கும்பகோணம் அபிமுகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
கும்பகோணம் அபிமுகேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்,
தமிழ்நாடு – 612 001
தொலைபேசி: +91 435 242 0187
இறைவன்:
அபிமுகேஸ்வரர்
இறைவி:
அமிர்தவல்லி
அறிமுகம்:
அபிமுகேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் அபிமுகேஸ்வரர் என்றும், தாயார் அமிர்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் திருவிழாவுடன் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்று. இக்கோயில் கும்பகோணம் மகாமக குளத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. துலா ராசியினருக்கு இக்கோயில் முக்கியமான இடம்.
புராண முக்கியத்துவம் :
இக்கோயில் 1800 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அச்சுத நாயக்கரின் மந்திரி கோவிந்த தீக்ஷிதர் கோவிலை புதுப்பித்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவிலின் கடைசி கும்பாபிஷேகம் 26 அக்டோபர் 2015 அன்று நடைபெற்றது.
முன்னோரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டபோது பிரம்மன் மனம் வருந்தி பிரளயத்திற்கு பிறகு எனது படைப்புத்தொழிலை எங்கிருந்து செய்வது என சிவனிடம் கேட்டார், சிவபெருமான் அவரிடம் நீ இப்போதே பல புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து அமுதத் தோடு சேர்ந்து பிசைந்து மாயக்கும்பம் ஒன்றை செய் அதில் அமுதத்தை நிரப்பு. அனைத்து ஜீவராசிகளுக்கும் விதையாக விளங்கும் சிருஷ்டி பீஜத்தை அதனுள் வை. அதன்மீது ஒரு தேங்காயைவை. அதை மாவிலையால் அலங்கரி. கும்பத்தில்நூல் சுற்று.
அது பிரளய வெள்ளத்தில் சாய்ந்துவிடாத வகையில் ஒரு உரியில் வை. அந்த குடத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய், அந்த கும்பம் பிரளய வெள்ளத்தில் தெற்கு நோக்கி செல்லும். அப்போது அவ்விடத்திற்கு நான் வருவேன், என்றார். இதன்படி பிரளய காலத்தில் வெள்ளம் ஏற்பட்டது கும்பம் மிதந்தது. கும்பத்திலிருந்த அந்த தேங்காய் சிதறி விழுந்தது. அந்த தேங்காய் லிங்கமாக மாறியது. இவரே அபிமுகேஸ்வரர் ஆவார். அபிமுகம் என்றால் நேர்கொண்ட பார்வை என பொருள். கும்பகோணம் மகாமக குளத்தைப் பார்க்கும் வகையில் இவரது கோயில் குளக்கரையிலேயே அமைந்துள்ளது.
நம்பிக்கைகள்:
சனி தோஷம் மற்றம் பிற தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
தெய்வங்களுள் ஒருவர் அபிமுகேஸ்வரர். இவர் தேங்காயாக இருந்தது லிங்கமாக மாறியவர். இந்த கோயிலில் பைரவர் சிலை முக்கியமானது மகா மக கோயில்கள் பனிரெண்டிலும் உள்ள பைரவர்களைவிட இவர் உயரமானவர்கள். யோக தெட்சிணாமூர்த்தி ஒரு கால் மடித்த நிலையில் அமர்ந்துள்ளார். சனி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலில் வழிபடுவதன் மூலம் பிற தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை சனிக்கிழமைகளில் இவருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றுவதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். அம்பாள் அமிர்தவள்ளி நினைத்த காரியத்தை நடத்தித் தரக் கூடியவள். அபிமுகேஸ்வரர் சன்னதியின் முன்பு உள்ள துவாரபாலகர்கள் நடராஜரைப் போல நடனமிடும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.
திருவிழாக்கள்:
மாசி மகத்தை ஒட்டி பத்து நாட்கள் விழா நடக்கும். தினமும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருள்வர்.
காலம்
1800 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி