சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம் – 609110.
இறைவன்
இறைவன்: நாகேஸ்வரமுடையார் இறைவி: பொன்னாகவல்லி
அறிமுகம்
சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், சீர்காழி என்னும் ஊரில் அமைந்துள்ள கோயிலாகும். சிதம்பரத்திலிருந்து சீர்காழிக்குச் செல்லும்போது சீர்காழி நகர எல்லையிலேயே இடதுபுறம் சாலையோரத்திலேயே கோயில் உள்ளது. நாகேச்சரம் கோயில் என்று வழங்குகிறது. (கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்பது வேறு. அது பாடல் பெற்ற தலம்). கருவறையில் இறைவன் நாகேஸ்வரமுடையார், லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, அம்பாள் பொன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். கோயிலானது மூன்றுநிலை ராஜகோபுரம், அழகான வேலைப்பாடுகளுடன் மகா மண்டபம், அர்த்தமண்டபம், அதனையடுத்து கருவறை என அமைந்துள்ளது. ராகு, கேதுவுக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்னீ வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள். தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், கடவுள் வள்ளி- தெய்வானையுடனும், வடமேற்கு திசையில் சூரியன், விநாயகர், பைரவர், தென்கிழக்கு திசையில் வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் காட்சி தருகின்றனர். தல விருட்சமான வேம்பின் கீழ் நாகதேவதைகள் வீற்றிருக்கின்றனர். இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தினை உண்பதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி எழுந்தது. மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார். தேவர்கள் மோகினி உருவில் வந்திருப்பது மகாவிஷ்ணுஎன உணர்ந்துகொண்டனர். ஆனால் அசுரர்களோ மோகினியின் அழகைக் கண்டு மதி மயங்கினார்கள். இந்நிலையில் ஸ்வர்பானு என்ற அசுரன் மட்டும் சற்று சுதாரித்தபடி தானும் தேவ வடிவத்தை எடுத்து சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று அமிர்தத்தை வாங்கி உண்டான். சூரிய, சந்திரர் அதனைச் சுட்டிக்காட்ட, மகாவிஷ்ணுதன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அசுரன் ஸ்வர்பானுவின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலையானது சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடலானது சீர்காழி அருகே உள்ள செம்பாம்பின்குடி என்ற செம்மங்குடியிலும் விழுந்தது. ஆனால் அந்த அசுரன் தேவாமிர்தத்தை உண்டு விட்டதால் அவனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக உருவெடுத்தது. இந்த இரு பாம்புகளும் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு சிவபெருமானை தியானித்து கடுமையாக தவம்புரியத்தொடங்கின. உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது இரண்டு நாகங்களும் தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரர்களை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் வலிமையையும் வழங்கி அருளுமாறு வேண்டினர். ஆனால் சிவபெருமானோ சிரித்தபடி, சூரிய, சந்திரர்கள் உங்களுக்கு பகைவர்கள்தான். ஆனால் அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே அமரபட்சம்; அமாவாசை, பவுர்ணமி, கிரகண நாட்களில் நீங்கள் சூரிய, சந்திரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றபடி வரம் அளித்தார். உடனே அதே இடத்தில் அசுரத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்புத்தலையும், அசுர உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அதன்பின்னர் ராகு நாகேஸ்வரமுடையார் வழிபட்டு கிரக பதவியை அடைந்தார் என்கிறது இத்தலத்தின் வரலாறு.
நம்பிக்கைகள்
பதினோறாவது வார முடிவில் தோஷ நிவர்த்தி செய்பவர்கள் அன்னதானம் செய்வது உத்தமம். இதனால் ஜனனகால ஜாதகத்தில் ராகுபகவான் பாதகமான இடத்தில் அமைந்ததால் ஏற்படக்கூடிய திருமணத்தடை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை! அன்றாட ராகுகால வேளையில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை4.30 மணியளவில் இக்கோயிலில் உள்ள விநாயகர், சுவாமி அம்பாள் ஆகியோரை வணங்கியபின், ராகுபகவானின் சன்னதியில் மாக்கோலமிட்டு தோல்நீக்காத முழு உளுந்து பரப்பி, அதன்மீது நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் மற்றும் மந்தாரை மலர்களால் பூஜிக்க வேண்டும். அதோடு ராகுபகவானின் சன்னதியை வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணம்) ஒன்பது முறையும் அடிபிரதட்சணம் செய்து பதினொரு வாரங்கள் வழிபடவேண்டும்.
சிறப்பு அம்சங்கள்
அமிர்தம் உண்டதால் இறவாத்தன்மையும், தேவ மகிமையும் கொண்ட ராகுபகவான் நாகதோஷங்களை நீக்குவது இத்தலத்தின் மகிமை! இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனம் பஞ்சத்தால் வாடிப்போக, அதற்கு நீர் வார்க்கும் பொருட்டு விநாயகர் காக வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியை கவிழ்த்துவிட, அந்த நீரானது கழுமல நதியாக பெருகி ஓடியது. மேற்கு திசையில் ஓடும் கழுமல நதிதான் இக்கோயிலின் தீர்த்தம் என்கிறார்கள் புராணம் அறிந்தவர்கள். சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்னீவரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள்.
திருவிழாக்கள்
புரட்டாசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி, மாசி, சித்திரை மாதம் அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி, சித்திரை வருடபிறப்பு திருவிழாக்களாக நடைபெறுகின்றன. ராகு கேது பெயர்ச்சியும் இங்கு நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி