கொங்கராயநல்லூர் ஆப்தசகாயேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
கொங்கராயநல்லூர் ஆப்தசகாயேஸ்வரர் சிவன்கோயில், அங்கராயநல்லூர் சாலை, கொங்கராயநல்லூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 621 802
இறைவன்
இறைவன்: ஆப்தசகாயேஸ்வரர் இறைவி: தர்மவர்ஷினி
அறிமுகம்
அம்பர் மாகாளம் திருக்கோயிலின் தென்புறம் செல்லும் சாலையில் 2 கிமி தூரம் சென்றால் இந்த கொங்கராய நல்லூர் எனும் தலத்தினை அடையலாம். இங்கு ஓர் சிவாலயம் உள்ளது. இங்கு கோயில் எப்போது , யாரால் உருவானது என அறிய முடியவில்லை. எனினும் இப்போதுள்ள கோயில் முன்னூறு ஆண்டுகளுக்குள் நகரத்தார் பாணியில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கடந்த நூறாண்டுகளாக இவ்வூரில் வசிக்கும் பிள்ளைமார்களால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது இ.சமய.அறநிலைய துறையினர் வசம் உள்ளது எனினும் பிள்ளைமார்கள் இதற்கென கோயில் மானியம் எனும் பெயரில் நிலம் ஒதுக்கி நிர்வகித்து வந்தனர். இச்சமூகத்தினர் நிலங்களை விடுத்து வெளி பணிக்காக செல்ல ஆரம்பித்ததால் கோயில் பராமரிப்பு, பூஜைகள் நின்று போயுள்ளன.
புராண முக்கியத்துவம்
கோயில் கிழக்கு நோக்கியது, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என நேர்த்தியாக உள்ளது. இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி தர்மவர்ஷினி தென் புறம் நோக்கியும் உள்ளனர். கருவறை வாயிலில் விநாயகரும், முருகனும் உள்ளனர். கோட்டத்து தெய்வமாக தென்முகன் மட்டும் உள்ளார். முப்பது வருடங்களின் முன்னர் சோமயாக பெருவிழாவிற்கு இங்கிருந்தும் சுவாமி புறப்பட்டு அம்பர் மாகாளம் செல்லும். தற்போது திருமேனிகள் திருவாரூர் பாதுகாப்பறையில் வைக்கப்பட்டுவிட்டன. மக்களும் அன்றாட வழிபாட்டிற்கு வருவதில்லை. என்பதே பெரும்பான்மை கிராம- சிறுநகர சிவாலயங்களில் உள்ள நிலை. நில உச்சவரம்பு சட்டம் வந்தவுடன் பெரும்பாலான , சிவவழிபாடு செய்யும் சைவ சமூகத்தினர் கிராமங்களை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். இதனால் கிராமங்களில் அவர்கள் நிர்வகித்த சிவாலயங்களை HR&CE வசம் ஒப்படைத்து விட்டனர். அதன் பின் வந்த அரசு துறை உள்ளூரில் வந்து நெல் வசூல் செய்வதில்லை, அதனால் கோயில் பராமரிப்பு, ஊழியர் சம்பளம், கோயில் தேவைகள் அனைத்தும் நின்றுபோய்விட கோயில்கள் படத்தில் காணும் நிலைக்கு வந்துவிட்டன. எனினும் முன்னோர்கள் காத்து பராமரித்த கோயிலை மீண்டும் மீட்டுக்க எண்ணி திரு. சேகர் என்பவர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது