கொத்தங்குடி கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், நாகப்பட்டிணம்
முகவரி
கொத்தங்குடி கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், கொத்தங்குடி, கோமல் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் – 609805
இறைவன்
இறைவன்: கோடீஸ்வரர் இறைவி: பிருகன்நாயகி
அறிமுகம்
(1) மயிலாடுதுறையிலிருந்து கோமல் சென்று, அங்கிருந்து தெற்கே சுமார் 3 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து கம்பூர் பேருந்து இக்கோவில் வழியாகச் செல்லும். (2) கும்பகோணம் – காரைக்கால் சாலையில் மாந்தை பிள்ளையார் கோவில் நிறுத்தம் என்ற இடத்தை அடைந்து அங்கிருந்து வடக்கே கோமல் செல்லும் சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம். தேரழுந்தூரிலிருந்தும் 5 கீ.மீ.தொலைவிலுள்ள இத்தலத்தை அடையலாம். அருகிலுள்ள ஊர் கோமல். ஆலயத்திற்கு இரஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயிலுடன் ஆலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சிவன், பார்வதி கைலாயத்தில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்க, அருகில் விநாயகரும், முருகரும் உள்ளனர். இருபுறமும் நாரதரும், மனித உருவில் நந்தியெம்பெருமானும் காட்சி அளிக்கின்றனர். ஆலயம் ஒரு பிராகாரத்துடன் உள்ளது. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி, பாலமுருகர் சந்நிதி ஆகியவை உள்ளன. அடுத்துள்ள முன் மண்டபத்தில் வாயில் வழி உள்ளே நுழைந்தால் வலதுபுறம் தெற்கு நோக்கி அம்பாள் பிருகன்நாயகி சந்நிதியும், நேரே கருவறையில் ருத்திராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி மூலவர் கோடீஸ்வரசுவாமியும் எழுந்தருளியுள்ளார். கருவறை கோஷ்டங்களில் முறையே தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் வெளிப் பிராகாரத்திலுள்ள இரட்டை விநாயகர் சந்நிதி விசேஷமானது. நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்திலுள்ளது. இக்கோயில் சம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
குத்தன் என்றால் எருதுவாகனன் என்று பொருள். எருதை (ரிஷபத்தை) வாகனமாகக் கொண்ட சிவபெருமான் அமர்ந்த ஊராதலால் குத்தங்குடி என்று இத்தலம் பெயர் பெற்றது. ஒரு சிறிய காடாக இருந்த இப்பகுதியின் சடுவே அமைந்த சுயம்பு லிங்கத்தை ஒருவர் வணங்கி வந்ததைக் கண்ட சோழ மன்னன் ஒருவன் ஆலயம் அமைத்தான் எண்பது தல வரலாறு. குத்து என்ற தமிழ் வார்த்தைக்கு நேராக நிற்பது என்பது பொருள். பாம்பின் புற்றும் நேராக நிற்பதால், குத்து என்ற் வார்த்தைக்கு புற்று என்றும் பொருள் உண்டு. எனவே இந்த சுயம்பு லிங்கமானது நாக லோகத்திலிருந்து குத்து போன்று நேரே கீழே இறங்கி வந்ததால் குத்தங்குடி என்று இத்தலம் பெயர் பெற்றது என்றொரு கருத்தும் உண்டு. முன்பு ஒரு சமயம் இத்தலத்திற்கு வந்த ஒரு வயதான தம்பதியருள் மனைவிக்கு அருள் வந்து இந்த சுயம்புலிங்கப் பெருமான் நாகலோகத்திலிருந்து வந்ததாகக் கூறினார். எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் தொடர்ந்து 5 ஞாயிற்றுக்கிழமைகள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். திருமணத் தடைகளும் நீங்கும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோமல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி