குரு நானக் ஜிரா சாஹிப், கர்நாடகா
முகவரி
குரு நானக் ஜிரா சாஹிப், சிவன் நகர், பீதர், கர்நாடகா – 585401.
இறைவன்
இறைவன்: குரு நானக்
அறிமுகம்
குரு நானக் ஜிரா சாஹிப் என்பது கர்நாடகத்தின் பீதர் பகுதியில் அமைந்த ஒரு சீக்கிய வரலாற்று சன்னதி ஆகும். இந்த குருத்வாரா 1948 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, முதல் சீக்கிய குருவான குரு நானக்குக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பீதர் சீக்கிய சமயத்துடன் நீண்டகாலமாக தொடர்புடைய இடமாகும், இது சீக்கியத்தின் பஞ்ச் பியாரிகளில் (ஐந்து பிரியமானவர்கள்) ஒருவரான பாயி சாஹிப் சிங்கின் சொந்த ஊர் ஆகும். அவர்கள் தங்கள் தலைகளை தியாகம் செய்ய முன்வந்தார்கள், பின்னர் கால்சாவின் முதல் உறுப்பினர்களாக ஞானஸ்நானம் பெற்றவர்களாவர்.
புராண முக்கியத்துவம்
குரு நானக் தென்னிந்தியாவில் தன் இரண்டாம் பயணத்தை (அருட்பணி சுற்றுப்பயணம்) கி.பி. 1510-1514 க்கு இடையில், நாக்பூர் மற்றும் கந்த்வா வழியாக பயணித்து, நருமதைக் கரையில் உள்ள பழமைவாய்ந்த இந்து கோயில்களான ஓங்காரேசுவரர் கோவிலுக்கு சென்றார், பின் நந்தேடை அடைந்தார் (200 ஆண்டுகளுக்கு பின்னர் குரு கோபிந்த் சிங் தனது கடைசி நாட்களை இங்கு கழித்தார்). நந்ததேடில் இருந்து அவர் ஐதராபாத் மற்றும் கோல்கொண்டா நோக்கி சென்றார், அங்கு அவர் முஸ்லீம் ஞானிகளை சந்தித்தார், பின்னர் பிதருக்கு வந்து பிர் ஜலலூதின் மற்றும் யாகோப் அலி ஆகிய அறிஞர்களைச் சந்தித்தார். ஜானசாகிஸ் கூற்றின்படி, குரு தன்னுடன் வந்த மர்டனாவுடன் பிதாரின் புறநகரில் தங்கினார். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் முஸ்லீம் பக்கிரிகளின் குடிசைகள் இருந்தன, அவர்கள் குருவின் போதனைகளை ஆர்வத்துடன் கேட்டனர். இச்செய்தி பிதார் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பரவி, பெருமளவிலான மக்கள் அவரது தரிசனத்தையும், அவரின் ஆசிகளைப் பெறவேண்டி வந்தனர். அச்சமயம் பிதரில் குடிநீர் பற்றாக்குறை இருந்தது. கிணறுகளைத் தோண்டிய முயற்சிகளுக்கும் பயனில்லாமல் போனது. அப்படி தண்ணீர் கிடைத்தாலும் அது குடிப்பதற்கு தகுதியற்றதாக இருந்தது. மக்களின் துண்பத்தை கண்ட குரு, சத் கார்த்தாரை உச்சரித்து, அங்குள்ள ஒரு இடத்தில் தன் மரப்பாதுகையையால் ஒரு கல்லை அகற்றி, அவ்விடத்தில் தேய்த்து சிலவற்றை அகற்றினார். இதன் பிறகு அனைவரும் மிகுந்த ஆச்சர்யம் அடையும் வகையில், அங்கு ஒரு நீருற்று தோன்றியது அதில் இன்று வரை குளிர்ந்த, தூய நீர் வந்தவாறு உள்ளது. இதனால் நானக் ஜிரா (ஜிரா = சுணை) என்ற பெயரைப் பெற்றது. குருத்வாராவிற்கு அருகே உள்ள ஒரு பாறையிலிருந்து இன்னமும் பாயும் தெளிவான நீரோடை குருவின் ஜெபங்களுக்கு கடவுளின் பதில் என்று நம்பப்படுகிறது. பிதருக்கு குருநானக்கின் பயணம் குறித்த மற்றொரு பதிவானது, இந்த இனிய நீரூற்று உள்ள பகுதிக்கு வந்த ஒரு சூபி துறவியும் அவரது குடும்பத்தாரும் அங்கே வசித்து வந்ததாகவும், குருதேவர் இறுதியில் அங்கு வந்தார் என்றும் கூறுகிறது.
சிறப்பு அம்சங்கள்
இந்த குருத்துவார் ஒரு அழகிய பள்ளத்தாக்கில், மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பின்னனியில் அமைந்துளது. இந்த கோயிலில் தர்பார் சாஹிப், திவான் ஹால் லாங்கர் ஹால் ஆகியவை அமைந்துள்ளன. சுக்காசன் அறையில், சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப் நூல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு லிஹரி அறை என்று அழைக்கப்படும் தனி அறை உள்ளது, இந்த அறையில் நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரசீதுகள் வழங்கப்படுகின்றன. 1948 ஆம் ஆண்டு இந்தியாவின் விடுதலைக்குப் பின்னர் இந்த அழகிய குருத்வாரா கட்டப்பட்டது. குருத்வாராவின் முன் மாடிக்கு எதிரே அம்ரித் குண்ட் (புனித குளம்) என்னும் குளம் இங்கு உள்ள ஊற்று நீரைச் சேகரிக்க அமைக்கப்பட்டுள்ளது. இதில் முழுகி எழுவதால் உடலும், ஆத்மாவும் தூய்மையாவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் பகல் இரவு என 24 மணிநேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் சமூக சமையல் கூடம் (குரு கா லங்கார்) உள்ளது. குரு தேக் பகதூர் நினைவாக ஒரு சீக்கிய அருங்காட்சியகம் இங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு சீக்கிய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை படங்கள் மற்றும் ஓவியங்கள் வழியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
குரு நானக் ஜெயந்தி (குரு நானக் குர்புரப்)
காலம்
கி.பி. 1510-1514
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பீதர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பீதர்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹைதரபாத்