கீழையூர் இரட்டைக் கோயில்கள் , அரியலூர்
முகவரி
கீழையூர் இரட்டைக் கோயில்கள் , கீழையூர், அரியலூர் மாவட்டம் – 621707.
இறைவன்
இறைவன்: அகஸ்தீஸ்வரர், சோழீஸ்வரர் இறைவி: அபிதகுஜாம்பிகை, மனோன்மணி
அறிமுகம்
கீழையூர் இரட்டைக் கோயில்கள் கீழையூரில் ஒரே இடத்தில் அமைந்துள்ள இரு சிவன் கோயில்களாகும். கீழையூர் சோழ மன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூரின் ஒரு பகுதியாக அமையும். திருச்சியிலிருந்து அரியலூர் அல்லது ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் தஞ்சாவூரிலிருந்து 35 கிமீ வடக்கிலும், அரியலூரிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ள கீழையூர் மேலப்பழுவூருக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது. அவ்வூரில் இக்கோயில்கள் அமைந்துள்ளன. மேற்கு நோக்கிய நிலையில் இக்கோயில்களின் முதன்மை நுழைவாயில் உள்ளது. தென்மேற்கு திசையையொட்டி ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வெளிப்புறம் இரு புறத்திலும் துவாரபாலகர்கள் உள்ளனர்.[1] அவனிகந்தர்ப்பஈசுவர கிருகம் என்றழைக்கப்படுகின்ற இக்கோயில்களின் வட புறத்தில் உள்ள கோயில் வடவாயில் ஸ்ரீகோயில் (சோழிச்சரம்) என்று அழைக்கப்படுகிறது. தென் புறத்தில் உள்ள கோயில் தென்வாயில் ஸ்ரீகோயில் (அகத்தீசுவரம்) என்று அழைக்கப்படுகிறது. பழுவேட்டையர்கள் சிற்றசர்களில் குமரன்கண்டன் மற்றும் குமரன்மறவன் காலத்தில் இக்கோயில்கள் கட்டப்பட்டன. (கி.பி.9ஆம் நூற்றாண்டு). இக்கோயில் வளாகத்தில் இரண்டு சிவன் கோயில்களுடன் சில பரிவாரக் கோயில்களும் காணப்படுகின்றன.
புராண முக்கியத்துவம்
ஒரு கோயிலுக்கு மூலவரான இறைவன் அகஸ்தீஸ்வரர் இறைவி அபிதகுஜாம்பிகை தனித்தனிச் சன்னதிகளில் உள்ளனர். மற்றொரு கோயிலுக்கு மூலவரான சோழீஸ்வரர் சன்னதியில் இறைவி மனோன்மணி உள்ளார். மேலும், சூரியன், கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சிலைகள் தேவகோட்டங்களை அழகு செய்கின்றன. இக்கோயில் வடக்குப்பக்கத்தில் அருணாச்சலேஸ்வர கோயில் அமைந்துள்ளது. அதே காலகட்டத்தில் நிறுவப்பட்டுள்ள இக்கோயிலின் அர்த்தமண்டபத்திற்கு முன் இரு துவாரபாலகர் சிலைகள் உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள தேவகோட்டத்தில் பிரம்மா, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர் கற்சிற்பங்கள் சோழர்காலச் சிற்பத்திறனை உணர்த்துகின்றன. 1000 வருடங்களுக்கு முன் சோழர் காலத்தில் மிகவும் செழிப்புற்றிருந்த ஊர், வீரத்திற்கு பெயர் போன ஊர், சோழர்களுக்கு கீழ் சிற்றரசர்களாக இருந்த “பழுவேட்டரையர்”களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஊர். செடி கொடிகள் முளைத்து வளாகமே மோசமாக இருந்தது, ஒரு காலத்தில் இந்த இடம் எப்படி இருந்திருக்கும்!! இது என்ன கொடுமை, துவாரபாலகர்கள் முகத்தில் லாரிகள் தூசி வாரி இறைத்துவிட்டுச் சென்றாலும், 1000 வருடங்களாக அவர்கள் முகத்தில் இருந்த சிரிப்பை இன்றுவரை அவர்கள் தவறவிடவில்லை!
சிறப்பு அம்சங்கள்
சிற்பக்கலையின் எடுத்துக்காட்டாக இரட்டைக்கோயில்களைக் கூறலாம். தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில், கொடும்பாளூர் மூவர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களை இக்கோயில்கள் நினைவுபடுத்துகின்றன. நுட்பமான சிற்பங்கள், அழகான நந்திகள், நேர்த்தியான கருவறைகள், அழகான மண்டபங்கள், சிம்மத்தூண்கள், விமானங்கள் என்ற நிலையில் ஒவ்வொன்றும் தனித்த கூறுகளைக் கொண்டு அமைந்துள்ளது.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி