கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கடலூர்
முகவரி :
கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
கீரப்பாளையம்,
கடலூர் மாவட்டம் – 608602.
இறைவன்:
சுப்பிரமணிய சுவாமி
இறைவி:
வள்ளி, தெய்வானை
அறிமுகம்:
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் என்ற கிராமத்தில் சுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி உள்ளார் முருகப்பெருமான்.
புராண முக்கியத்துவம் :
அக்காலத்தில் நெசவுத் தொழிலை பிரதானமாகக் கொண்ட மக்கள் இங்கு அதிகளவில் வசித்து வந்தனர். பெரும் தொற்றான காலரா நோய் பரவியது. மருத்துவ வசதி அதிகம் இல்லாததாலும் ஊரில் உள்ள மக்கள் ஏராளமானோர் பலியாகினர். இதனால் இவர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு செல்ல முடியாமல் போகவே அவர்களுக்கு ஊரிலே ஒரு கோயில் கட்ட முடிவு செய்தனர். அவ்வூரின் ஜமீன்தாரிடம் விஷயத்தை சொல்லி இக்கோயிலில் கிராம மக்கள் ஒன்று கூடி கீற்று கொட்டகையில் வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.
நாட்கள் செல்ல செல்ல முழு உருவ சிலை நிறுவ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருந்தது. அருட்பிரகாச வள்ளலார் இவ்வழியாக நடராஜரை தரிசனம் செய்ய செல்வார். அவரது தீவிர பக்தர்கள் வள்ளலாரின் படத்தை வைத்துக்கொண்டு திருவருட்பாவை பாடிக் கொண்டு ஊர் ஊராக சென்று இந்த ஆலயத்திற்கு நிதி திரட்டினார். இதனை அடுத்து ஒரு சிறு கோயில் அமைக்கப்பட்டு தண்டாயுதபாணி சிலை வைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். பின்னர் ஆன்றோர்களின் ஆலோசனைப்படி மூலவராக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. விரிவாக்கம் செய்யப்பட்டு ஐந்தாவது மகா கும்பாபிஷேகமும் கொண்டாடப்பட்டுள்ளது. ஆலய முகப்பில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் அவர்களுக்கு இருபுறமும் சிவன் பார்வதி விநாயகர் தெய்வத் திருமேனிகளும் அருகே எழிலான மயில்களின் வடிவமும் இருக்கிறது.
மகாமண்டபத்தில் மேல் வேலனின் வேல் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தின் மேலே கஜலட்சுமி வீற்றிருக்க இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி தர மயில் பலிபீடம் அழகுற அமைந்துள்ளது. தொடர்ந்து கிழக்கு நோக்கிய கருவறையில் சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
நம்பிக்கைகள்:
இவ்வாலயத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்த பலருக்கும் நல்ல முறையில் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்தால் முருகனின் பெயரையும் பெண் குழந்தையாக இருப்பின் வள்ளி தெய்வானை பெயரையும் வைக்கின்றனர். சனீஸ்வர பகவான் சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
பங்குனி உத்திரம் அன்று குழந்தை பேறுக்காக இடும்பன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் தம்பதியர் கலந்துகொண்ட இடும்பனின் பூஜை பிரசாதத்தை மனைவியர் தங்கள் முந்தானையில் பெற்றுக்கொள்ள அதை கணவன் மனைவி இருவரும் வாங்கி சாப்பிடுகிறார்கள். அப்படி செய்தால் அவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த முருகனை மகப்பேறு அடைந்து அடுத்த பங்குனி உத்திரம் அன்று முருகனுக்கு காவடி எடுத்து தனது நன்றிகளையும் செலுத்துவது உண்டு.
தடை நீங்கி திருமணம் நடைபெற பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் தம்பதியராக வந்து பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் நடைபெறும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு தங்க காசு பட்டம் கட்டி தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
பிள்ளைகள் கல்வியில் சிறக்க நல்ல பணிவாய்ப்பு கிட்ட, உயர்வுகளை வேண்டுவோர் தேன் தினைமாவு வைத்து பூஜை செய்கிறார்கள். இப்படி செய்தால் பிள்ளைகள் கல்வியில் நல்ல முன்னேற்றம், நல்ல வேலை கிடைப்பதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
விவசாயம் பிரதானமாக உள்ளதால் பணிகள் தொடங்கும் முன் சுப்பிரமணியர், வடலூர் அருள் பிரகாச வள்ளலாரினை வழிபடுகிறார்கள். இதனால் நல்ல விளைச்சல் கிடைப்பதாகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயம் காப்பாற்றப்படுவதாகவும் கூறுகிறார்கள். கடன் பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு செவ்வரளி மாலை அணிவித்து பிரார்த்தனை செய்து பலன் பெறுகிறார்கள். ஆரோக்கியம் வேண்டிய ஆறுமுகனை வழிபட்டு நலம் பெற்று பல விதமான காவடிகள் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
திருவிழாக்கள்:
பங்குனி உத்திரம் இரு நாள் உற்சவமாக நடைபெறுகிறது. இந்த நாளில் திருக்கல்யாணம் இரவு வீதி உலா நடைபெறும். இரண்டாம் நாள் காலை காவடிகள் வீதி உலாவும் மதியம் மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் தொடர்ந்து அன்னதானமும் பூஜை நடைபெறும். வைகாசி விசாகத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆராதனைகளுடன் சுவாமி உள் பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. மாதந்தோறும் திருக்கார்த்திகை மற்றும் சஷ்டி தினங்களில் காலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படும். இரவு உள் பிரகார புறப்பாடு உண்டு. மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று அருட்பிரகாச வள்ளலார் சன்னதி முன்னால் திருவருட்பா பாடப்பெற்ற அன்னதானம் நடைபெறும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீரப்பாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி