Saturday Jan 18, 2025

சிவயநம என்று கூறுவதன் பொருள் அறிவோம்!

சிவபெருமானை போற்றும் திருநாமம், ‘சிவாய நம’ என்பதாகும். அந்த சிவ மந்திரத்தின் மகிமை மற்றும் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சிவ மந்திரத்தின் மகிமையை பிரம்மதேவன், நாரதருக்கு உணர்த்திய அற்புத நிகழ்வை இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு சமயம் நாரதர், பிரம்மாவிடம் சென்று, “தந்தையே சிவ நாமங்களில் உயர்ந்தது சிவாய நம என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கியருள வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு பிரம்ம தேவன், “நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உனது சந்தேகத்தைக் கேள்” என்றார். நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று, தனது சந்தேகத்தைக் கேட்டார். நாரதர் இதைக் கேட்டதும் அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. இதைப் பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிச் சென்று, “தந்தையே சிவாய நம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்” என்றார்.

அதைக் கேட்ட பிரம்மா, “நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் போய் கேள். அது பதிலளிக்கும்” என்று சிரித்தபடியே கூறினார்.

அதன்படியே நாரதரும் ஆந்தையிடம் சென்று இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதேபோல கீழே விழுந்து உயிர் விட்டது. நாரதர் பதறிவிட்டார். உடனே பிரம்மாவிடம் சென்று, “என்ன இது சோதனை” என்று கேட்டார்.

பிரம்மா, ”நாரதா! இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் முயற்சி செய்துவிட்டு நீ கிளம்பலாம். அதோ அந்த அந்தணர் வீட்டில் இப்போதுதான் பிறந்துள்ள அந்தக் கன்றுக் குட்டியிடம் போய் கேள். அது பதிலளிக்கும்” என்றார்.

”தந்தையே, கன்றுக்கு ஏதாவது ஒன்றானால் அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம்” என்று பயந்து நடுங்கினார் நாரதர்.

”பயம் வேண்டாம்” என்று பிரம்மா தைரியம் கூறி, நாரதரை அனுப்பி வைத்தார்.

நாரதரும் கன்றிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டார். அப்போதுதான் பிறந்த அந்தக் கன்றும் இதைக் கேட்ட உடனே உயிரை விட்டது.

நாரதர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ‘இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது? பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால், இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும்?’ என நினைத்தார் நாரதர்.

அப்போது அங்கு வந்த பிரம்மா, நாரதரிடம், “கன்றும் இறந்து விட்டதா? சரி பரவாயில்லை, இந்த நாட்டு மன்னனுக்கு இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்” என்றார்.

“பிரம்ம தேவா என்ன இது? அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால் மன்னன் என்னைக் கொன்றே விடுவான்” என்றார் நாரதர். இருந்தாலும் பிரம்மா விடவில்லை. “இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவுதான். அதனால் குழந்தையிடம் போய் கேள். பொருள் நிச்சயம் தெரியும்” என்றார்.

நாரதர், கை கால் நடுங்க அந்த அரச குழந்தையிடம் சென்று இதைக் கேட்டார். உடனே அந்தக் குழந்தை பேசியது, “நாரதரே இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன், அதன்பின்னர் கன்றானேன், இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப் பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்” என்று அந்தக் குழந்தை கூறியது.

அந்தக் குழந்தை மேலும் கூறியது, “சிவாய நம என்பதை, ‘சிவய நம’ என்றே உச்சரிக்க வேண்டும். ‘சி’ என்றால் சிவம், ‘வ’ என்றால் திருவருள், ‘ய’ என்றால் ஆன்மா, ‘ந’ என்றால் திரோத மலம், ‘ம’ என்றால் ஆணவ மலம். திரோத மலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோத மலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சிவாய நம என்று உள்ளம் உருக கூறினால், இந்தப் பிறவியில் இருந்து அவர் விடுபடுவார்” என்றது அந்தக் குழந்தை.

இதைக் கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார். பிறவிப் பிணியில் இருந்து விடுபட, ‘சிவாய நம’ என்போம், ஈசனின் திருவடிகளை அடைவோம்!

References:

https://kalkionline.com/lifestyle/spirituality/let-us-know-the-meaning-of-shivaya-nama

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top