கி.பி. 9ம் நுாற்றாண்டின் கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த 1,000 ஆண்டுக்கால பழைமையான சோழர் சிற்பம் ஒன்று, வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம், திம்மாம்பேட்டை எனும் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் பிரபு, ஆய்வு மாணவர்கள் சரவணன், கௌரிசங்கர் ஆகியோர் அடங்கிய குழு, திம்மாம்பேட்டை கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது, அங்கிருந்த காளியம்மன் கோயிலில் பழங்கால கொற்றவை சிற்பம் வழிபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பழங்காலத்தில், தமிழர்களின் வழிபாட்டுமுறை இயற்கையை அடிப்படையாகக்கொண்டது. அதன்பிறகு, பஞ்ச பூதங்கள் மற்றும் மரங்கள் ஆகியவை வழிபடு பொருள்களாகப் பாவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, வளமையின் குறியீடாகப் பெண்ணை வழிபடும் மரபு தமிழர்களின் தனித்துவம் வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக இடம்பெற்றது. இதுவே கொற்றவை வழிபாடாகும். கொற்றவையைப் பற்றி தமிழகத்தின் மிகப் பழைமையான பெண் தெய்வமாக தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் ‘பழையோள்’, ’காணாமற் செல்வி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், கொற்றவையின் உருவ அமைப்பையும் வழிபாட்டு முறையையும் விவரிப்பது சிலப்பதிகார காப்பியமேயாகும் . அதாவது, இளங்கோவடிகள் கொற்றவை வழிபாட்டு முறையை விளக்கும் வகையில் தனியாக ஒரு காதையையே வேட்டுவ வரியில், மதுரைக் காண்டத்தின் இரண்டாவது காதையில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
திம்மாம்பேட்டை பாலாற்றங்கரையில், ஒரு துரிஞ்சி மரத்தின் அடியில் அமைந்துள்ள கொற்றவை சிற்பம், 5 அடி உயரமும் 3 1/2 அடி அகலமும் கொண்டுள்ளது. கொற்றவை இடது காலை தரையிலும் வலது காலை அமர்ந்த நிலையில் உள்ள மானின் மீதும் வைத்து, நீண்ட காதுகளுடனும், வில், வாள், திரிசூலம் முதலிய ஆயுதங்கள் என எட்டுக் கரங்களுடனும் காட்சியளிக்கிறாள். மேலும், இடது காலடியில் எருமையின் தலை காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் கொற்றவையின் அமைப்பை ஒத்த நிலையில் இந்தக் கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது.
இந்தச் சிற்பத்தைப் பற்றி பேராசிரியர் பிரபு, “வறட்சிக் காலங்களில், தானியங்களைக் கொண்டுவந்து இந்தச் சிற்பத்தின் அருகே வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக இங்குள்ள மண்ணை அள்ளிச்சென்று தங்களது விவசாய நிலங்களில் தூவுகின்றனர் மக்கள். அவ்வாறு செய்தால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என நம்புகின்றனர் விவசாயிகள். இந்தச் சிற்பத்தை இப்பகுதி மக்கள் பைரவநாதர் என்று அழைக்கின்றனர். ஆனால், இச்சிற்பத்தில் உள்ளது பைரவர் அல்ல. பெரும்பாலும் இந்தச் சிற்பத்துக்கு பெண்களே பூஜை செய்கின்றனர். சைவ உணவுகளையே படையலாகப் படைக்கின்றனர். பழங்கால இயற்கை சார்ந்த வழிமுறைகளை நினைவுகூரும் இந்தக் கொற்றவை சிற்பம், தமிழர்களின் தாய்வழிச் சமூக மரபின் எச்சமாக உள்ளது” என்றார்.
திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும் வரலாற்றுத் துறை பேராசிரியருமான சேகர் கூறுகையில், “பல்லவர் கால கலைக் கூறுகள் காணப்படும் இந்தச் சிற்பம், பிற்காலச் சோழர்களின் தொடக்க காலமான கி.பி 10 – ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். இந்தச் சிற்பம், கால ஓட்டத்தில் உராய்ந்து பொலிவிழந்து காணப்படுகிறது. ஆகவே, தமிழர்களின் தாய் தெய்வமாகக் கருதப்படும் இந்தக் கொற்றவை சிற்பம், பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றாகும்” என்று கூறினார்.