Wednesday Dec 18, 2024

கோ பூஜை சிறப்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

மது நாட்டில், ‘கோ’ எனும் பசுவை தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுவின் அனைத்து உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம்.

உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே பிராணி பசு மட்டுமே. சுத்தம் செய்யக்கூடிய கழிவுப் பொருள் பசுவினது கோமியம் மட்டுமே. கோ வதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் பிராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். ‘தாய் – மாத்ரு’, ‘சிசு – குழந்தை’, ‘ப்ராஹ்மணன்’, ‘கரு’ ஆகியவற்றை நாசம் செய்தால் அதற்குப் பரிஹாரம் இல்லை. அதைப்போல் பசுவைக் கொன்றாலும் அந்தப் பாபத்திற்கு பிராயச்சித்தம் இல்லை.

இவ்வளவு குணங்கள் கொண்ட பசுவை நாம் கடவுளாக வணங்குவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. முதல் கன்று பிரசவித்தவுடன் அதற்கு ‘கோ’ என்று பெயர் கிடையாது. அதற்கு ‘தேனு’ என்று பெயர். ‘தேனுர் நவப்ரஸுதிகா’ என்று அமரகோசத்தில் குறிப்பிட்டுள்ளது. தானத்திற்கோ பூஜைக்கோ தேனுவை உபயோகப்படுத்துவதில்லை என்ற பழக்கம் நடைமுறையில் உள்ளது.

ஆகவே, இரண்டாவது கன்றினை ஈன்ற பசுவான, ‘கோ’வை பூஜிப்பதும், தானம் செய்வதும் அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷத்திற்கும், எல்லா பாபங்களை போக்குவதற்கும் மிகச் சிறந்த பிராயச்சித்தமாக பல தர்ம சாஸ்த்ர நூல்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ் பண்டிகையான பொங்கலன்று, அதாவது மாட்டுப் பொங்கல் நாளன்று கோ பூஜை செய்வது வழக்கமாக நடைமுறையில் இருக்கிறது. பண்டிகை இல்லாமல் காம்யமாகவே கோ பூஜை செய்யலாம்.

கிருஹபிரவேசம் முதலான விசேஷங்களுக்கும் கோ பூஜை உண்டு. கோவினுடைய பாதம் பட்ட வீட்டில் செல்வம் அளவற்றதாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு முறையாவது ஒரு ஜீவ பசுவை தானம் செய்ய வேண்டும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற விசேஷங்களில் கோதானம் என்பது ஓர் அங்கமாகவே இருக்கின்றது. தானம் செய்கின்றபோது, கொம்பு, வால், கழுத்து, குளம்பு, முதலிய இடங்களில் தங்கம், ரத்தினங்கள் சேர்ந்த ஆடை ஆபரணங்களை அலங்காரமாக அணிவித்து வயிற்றுக்கு பட்டு வஸ்த்ரத்தைச் சாத்தி பசுவிற்கு பூஜை செய்து கயிற்றை வாங்குகின்றவர் கையில் கொடுத்து தானம் செய்வது தான விதிகளில் கூறப்பட்டுள்ளது.

கோ பூஜையில் பூமாலை, வஸ்த்ரம் ஆகியவற்றைச் சாத்தி பசுவிற்கு பூஜை செய்வது வழக்கம். மற்ற தேவதைகளுக்குச் செய்யும் உபச்சாரங்கள் கோ பூஜையிலும், எல்லா தேவதைகளுக்கும் பாதங்களிலும், முகத்திலும் செய்யும் உபகாரங்கள் பசுவுக்கு மட்டும் பின்பகுதியில் செய்ய வேண்டும்.

நைவேத்யம் மட்டும் வாய் வழியாகக் கொடுக்க வேண்டும். கோ பூஜையில் காமதேனு என்ற தேவதையை மஹாலக்ஷ்மியின் உருவமாக தியானம் செய்து ஆவாஹனம் செய்து, பிறகு ஜல, கந்த, புஷ்ப, தூப, தீபம் வரை லக்ஷ்மீ மந்த்ரங்களால் உபசாரம் செய்து நைவேத்தியத்தை பசுவையும் சாப்பிடச் செய்ய வேண்டும்.

பசுவின் வாயில் மற்ற தேவதைகள் இருப்பதைப் போல, ‘ஜ்யேஷ்டா’ என்ற கலி தேவதை இருப்பதால் முகத்துக்கு பூஜை உபசாரங்கள் செய்வது விதிக்கப்படவில்லை. இவற்றுடன் சேர்ந்து மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரங்கள் வேதத்தில் இருக்கும் ஸ்ரீஸூக்தம் முதலியவற்றை ஜபம் செய்யலாம். கோ பூஜைக்கு கன்றுக்குட்டியானது பசுவுடன் கூடவே இருக்க வேண்டும்.

நமது நாட்டில் கோ பரிபாலனம், ‘கோ சேவை’ முதலானவை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பசு வதை தடுப்புச் சட்டம் இருக்கின்றது. நேபாளத்தில் தேசிய விலங்காக பசுதான் அறிவிக்கப்பட்டிருந்தது. பகவான் கண்ணபிரானுக்குப் பிடித்த பிராணியே பசுவாகும். அவர் தனது பெயரை ‘கோபால கிருஷ்ணன்’ என்று அழைக்கும்படி செய்தார்.

பழைய காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. ‘பெண்ணாகப் பிறந்தால் பசுவாகப் பிறக்க வேண்டும்’ ஏனென்றால் பால் சுரக்கும் வரையாவது ஒருவரின் ஸம்ரக்ஷணையில் பூஜை புனஸ்கார மரியாதைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கலாம். ஆகையால், கோ பூஜை, தானம், சேவை முதலானவை நமது நாட்டின் பண்பாடாகவே அமைகின்றது.

To book pooja:
https://lightuptemples.com/product/gho-pooja/?city=e-pooja

References:

https://kalkionline.com/lifestyle/spirituality/do-you-know-about-the-special-features-of-ko-pooja

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top