கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயில், கிருஷ்ணகிரி
முகவரி
அருள்மிகு காலபைரவர் கோயில், கல்லுக்குறிக்கி, கிருஷ்ணகிரி மாவட்டம் – 635001.
இறைவன்
இறைவன்: காலபைரவர்
அறிமுகம்
கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயில் என்பது கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் பழைய குப்பம் சாலையில் கல்லுக்குறிக்கியில் பெரிய ஏரிக்கரையில் உள்ள காலபைரவர் கோயிலாகும். இக்கோயில் திருப்பணிகளின்போது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இது இக்கோயிலிலின் பழமையைக் காட்டுவதாக உள்ளது. கோயிலின் தலமரம் ஆத்தி மரம் ஆகும்.
புராண முக்கியத்துவம்
முற்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருப்பர். அதனால் தான் காலபைரவர் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பழம்பெருமை மிக்க இந்த காலபைரவரை கம்மம் பள்ளி, பச்சிகானப்பள்ளி, ஆலப்பட்டி, நக்கல் பட்டி, நெல்லூர், கொல்லப்பட்டி என நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு பலனடைந்து செல்கின்றனர். இக்கோயிலில் விசாலமான வெளிமண்டபம், கொடிக்கம்பம் போன்றவற்றுடன் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் தென்முகக்கடவுள், வள்ளி தெய்வானையுடன் முருகன் போன்றோர் உள்ளனர். கோயிலில் ஒரு மேடையில் இரண்டு அடி உயரமுள்ள காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் காலபைரவர் சுயம்புலிங்கமாக உள்ளார். லிங்கத்தின் நெற்றியில் சூலம் அமைந்துள்ளது. இந்த சுயம்பு லிங்கத்தைக் காண கல்லாலான பலகணி அமைக்கப்பட்டுள்ளது. பலகணியில் உள்ள துளைகள் வழியாகவே லிங்கத்தைக் காண இயலும். பைரவரின் வாகனமானது கருங்கல்லால் இருந்தாலும் இது பிரதிஷ்ட்டை செய்யப்படாமல் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. உற்சவர் புறப்படும்போது கல்லாலான இந்த வாகனத்தையும் சுவாமியின் முன் சுமந்து செல்கின்றனர். மற்ற நேரங்களில் இவரை தூக்க இயலாது என கூறுகின்றனர். இக்கோயிலுக்கு செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரை பரையாக பூஜை செய்துவருகிறார்கள்.
நம்பிக்கைகள்
நோய்கள், வறுமை, துன்பம் நீங்கி நன்மை உண்டாகவும், திருமணம் வேண்டியும், புத்திர பாக்கியம் வேண்டியும், எதிரி பயம் இல்லாதிருக்க வேண்டியும் பைரவரிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
சனீஸ்வரரின் குருநாதர் பைரவர். காசியில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்ட சனீஸ்வரன், காசியின் காவல் தெய்வமான பைரவரை எண்ணி தவம் புரிந்து பிறகு மெய்ஞானம் பெற்றார் என புராணங்கள் கூறுகின்றன. பைரவரின் 64 அம்சங்களில் எட்டு அம்சங்கள் விசேஷம். கால பைரவருக்கு திரிசூலம் ஆயுதம். காசியில் காலபைரவரையும், சிதம்பரத்தில் சொர்ண பைரவரையும் தரிசித்தால் சிறப்பு. கலையை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் காலபைரவர் பிரம்மனின் தலையை தன் நகத்தால் கிள்ளி எறிந்து தன் திருவிளையாடலை நடத்தியவர். கல்லுக்குறிக்கையில் ஆஞ்சநேயர் மலை, பைரவர் மலைக்கு இடையே படேதலாவு ஏரிக்கரையோரம் மலையடிவாரத்தில் ரம்மியமான சூழலில் காவல் தெய்வமான கால பைரவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன நிம்மதியை தந்தருள்கிறார்.
திருவிழாக்கள்
ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் சிறப்புப் பூசைகள் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை இராகுகாலத்தில் பைரவருக்கு சிறப்பு அபிடேகம் செய்யப்படுகிறது. தேய்ப்பிறை அட்டமியன்று சிறப்பு யாகம் நனத்தப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றியுள்ள கிராம மக்களால் திருவிழா நடத்தப்படுகிறது.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கல்லுக்குறிக்கி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கிருஷ்ணகிரி
அருகிலுள்ள விமான நிலையம்
பெங்களூர்