ஒருவந்தூர் ஸ்ரீ பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், நாமக்கல்
முகவரி :
ஒருவந்தூர் ஸ்ரீ பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில்,
ஒருவந்தூர்,
நாமக்கல் மாவட்டம்,
தமிழ்நாடு – 637 015
இறைவி:
ஸ்ரீ பிடாரி செல்லாண்டியம்மன்
அறிமுகம்:
ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் பிரதான தெய்வமாக பிடாரி செளந்தியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களாக கருப்புசாமி, கன்னிமார், இசக்கி உள்ளிட்டோர் உள்ளனர். மாசிமகத்தை ஒட்டி தேர் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா 15 நாட்கள் நடைபெறும். மார்கழி மாதம் வேல் திருவிழா நடைபெறுகிறது.
புராண முக்கியத்துவம் :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரின் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை ஊர் மக்கள் அங்கிருந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்து கொண்டிருந்தார்கள். ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதி நின்றது. அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர அருட்சுடராக ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது. தவம், யாகம் என முயற்சி செய்து இறைவனை தேடி அடியார்கள் செல்வதுண்டு. ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் தங்களை தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் மக்கள். அவளுக்கு பச்சை பந்தல் போட்டு பூஜை செய்தனர். இவ்விடத்திலேயே “பிடாரி செல்லாண்டி’ என்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி விட்டாள் அம்பிகை. காலப்போக்கில் அம்பிகையின் அருளாலும், பக்தர்களின் முயற்சியாலும் இப்போதுள்ள கோயில் உருவானது.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
சிறப்பு அம்சங்கள்:
“”சிவனும் பார்வதியும் இணைந்த சக்தியின் சொரூபம் தான் செல்லாண்டியம்மன் என்பது நம்பிக்கை. அம்பிகை வடக்கு நோக்கி நாமக்கல் மற்றும் மோகனூர் பகுதியை பார்த்திருப்பதால் இவ்வூர்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மக்கள் நம்புகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிக்காக கோயிலை தோண்டும் போது ஒரு நீண்ட கல் கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒரு குதிரையும், ஒரு மரமும், அதன் கீழ் உள்ள லிங்கத்தை பார்வதி தேவி பூஜை செய்வது போலவும் செதுக்கப்பட்டிருந்தது. சிவனுக்கு ரிஷபமே வாகனம். ஆனால், இங்கு குதிரை வாகனமாக சுவாமி வந்துள்ளது விசேஷ அம்சம். பார்வதி பூஜை செய்து வரம் பெற்றதை போன்று வடிக்கப்பட்டிருப்பதால், பெண்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த சிலையை வணங்கி பயனடைகிறார்கள். திருமணத் தடை உள்ள பெண்கள் அம்பிகையை வணங்கி, நலம் பெறுகின்றனர்,” என்றார்.
திருவிழாக்கள்:
மாசிமகத்தை ஒட்டி தேரோட்டம் உள்பட 15 நாள் திருவிழாவும், மார்கழியில் வேல்திருவிழாவும் நடக்கிறது. இத்திருவிழாவின் போது தினமும் கோயிலின் வேல் மற்றும் பூஜை பொருட்கள் மேளதாளத்துடன் எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் சென்று பூஜை வாங்கி கொண்டு கோயில் வந்து சேர்கிறது. ஆடி கடைசி வெள்ளியில் 1008 பால் குட அபிஷேக பெருவிழாவும், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜையும் நடக்கிறது.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒருவந்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி