தேவநாத பெருமாளும், ஹயக்ரீவரும்,மற்றும் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமரும் பக்தர்களுக்கு உற்சவர்களாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதில் குதிரை முகம் கொண்ட யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருக்கிறார்.
நம்பிக்கைகள்
கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். இங்கு புதன் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இவருக்கு ஏலக்காய் மாலை சார்த்தி வழிபடுகிறார்கள். இவரை வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்திகூடும் என்பதுடன் தேர்வு எழுதும்போது துணை நிற்பார் என்பதால் பள்ளி கல்லூரி மாணவ,மாணவியர் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப்போகும் பேனாவுடன் இங்கு வந்து ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து அவரது ஆசீர்வாதத்துடன் எடுத்து செல்கின்றனர். பல ஆண்டுகளாக இது தொடர்வதாலும், வந்து சென்ற மாணவ,மாணவியர் பலன் பெற்றதாலும் தேர்வு நேரத்தில் அதுவும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவ,மாணவியர் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோவில் என்றே இது பெயர் பெற்றுவிட்டது. இத்தலத்து ராமர் சிலையின் கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுகிறது. இதுபோல் வேறெந்த ராமர் சிலையும் அமையவில்லை. தாடகைவதத்தின்போது ராமருக்குத் திருஷ்டி படாமலிருக்க விஸ்வாமித்திர முனிவர் இந்த ரட்சையைக் கட்டினார் என்று கூறுகிறார்கள். செட்டிபுண்ணியம் தலத்துக்குச் சென்று, ஸ்ரீயோகஹயக்ரீவரையும், ஸ்ரீதேவநாத சுவாமியையும், தாயாரையும், சீதா ராமரையும் வழிபட, குடும்பத்தில் அறிவும் ஞானமும் பெருகும். ஸ்வாமி ஸ்ரீதேசிகனுக்கு ஸ்ரீஹயக்ரீவர் பிரத்தியட்சமாகக் காட்சியளித்து, சகல கலையிலும் கல்வியிலும் மேன்மையடைய அருள்புரிந்தார்.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத்துடன் புதன், வியாழன், சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செட்டிபுண்ணியம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிங்கபெருமாள் கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை