கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி திருக்கோயில், ஈரோடு
முகவரி :
கொளாநல்லி பாம்பலங்கார சுவாமி திருக்கோயில்,
கொளாநல்லி,
ஈரோடு மாவட்டம் – 638154.
இறைவன்:
பாம்பலங்கார சுவாமி
இறைவி:
பங்கையர் செல்வி
அறிமுகம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள பழமையான ஆலயமாக திகழ்கிறது கொளாநல்லியில் உள்ள பாம்பலங்கார சுவாமி கோயில். இத்தலத்தின் பெயரை குழாநிலை என்று பழம் பாடல்கள் குறிப்பிடுகின்றன. குழாநிலை என்பதை இன்று கொளாநல்லியாக மருவி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஈரோட்டில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் கொளாநல்லி அமைந்துள்ளது
புராண முக்கியத்துவம் :
கோயிலின் மதில் சுவருக்கு தீப ஸ்தம்பத்திற்க்கும் இடையே காலிங்கராயன் வாய்க்கால் ஓடுகிறது. இதன் மூலம் இக்கோயில் காலிங்கராயன் வாய்க்கால் வெட்டுவதற்கு முன்பு உருவானது என தெரிகிறது. மைசூர் மன்னர் இக்கோயிலுக்கு நிலங்களை வழங்கியுள்ளார். 1956 ஆம் ஆண்டு ஜனவரி 20இல் குடமுழுக்கு கண்ட இக்கோயில் அதன்பின்னர் ஏதேதோ காரணங்களால் கவனிப்பு குறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஈசன் திருவுள்ளப்படி 2017 ஆம் ஆண்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரம்ப காலத்தில் வடக்கு வாசல் வழியே பக்தர்கள் கோயிலுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. 2017ஆம் ஆண்டு நடந்த குடமுழுக்கின் போது வாய்க்காலுக்கு மேலே பாலம் கட்டி கிழக்கு வழியாக கோயிலுக்கு செல்ல வழி செய்துள்ளனர்.
நம்பிக்கைகள்:
பாம்பலங்கார சுவாமியை வழிபட்டால் சர்ப்பதால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை
சிறப்பு அம்சங்கள்:
தீபஸ்தம்பம் காலிங்கராயன் வாய்க்கால் மூன்று நிலை ராஜ கோபுரம் கடந்து சூரிய சந்திரனை தரிசித்து கோவிலுக்குள் செல்லலாம். விசாலமான முன் மண்டபத்தில் இரண்டு நந்திகள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் நால்வர், விநாயகர் மற்றும் உற்சவர் உள்ளனர். கருவறையில் பாம்பு சுற்றிய அடையாளத்தோடு பாம்பலங்கார சுவாமி எழுந்தருளி உள்ளார். சுயம்பு மூர்த்தமாக பூமியில் கண்டெடுக்கப்பட்ட போது பாம்பு சுற்றியிருந்ததால் இப்பெயர் வந்ததாக சிலர் கூறுகின்றனர். இன்றும் இக்கோயிலில் நாகத்தின் நடமாட்டத்தை பக்தர்கள் பலமுறை கண்டுள்ளனர்.
கருவறை கோபுரத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கொங்கு சோழர் காலத்து கல்வெட்டு என வகைப்படுத்தியுள்ளனர். பங்கையர் செல்வி என்ற பெயரில் இறைவி தனிச் சன்னதி கொண்டுள்ளாள். மேலும் மகா கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரரையும் தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொளாநல்லி
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்