கதிர்காமம் கோயில், இலங்கை
முகவரி :
கதிர்காமம் கோயில்,
கதிர்காமம், ஊவா மாகாணம்,
இலங்கை
இறைவன்:
கதிர்காமன் / பண்டார நாயகன்
அறிமுகம்:
கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள், சிங்களர், சோனகர் மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. இத்தள முருகனை சிங்களர் வணங்கும் சிங்காரவேலர் என்றும் போற்றப்படுகிறார். இலங்கை நாட்டின் தென்பகுதியில், ஊவா மாகாணத்து புத்தல பிரிவில், தீயனகம காட்டில், மாணிக்க கங்கை நதிக்கரையில், கதிர்காமக் கந்தன் திருக்கோவில் அமைந்துள்ளது. இது கொழும்பில் இருந்து 280 கி.மீ, கண்டியில் இருந்து 210 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
புராண முக்கியத்துவம் :
கதிர்காம முருகனின் பெயர் தமிழ் மொழியில் பண்டார நாயகன் என்றும் சமசுகிருத மொழியில் கதிர்காமன் என்று அழைக்கப்படுகிறது. அப்பெயர் இத்தள முருகனுக்கு ஏற்பட காரணம் சிவபெருமானின் நெற்றிகண்ணில் இருந்து தீ பொறியாக (கதிர்) சரவண பொய்கையில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் முருகப்பெருமான் அழகான முகத்தில் (காமன்) தோன்றியதால் இத்தலத்திற்கு கதிர்காமம் என்ற பெயரும் முருகனுக்கு கதிர்காமன் என்ற பெயரும் ஏற்பட்டது. அவையெல்லாம் இத்தல முருகனின் குணாதிசயங்கள், லீலைகள், வீரசெயல்களை வெளிப்படுத்தும் பெயர்களாகும். இக்கோயிலில் அருள்பாலிக்கும் முருகனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில், சிங்கள மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும், போரில் வென்ற பின்னர், இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அம்சங்கள்:
முருக வழிபாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் கொண்ட இலங்கையின் புகழ்பெற்ற முருகன் தலமாக விளங்குவது கதிர்காமம் திருத்தலம் ஆகும். இது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்தர் தியானம் செய்த பதினாறு தலங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அசோகரின் மகளான சங்கமித்தை புத்த கயாவில் இருந்து புனித வெள்ளை அரசு மரக்கன்றைக் கொண்டுவந்து நட்டதை ‘மகா வம்சம்’ என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறது. கந்தப்பெருமானின் புனிதத்தலமாக கதிர்காமம் விளங்கியதை இலக்கியங்களும், புராணங்களும் கூறுகின்றன. கதிர்- ஒளி, காமம்-அன்பு என்பது பொருளாகும். ஆறு கதிர்ப்பொறிகளால் தோன்றிய முருகப்பெருமான், வள்ளியம்மை மீது காதல் கொண்டு, மணம் புரிந்த இடமாதலால் ‘கதிர்காமம்’ என்பது பொருத்தமான பெயராகவே அமைந்து விட்டது. ஏமகூடம், பூலோகக் கந்தபுரி, வரபுரி, பிரமசித்தி, கதிரை எனப் பல்வேறு பெயர்களால் இன்றைய கதிர்காமம் வழங்கப்படுகிறது. அதேபோல முருகப்பெருமானும் கதிர்காமசுவாமி, கதிரைநாயகன், கதிரைவேலன், மாணிக்க சுவாமி, கந்தக்கடவுள் எனப் பல்வேறு திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.
திருவிழாக்கள்:
பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். விவரிக்க முடியாத சூட்சுமசக்தி எங்கும் நிலவுகிறது. பக்திமேலீட்டினால் சிலர் விழிநீர்மல்கப்பாடி ஆடுகின்றனர். இன்னும் சிலர் உருண்டும் புரண்டும் உடலை வாட்டி வதைத்துத் தம்பாவங்களுக்கெல்லாம் கழுவாய் தேடுகின்றனர்.வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாத்திரத்தையொட்டி மிக நுண்ணிய முறையில் கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார். ஆடித்திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி முழு நிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு, தை மாதப்பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்பாக விழா எடுக்கப்பட்டுவருகின்றன.
காலம்
15 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கதிர்காமம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொழும்பு
அருகிலுள்ள விமான நிலையம்
கொழும்பு