கொழுந்துமாமலை பாலசுப்ரமணியர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி :
அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில்,
கொழுந்துமாமலை, சேரன்மகாதேவி,
திருநெல்வேலி மாவட்டம் – 627414.
போன்: +91 93600 98318
இறைவன்:
பாலசுப்ரமணியர்
அறிமுகம்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொழுந்து மாமலையில் அமைந்துள்ள பாலசுப்ரமணிய சுவாமி கோயில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் பணகுடி சாலையில் சேரன்மகாதேவிக்கு தெற்கே உள்ள மலையில் உள்ளது.
சேரன்மகாதேவி திருநெல்வேலியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொழுந்துமாமலை, சேரன் மகாதேவியிலிருந்து களக்காடு சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. அருகிலுள்ள ரயில் நிலையம் திருநெல்வேலியில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
இப்பகுதியில் வசித்த முருகனின் அடியவர் கனவில் தோன்றிய திருச்செந்தூர் முருகன், சேரன்மகாதேவி கொழுந்துமாமலையில் தங்கி தியானம் செய்யும்படி கட்டளையிட்டார். அந்த அடியவரும் பல காலம் தியானம் செய்து, முருகனைப் பாலகன் வடிவில் தரிசிக்கும் பேறு பெற்றார். பிற்காலத்தில் அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டது. கருவறையில் முருகன் நின்றபடி காட்சி தருகிறார். நான்கு கைகளில் மேலிரு கைகள் ஆயுதம் தாங்கியும், கீழிரு கைகள் வரத, அபயஹஸ்தமாகவும் உள்ளன. வலக்கரத்தில் முருகனுக்குரிய வேல் உள்ளது. பாலகனாக இருப்பதால் பாலசுப்பிரமணியர் என்று பெயர் பெற்றார். மலை அருகில் இருப்பதால் மலைக்கோயில் என்று மக்கள் அழைக்கின்றனர்.
நம்பிக்கைகள்:
தொடர்ந்து ஆறு கடைசி வெள்ளியன்று விரதமிருந்து முருகனை தரிசித்தால் குழந்தைப்பேறு, திருமணம், வேலைவாய்ப்பு போன்ற வேண்டுதல்கள் இனிதே நிறைவேறும்.
சிறப்பு அம்சங்கள்:
வெள்ளி அபிஷேகம்: தமிழ் மாத கடைசி வெள்ளியன்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் இடம்பெறும். அன்று காலை முதல் மாலை வரை கோயில் நடை திறந்திருக்கும். முருகனுக்குரிய சுக்கிரவார விரதம் இருந்து பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து கொள்வர். தொடர்ந்து ஆறு கடைசி வெள்ளியன்று விரதமிருந்து முருகனை தரிசித்தால் குழந்தைப்பேறு, திருமணம், வேலைவாய்ப்புபோன்ற வேண்டுதல்கள் இனிதே நிறைவேறும்.
அனுமனால் வந்த மலை: ராவணனின் மகனான இந்திரஜித் வானர வீரர்கள் மீது நாகாஸ்திரத்தை ஏவினான். அனைவரும் மூர்ச்சை அடைந்து மயங்கினர். அனுமன், வீரர்களைக் காப்பாற்ற மூலிகை பறிக்க வடக்குநோக்கிப் புறப்பட்டார். மூலிகை எதுவென்று தெரியாமல் சஞ்சீவிமலையைக் கையில் தாங்கி திரும்பினார். வரும்வழியில் அம்மலையின் ஒருபகுதி சிதறி பூமியில் விழுந்தது. அப்பகுதியே இங்குள்ள மலையாகும். பசுமையான மூலிகைக் கொழுந்து நிறைந்திருந்ததால் கொழுந்துமாமலை என்று பெயர் பெற்றது.
திருவிழாக்கள்:
கந்தசஷ்டி, கார்த்திகை, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொழுந்துமாமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருநெல்வேலி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம்