கடக்கம் கைலாசநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
கடக்கம் கைலாசநாதர் சிவன்கோயில்,
கடக்கம், மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609205.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
கல்யாணசுந்தரி
அறிமுகம்:
வைத்தீஸ்வரன்கோயில் – மணல்மேடு சாலையில் 12 கிமீ சென்றால் திருவாளப்புத்தூர் இங்கிருந்து சிறிய சாலை வடக்கில் செல்கிறது அதில் ஒரு கிமீ சென்றால் கடக்கம் கிராமம் உள்ளது. இவ்வூரில் ஒரு சிவன்கோயிலும் ஒரு பெருமாள் கோயிலும் உள்ளன. பெருமாள் கோயில் முற்றிலும் சிதைவடைந்த நிலையிலும், சிவன் கோயில் இடிந்துள்ள, பாழடைந்த நிலையிலும் உள்ளது. நான்கு புறமும் மதில் சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. முகப்பில் இருந்த நுழைவாயிலும் அதின் மீது இருந்த ரிஷபவாகன காட்சி சுதை வளைவு இடிந்து தரையில் கிடக்கும் காட்சி. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை அர்த்தமண்டபம் அதன் முன்னர் ஒரு மகாமண்டபம் உள்ளது, அதன் சுவர்கள் குறுகும் நெடுக்குமாக பிளந்து நிற்கின்றன. அதில் புறசுவற்றில் ஒரு சிறிய கல்வெட்டு 1938 ல் குஞ்சிதபாதம் பிள்ளை அவர்களால் குடமுழுக்கு செய்யப்பட்ட தகவலை சொல்கிறது. அதன் பின்னர் 84 ஆண்டுகாலம் உருண்டோடிவிட்டன.
இறைவன் –கைலாசநாதர் இறைவி கல்யாணசுந்தரி கைலாசநாதர் என்றாலே பத்தாம் நூற்றாண்டு காலகட்டம் எனலாம், கல்யாண சக்தி கொண்ட அம்பிகை என்பதால் கல்யாண சுந்தரி. இறைவியின் கருவறை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அருகில் தெற்கு நோக்கி நடராஜருக்கும் கருவறை ஒன்றும் இருந்துள்ளது. இந்த நடராஜ மூர்த்தி தற்போது எங்குள்ளது என தெரியவில்லை. இந்த மகாமண்டப வாயில் அருகில் நந்தி பலிபீடம் உள்ளது. கருவறை வாயிலில் இருந்த ஒரு விநாயகரை சுவர் இடிவது போலிருந்ததால் சற்று நகர்த்தி வைத்துள்ளனர். இறைவனின் கருவறையும் அர்த்தமண்டபமும் கூரை மட்டம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. விமான பாகம் முற்றிலும் சேதமடைந்து விட்டது.
தென்முகன் ஒரு சிறிய கோஷ்டத்தில் பெரிய கஷ்டத்தில் அமர்ந்துள்ளார். பிற கோஷ்ட மூர்த்திகள் ஏதும் இல்லை. சண்டேசர் சன்னதி பெரியதாக அமைந்துள்ளது மூர்த்தியும் உள்ளார். பிரகார சிற்றாலயங்கள் தென்மேற்கில் வரசித்தி விநாயகர் எனப்படும் கைலாச கணபதி உள்ளார். அடுத்து முகப்பு இடிந்துபோன வள்ளி தெய்வானை சமேத முருகன் சிற்றாலயம், அடுத்து வடமேற்கு மூலையில் சன்னதியே சற்று சாய்ந்த நிலையில் மகாலட்சுமி உள்ளார். அப்படியே வடகிழக்கு பகுதிக்கு வந்தால் நீண்ட பைரவர் மண்டபம் பாதி இடிந்து தொங்கிக்கொண்டுள்ளது அதில் பைரவர் சூரியன் நாகர் சனைச்சரன் நால்வர் சிலைகள் உள்ளன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடக்கம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி