Sunday Nov 24, 2024

குன்றத்தூர் கந்தழீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி :

குன்றத்தூர் கந்தழீஸ்வரர் திருக்கோயில்,

சிக்கராயபுரம், குன்றத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம்,

தமிழ்நாடு 600069

இறைவன்:

கந்தழீஸ்வரர்

இறைவி:

நகைமுகவல்லி

அறிமுகம்:

 தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கந்தழீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவர் கந்தழீஸ்வரர் என்றும், தாயார் நகைமுகவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். குன்றத்தூர் முருகன் கோயிலுக்கும் குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் கோயிலுக்கும் மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

      கி.பி. 1241-ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, ரிஷபாரூடர் போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது.

பெரிய புராணம் எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கிவிட்டு, காவிரிக்கரையில் உள்ள கடவுளர்களை தரிசித்துவிட்டு, பாலாற்றங்கரையில் அருளும் இறைமூர்த்தங்களையும் பிரார்த்தித்துவிட்டு, குசஸ்தலை நதி பாயும் ஊரை நெருங்கினார். வழியில், அற்புதமான சிவாலயத்தைக் கண்டார். அது சோழ மன்னனால் கட்டப்பட்ட கோயில். வாழையும் தென்னையும் அதிகம் பயிராகும் பூமி அது. மலையும், குளிரும் கைகோர்த்த மண்டலம் அது. மலையின் அடிவாரத்தில் உள்ள இறைவனைத் தரிசித்து, அங்கேயே சில காலம் தங்கி தவம் செய்வது என்று முடிவு செய்தார் அந்தச் சிவனடியார்.

பிரமாண்டமான சிவலிங்கமூர்த்தத்தின் சாந்நித்தியத்தில் தன்னை இழந்தார். தனது சிந்தனைகள் முழுவதையும் சிவபாதத்துள் குவித்து சமர்ப்பித்தார். தன்னையே சிவனாரிடம் ஒப்படைத்தார். இதைத்தான் சரணாகதி என்கின்றனர். ஒரு நாள் அந்த அடியாருக்கு அற்புத தரிசனம் அளித்தார் சிவபெருமான். அந்தக் கணமே தனது மொத்த கர்வமும் தொலைந்ததை உணர்ந்த அடியவர், மெய்சிலிர்த்துப் போனார். என் கர்வத்தையும் செருக்கையும் அழித்த கந்தழீஸ்வரா என்று நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். பரவசத்தில் திளைத்தார். கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம். புகழையும் பெயரையும் பற்றிக்கொண்டிருந்த தனது பற்றுகளை நீக்கியதால், சிவனாருக்கு கந்தழீஸ்வரர் எனத் திருநாமம் சூட்டி மகிழ்ந்தார்.

நம்பிக்கைகள்:

இங்குள்ள அம்மனை வழிபட்டால் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

      இக்கோயில் அருகே சேக்கிழாருக்கென தனிக்கோயில் உள்ளது. சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல், அனகாபுத்தூர் வழியாகச் சென்றால், குன்றத்தூர் எனும் அழகிய ஊரை அடையலாம். சிறிய மலை மீது கோயில் கொண்டிருக்கிறார் முருகப் பெருமான். மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

திருவிழாக்கள்:

சிவராத்திரி, பிரதோஷம்.

காலம்

1800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குன்றத்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

குரோம்பேட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top