கூழம்பந்தல் பேசும்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி :
அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்,
கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம் – 631701.
போன்: +91 97879- 06582, 04182- 245 304, 293 256.
இறைவன்:
பேசும் பெருமாள்
அறிமுகம்:
பல வருடங்களுக்கு முன்பு 12 அடி உயர மகா விஷ்ணு சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இப்பெருமாள் “பேசும் பெருமாள்” என்று பக்தர்களின் அழைப்புக்கிணங்க கூழமந்தல் எனும் ஊரில் கோயில் கொண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ளது கூழமந்தல் என்ற ஊர். இவ்வூர் இப்போது சிறிய ஊராக காணப்பட்டாலும், இதனுடைய பெயரும், புகழும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இவ்வூருக்குச் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.
புராண முக்கியத்துவம் :
இந்த பெருமாள் கோயிலுக்கு விளக்கு எரிக்க 14 பணமும், பதினெண்கல நெல்லும் தெலுங்குச்சோழ மன்னர்கள் வழங்கினர். சூரியன், சந்திரன் உள்ளவரை கோயிலிலுள்ள மூன்று விளக்குகளை இதைக் கொண்டு எரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இவ்வூர் பட்டன் இதனைப் பெற்றுக் கொண்டார். ஆனால், முறையாக கோயிலுக்கு செலவிடவில்லை. மேலும் இவர், இந்த ஊரில் பிறக்கும் பெண்குழந்தைகளைக் கொல்வதற்கு மருந்தும் செய்து கொடுத்துள்ளார். இறந்த குழந்தையை தகனம் செய்தவுடன், அவர்களுக்கு தெளிக்கும் பாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்துள்ளார். கோபமடைந்த பெருமாள், பட்டனை அழித்ததுடன், ஊரையும் அழித்துத் விட்டார். அவரது கோபத்தால் வைகுண்டமே நடுங்கியதாம். பிற்காலத்தில், ஒரு கல்வெட்டு மூலம் இந்தத் தகவலை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கேட்டு, கோயில் எழுப்பி, சிறந்த முறையில் பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டியதால் பெருமாளுக்கு பேசும் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
நம்பிக்கைகள்:
பேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
பேச்சுத்திறமை: பேச, நடக்க முடியாத, காதுகேளாத குழந்தைகளுக்காக இந்தக் கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்காக, முதல்நாள் என்ன கிழமையில் செல்கிறோமோ, அதே கிழமையில் ஒன்பது வாரம் குழந்தையுடன் கோயிலுக்கு செல்ல வேண்டும். தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு ஒன்பது முறை கோயிலை வலம் வரவேண்டும். குழந்தையின் முகத்தில் சங்கு தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கான தீர்த்தம் வீட்டில் வைத்துத் கொடுக்கவும் வழங்கப்படுகிறது.
கூடாரவல்லி திருவிழா: மார்கழி மாதம் பழங்கள், காய்கறிகள், வெட்டி வேர், 108 திரவியங்கள், மூலிகைகள், பூக்கள் மூலம் அமைக்கப்பட்ட பந்தலில் (கூடாரம்) கூடாரவல்லி திருவிழா நடக்கிறது. கூடாரத்தில், ஆண்டாள் நாச்சியார் சேவை சாதிக்கிறாள். அன்று திருப்பாவை பாடப்படும். திருமணத்தடை நிவர்த்தி, கல்வி, செல்வம், வியாபார அபிவிருத்திக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த தலத்தில் விரதங்கள், தானம், வேள்வி, பிராயச்சித்தம் எது செய்தாலும், ஆயிரம் மடங்கு தருவதாக நம்பிக்கையுள்ளது. பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,வந்து வரம் தருவார் வரதராஜன் என்று பக்தர்கள் உளமார நம்புகின்றனர். பேசும் பெருமாளின் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, தாமரை மலர் கொண்ட திருக்கையுடைய கோலத்தில் உள்ளனர்.
திருவிழாக்கள்:
தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம் (15 கிராமங்களின் கருடசேவை), திரு ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை, தீபாவளி, விஷ்ணு கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆங்கிலப்புத்தாண்டு, கூடாரவல்லி விழா, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், ரதசப்தமி, மாசி மகம் (108கோ பூஜை), பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்) ஸ்ரீ ராமநவமி.
காலம்
1270 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கூழம்பந்தல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை