காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் (சின்னதிருப்பதி), சேலம்
முகவரி
அருள்மிகு பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், காருவள்ளி, சின்னதிருப்பதி, சேலம் மாவட்டம் -636305. போன்: +91- 4290 – 246 344.
இறைவன்
இறைவன்: பிரசன்ன வெங்கட்ரமணர் இறைவி: அலர்மேலு மங்கை
அறிமுகம்
சேலம் மாவட்டம், ஓமலூர் நகரத்தில் உள்ள மரக்கோட்டை கிராமத்தில் கருவள்ளிக்கு அருகில் உள்ள சிறிய அழகிய மலையில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. சேலத்திலிருந்து 25 கிமீ தொலைவில், தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், ஓமலூருக்கு அருகிலுள்ள கருவள்ளியில் உள்ள சிறிய மலையில், மூலவர் வெங்கடாசலபதிக்கு அருகில் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் இந்த கோயில் அமைந்துள்ளது. மலைக்கோயிலுக்குச் செல்ல 300 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். கிழக்கு நுழைவாயிலில் பெரிய கோபுரம் உள்ளது, அது வெகு தொலைவில் உள்ளது. பாண்டியர்களால் தற்போதைய வடிவத்திலும் அமைப்பிலும் கட்டப்பட்ட பல்லவர் காலக் கோயில் இது. இது ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் நடந்த சண்டையின் புராணக்கதையான மலைக்கோயில்.
புராண முக்கியத்துவம்
திருப்பதியில்குடிகொண்டிருக்கும் வெங்கடேசப்பெருமாள், குளிக்கச்சென்றார். தலைக்கு தேய்க்க அரப்பை தேடிபோது, அங்கு அரப்பு இல்லை. தன் மனைவியிடம் கேட்கலாம் என்று பார்த்தார். அவரும் அங்கில்லை. தாயாரைத்தேடி பல இடங்களுக்கும் சென்ற பெருமாள் அரப்பு மரங்கள் நிறைந்திருந்த இக்குன்றுக்கு வந்தார். குன்றின் அழகில் மயங்கிய அவர், அரப்பு எடுத்து குளித்துவிட்டு இங்கேயே தங்கினார் என்று புராணம் கூறுகிறது. பிற்காலத்தில், இக்குன்றில் மேய்ச்சலுக்கு வந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் புற்று ஒன்றில் தொடர்ந்து பால் சொரிந்தது. வியந்த மக்கள் புற்றுக்கு அடியில் பெருமாள் சுயம்புவாக இருந்ததைக்கண்டு, அவருக்கு கோயில் கட்டினர்.
நம்பிக்கைகள்
சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து வணங்கிட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், ஐஸ்வர்யம், வேலை, பதவி உயர்வு கிடைக்கும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. கால்நடைகளுக்கு பிணி ஏற்பட்டால் பிரகாரத்தில் உள்ள குழல் ஊதும் கண்ணனுக்கு வெண்ணெய்காப்பு சாத்தி வழிபடலாம்.
சிறப்பு அம்சங்கள்
கோயிலுக்கு முன்புறம் சிறிய வெங்கட்ரமணர் சிலை உள்ளது. இவரது தோளில் பக்தர்கள் துளசியை ஒட்டி வைத்து விட்டு, தமது வேண்டுதல்களையும், புதிதாக செய்யவிரும்பும் செயல்களுக்கு அனுமதியையும் பெற நண்பர்களிடம் சொல்வது போல உரிமையுடன் சொல்கின்றனர். அப்போது, பெருமாளின் தோளில் இருக்கும் துளசி கீழே விழுந்தால் உத்தரவு கிடைத்ததாக எண்ணி அச்செயலை செய்கின்றனர். சுற்றுவட்டார மக்கள் காலங்காலமாக இம்முறையில் உத்தரவு கேட்டபின்பே தமது வீட்டு வைபவங்களைத் தொடங்குகின்றனர். வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையே சண்டை நிகழ்ந்தபோது, வாயுவின் பலத்தால் தெறித்த ஆனந்த பர்வதத்தின் ஒரு பகுதியே இக்குன்று என வரலாறு கூறுகிறது. திருப்பதியில் கோயில் கொண்டுள்ளதைப்போலவே இவ்விடத்தில், வெங்கடேசப்பெருமாள் அருளுகிறார். எனவே, இத்தலம் “சின்னத்திருப்பதி’ எனப்படுகிறது. கருவறையில் சுவாமிக்கு முன்பு ஆதியில் தோன்றிய சுயம்பு உள்ளது. தாயார் அர்த்தமண்டபத்தில் தனியே அருளுகிறார். திருப்பதிக்கு சென்று இறைவனை வணங்கமுடியாதவர்கள் இங்கு வந்து சுவாமியை வணங்கலாம். இங்கு திருமணம் செய்தால் இல்வாழ்வு சிறக்கும் என்பதால் அதிகளவில் திருமணங்கள் நடக்கிறது.
திருவிழாக்கள்
சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சின்ன திருப்பதி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காருவள்ளி, சேலம்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர், திருச்சி