செங்கல்பட்டு ஸ்ரீ கணையாழி ஆஞ்சநேயர் திருக்கோயில்
முகவரி :
அருள்மிகு ஸ்ரீ கணையாழி ஆஞ்சநேயர் திருக்கோயில்,
செங்கல்பட்டு மாவட்டம் – 603001.
இறைவன்:
ஸ்ரீ கணையாழி ஆஞ்சநேயர்
அறிமுகம்:
காஞ்சிபுரத்திற்கு அருகாமையிலுள்ள “செங்கழுநீர்பட்டு’ என்று புராதனப் பெயர் கொண்ட செங்கல்பட்டு நகரி ன் மையப் பகுதியில் ஸ்ரீ ராம பக்தரான ஜெய்ஹனுமான், “ஸ்ரீ கணையாழி ஆஞ்சநேயராக அவதரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் பிரதான சாலையில் தென் திசையை நோக்கியவாறு ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயம் காலை மாலை இருவேளையிலும் திறந்திருக்கும். இத்திருக்கோயிலில் தற்போது திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றன.
புராண முக்கியத்துவம் :
சீதையை ராவணன் இலங்கையில் சிறை வைத்திருந்த போது ராமபிரான், சீதையை காணும் பொருட்டு, அவரது பணியாள் என்பதற்கு அடையாளமாய் தமது கணையாழியை கொடுத்து வாயுபுத்ரனை அனுப்பி வைத்தார். அஞ்சனை மைந்தன் ஆகாய மார்க்கமாய் இவ்வழியே செல்லும் போது தடாகம் ஒன்றைக் கண்டார். அத்தடாகத்தில் சிறிது இளைப்பாறும் பொருட்டு வானிலிருந்து கீழிறங்கி தடாகத்தில் அமர்ந்து சிரமபரிகாரம் மேற்கொண்டார்.
மோதிரத்தை இத்தலத்தில் வைத்ததாகவும், அதன்பின்னர் இலங்கையை அடைந்து சீதாப்பிராட்டியிடம் காண்பித்ததாகவும், இத்தலபுராணம் தெரிவிக்கின்றது. ஆலயமானது சில நூற்றாண்டுகளாகவே வழிபாட்டில் இருந்து வருவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆரம்ப காலத்தில் இத்தலத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி மட்டுமே இருந்துள்ளது. பிற்காலத்தில் பக்தர்களின் கைங்கர்யத்தினால் பெரிய ஆலயமாக உருவாகியுள்ளது. ஆஞ்சநேயர் கோயிலின் அருகேயே அருள்மிகு நாகேஸ்வரி அம்மனும் குடி கொண்டுள்ளார். இவ்விரு சந்நிதிகளும் இணைந்து ஒரே ஆலயமாக காணப்படுகின்றது. கணையாழி ஆஞ்சநேயர், நின்ற நிலையில் இருதிருக்கரங்களுடன் வலது கரத்தில் ராமபிரான் தந்த கணையாழியையும் இடது கரத்தினை ஊரு ஹஸ்தமாகவும் கொண்டு அருள்புரிகின்றார்.
காலம்
800 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள இரயில் நிலையம்
செங்கல்பட்டு
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை