“ஐராவதம்”
எழுதியது : கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியா் கலைமகள்
இந்திரனின் வாஹனமாக இருக்கும் ‘ஐராவதம்’ என்ற வெள்ளை யானை., தேவா்களும் அசுரா்களும் கடலை கடைந்த போது வெளிப்பட்டது என்றே புராணங்கள் கூறுகின்றன…..
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ளது சுவேதாரண்யேஸ்வரா் கோயில். இங்குள்ள சிவபெருமான் சுவேதாரண்யேஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா் மற்றும் இங்குள்ள அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறாா்.
சமய குரவா்களாகிய சம்பந்தா்., அப்பா்., சுந்தரா்., மாணிக்கவாசகா் ஆகிய நால்வராலும் பாடல்பெற்ற சிவாலயமாகும்.இந்திரனின் ‘ஐராவதம்’ எனும் வெள்ளை யானை இறைவனை வணங்கியத் தலமாகும் இது..!!
இந்திரனின் வாஹனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை., மஹாவிஷ்ணுவிற்கு சூட்டிய துளசி மாலையை அவமதித்ததால் துர்வாச முனிவாின் சாபத்திற்கு உள்ளானது. மதுரை மாநகாில் உள்ள முக்தீஸ்வரரை வணங்கி வழிபட்டதன் மூலம் ஐராவதம் சாப விமோசனம் பெற்றதாக ஸ்தல புராணக் கதை சொல்கிறது….
ஐராவதத்திற்கு முக்தி அளித்ததால் ‘ஐராவதேஸ்வரா்’ என்ற பெயரிலும் முக்தீஸ்வரா் அழைக்கப்படுகிறாா். சாப விமோசனம் வழங்கிய நிகழ்வுக்கு பின்னா் கோயில் அமைந்துள்ள பகுதியை ஐராவதநல்லூர் என அழைக்கலாயினா்.
திருப்பரங்குன்றம் கோயில் மூலவரை., பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால்., இங்குள்ள மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய்., புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம்., இந்த முருகப்பெருமானின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறாா்கள்.
கருவறையில் முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இந்திரனுடைய வாகனம் ஐராவதம் என்பதால்., இதனை இந்திரன் தெய்வயானையை முருகப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்த பின்னா் சீதனமாக வழங்கினார் என்று சொல்வாா்கள். தெய்வயானையைப் பிரிய மனமில்லாமல் திருமணம் முடிந்ததும் திருப்பரங்குன்றத்திற்கு ஐராவதம் வந்ததாகவும் கூறுகிறாா்கள்.
தாராசுரத்தில் ஐராவதம் சிவ லிங்கத்தை வழிபட்டதாக நம்பப்படும் கோயில் உள்ளது. எனவே ஐராவதேஸ்வரா் என்று லிங்கம் பெயா் பெற்றது. அரிய சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த இக்கோயில் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்பாா்கள்.