Saturday Nov 16, 2024

சிதறால் சமணக் கோயில், கன்னியாகுமரி

முகவரி

சிதறால் சமணக் கோயில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி – 629151

இறைவன்

இறைவன்: தீர்த்தங்கரர்

அறிமுகம்

சிதறால் சமணக் கோயில் (Chitharal Jain Monuments), இதனை உள்ளூர் மக்கள் சிதறால் குகைக் கோயில் என்றும், சிதறால் பகவதியம்மன் கோயில் என்றும் அழைப்பர். சிதறால் மலைக் கோவில் (Chitharal Jain Monuments) கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இருக்கும் மிகப் பெரிய குகைக்கோவிலாகும். நாகர்கோவிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. இந்த கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. இந்த குகைக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பகவதி கோயிலாக மாற்றப்பட்டது. எனினும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள் மற்றும் உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. நூற்றாடண்டு பழமை வாய்ந்த இந்த சமண மதக் கோவிலில் மகாவீரர், மற்றும் 23 தீர்த்தங்கர்களின் சிலைகள் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப் பின் இன்று வரை பல நூற்றாண்டுகள் சிதறால் கோவில் பராமரிப்பின்றி கிடக்கின்றது.

புராண முக்கியத்துவம்

இக்குடைவரைக் கோயில்கள் திகம்பர சமணப் பிரிவினர் நிறுவியதாகும். முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (610-640) காலத்தில், சிதறால் கிராமப் பகுதி, சமணர்களின் செல்வாக்கு செழித்திருந்தது. இக்குடைவரைக் கோயில் மண்டபம், முற்றம், பலி பீடம், சமையல் அறைகள் கொண்டது. இங்குள்ள மூன்று முக்கிய சந்நதிகளின் நடுவில் மகாவீரர் சிற்பமும், இருபுறங்களிலும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி தேவியின் சந்நதிகள் உள்ளது. இக்குடைக் கோயில் அருகில் இயற்கையில் அமைந்த குளம் உள்ளது. கிபி 13ஆம் நூற்றாண்டில் இச்சமணக் குடைவரைக் கோயிலில், பகவதியம்மனை பிரதிஷ்டை செய்து இந்து சமயக் கோயிலாக மாற்றப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. முன்னர் இக்குடைவரைக் கோயில் சமண சமயத் துறவிகளின் சமயக் கல்விக் கூடமாக விளங்கியதென இங்குள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கூறுகிறது. தற்போது இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது. சிதறால் மலையில் சமணக் குடைவரைக் கோயில், கிமு முதல் நூற்றாண்டு முதல் கிபி ஆறாம் நூற்றாண்டு வரை நிறுவப்பட்டதாகும். இக்குடைவரைக் கோயிலில் சமண சமயத்தின் மகாவீரர், பார்சுவநாதர் போன்ற தீர்த்தங்கரர்கள் மற்றும் பத்மாவதி தேவதையின் சிற்பங்களைச் சுற்றிலும் யட்சர்கள் மற்றும் யட்சினிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களை வழிபடுவிதமாக அம்பிகை, வித்தியாதரர்களின் சிற்பங்கள் உள்ளது. மத்திய சன்னதியின் கோபுரம் மின்னல் காரணமாக அழியப்பட்டிருக்கலாம். இந்த கோயில் இடைக்காலத்தில் கட்டப்பட்டது. மலையின் உச்சியில் மற்றொரு கோயில் போன்ற அமைப்பு (விமனாம்) உள்ளது. இக்கோவில் மொத்தம் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டு, தீர்த்தங்கரர் சிற்பம், தேவி, பார்சுவநாதர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிற்பக் கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் கட்டாயம் ஒருமுறையேனும் இங்கே பயணிக்க வேண்டும். சிதறால் மலைக் குகையின் மேற்கே இயற்கையான குகையில் உள்ள தீர்த்தங்கரர்கள் மற்றும் சிற்பங்கள் இப்பகுதி சமணர்களின் முக்கியத் தலம் என்பதை விளக்குகிறது. ஐந்து தலை நாகம் காக்கும் பார்சுவநாதர், மற்ற சிறு கல்வெட்டுகள், மகாவீரர் சிலை அம்பிகா இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் காட்சி, பறக்கும் வித்யாதாரர் என பல கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன.

திருவிழாக்கள்

ஆண்டுதோறும் அரசு சார்பாக சுற்றுலா விழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 2009-ம் ஆண்டு ஒரு நாள் விழாவாகத் தொடங்கப்பட்ட மலைக்கோயில் சுற்றுலா விழா, 2010ம் ஆண்டு முதல் 3 நாள் விழாவாக மாற்றப்பட்டுள்ளது.

காலம்

9 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்தியாவின் மத்திய தொல்பொருள் ஆய்வு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மார்த்தாண்டம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மார்த்தாண்டம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top