களமாவூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி
களமாவூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், களமாவூர், குளத்தூர் தாலுகா புதுக்கோட்டை மாவட்டம் – 622504.
இறைவன்
இறைவன்: ஆதிகேசவப் பெருமாள் இறைவி: தேவி-பூதேவி
அறிமுகம்
புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சின்னங்களை அதிகம் கொண்ட பகுதி. இங்கு குளத்தூர் தாலுகா, நமணராயச் சத்திரம் எனும் களமாவூர் கிராமத்தில் ஒரு பழைமையான பெருமாள் கோயில் திருப்பணிக்குக் காத்திருக்கிறது. ராமர் வழிபட்ட இந்த ஊரில் சிவாலயத்தோடு திருமால் ஆலயம் ஒன்றும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு அமைக்கப்பட்டது என்றும், அது காலப்போக்கில் சிதைந்து விட்டது என்றும் கூறப்படுகிறது. பிறகு நமணத் தொண்டைமான் காலத்தில் உருவான பெருமாள் கோயிலும் சிதைந்துபோக, தற்போது சில பக்தர்களின் முயற்சியால் இந்த ஆலயத் திருப்பணிகள் தொடங்கி உள்ளன. இங்கே தேவி-பூதேவி சமேத ராக சயனக் கோலத்தில் அருள்கிறார் ஆதிகேசவப் பெருமாள். சக்கரத்தாழ்வார், ஆண்டாள் போன்ற விக்கிரகத் திருமேனிகளும் இங்குள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஊரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயம் பொலிவு பெற்று வழிபாட்டில் இருக்க, தற்போது இந்த பெருமாள் கோயிலைப் புனரமைக்கும் திருப்பணியில் ஈடுபட்டு உள்ளார்கள் இந்த ஊர் அன்பர்கள்.
புராண முக்கியத்துவம்
ரகுநாதராய தொண்டைமான் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த போது, குளத்தூர் எனும் பகுதியை நமணத்தொண்டைமான் நிர்வகித்து வந்தார். பெரும் கொடைவள்ளலான இவர், 1728-ல் நமணராயச் சத்திரம் எனும் இந்த ஊரைச் சீராக்கி, இங்கு இந்தப் பெருமாள் கோயிலைக் கட்டி வழிபட்டு வந்துள்ளார். இந்தக் கோயிலுக்கு இவர் அளித்த நன்கொடைகள், செய்த திருப்பணிகள், வைகுண்ட ஏகாதசி திருவிழா குறித்த செய்திகள் அனைத்தையும் கல்வெட்டுகளாக இங்கு பொறித்து வைத்துள்ளார். இந்தப் பெருமாள் கோயில் 18-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு இருந்தாலும், ராமாயண காலத்திலேயே இந்த ஊர் பிரசித்தி பெற்று விளங்கியதாகத் தெரியவருகிறது. இலங்கையில் இருந்து திரும்பிச் செல்லும் வழியில் ராமரும் சீதாதேவியும் இங்குள்ள அக்னீஸ்வரர் கோயிலுக்கு வந்து வணங்கியதாக மகாவம்ச புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு குன்றன் அடிகள் என்ற மகான், இங்கு பாயும் அக்னி ஆற்றின் பெயரையே சுவாமிக்குச் சூட்டி, சிறியளவிலான ஆலயத்தையும் எழுப்பி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இங்கே தேவி-பூதேவி சமேத ராக சயனக் கோலத்தில் அருள்கிறார் ஆதிகேசவப் பெருமாள் பள்ளிகொண்ட பெருமாளுக்கு முன்னால், தேவியர் சமேதராக நின்ற கோலத்தில் வேறொரு பெருமாளும் அருள்கிறார். ஒரே கருவறையில் நின்றான், கிடந்தான் என இரண்டு திருக்கோலங்கள். ஆதிகாலத்தில் இருந்ததைப் போலவே மகா லட்சுமி, ராமர்-சீதாதேவி, சக்கரத்தாழ்வார், ஹயக்ரீவர் உள்ளிட்ட 11 சந்நிதிகளை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளார்கள். தற்போது மூலவர் கருவறை, கருடன் சந்நிதி தவிர வேறு எதுவும் எழுப்பப்படவில்லை.
காலம்
1728-ஆம் ஆண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
களமாவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி