“என் பக்தனுக்கு கிடைக்காத தரிசனம் உங்களுக்கு எதற்கு?” திரும்பி நின்ற கண்ணன்!
ஜகத்குரு ஆதிசங்கரரின் அவதாரம் மிக மிக அத்தியாவசியமான ஒரு காலகட்டத்தில் நம் நாட்டில் நிகழ்ந்தது. ஹிந்துக்கள் தங்களுக்குள்ளேயே பேதங்களை வளர்த்து, ஒருவருக்கொருவர் விரோதித்துக்கொண்டு, வேத நெறிகளிலிருந்து விலகி புதுப் புது தெய்வங்களை கண்டுபிடித்து அவற்றை கொண்டாடி வந்த காலகட்டம். எங்கும் அமைதியின்மையும் வன்முறையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது.
ஆன்மீகத்துக்கும் ஹிந்து தர்மத்துக்கும் புத்துயிரூட்டும் பொருட்டு சங்கரர் பாரதத்தில் உள்ள எல்லாத் தலங்களுக்கும் கால் நடையாகவே நடந்து சென்றார். அப்படி ஒரு சமயம் வடக்கில் உள்ள கோவில்களை தரிசனம் செய்துவிட்டு சிருங்கேரி வரும் சமயத்தில் அவர் செவிக்கு மட்டும் கேட்பதாக நுண்ணிய சலங்கை ஒலி கேட்க, அவர் திரும்பிப் பார்த்தாராம். யாரும் இல்லை. மறுபடி இதோ இந்த சாரதாபீடம் அமைந்துள்ள இடம் வந்ததும் கொலுசு சத்தம் நின்றுவிட்டதாம். அப்பொழுது அவர் திரும்பிப்பார்த்தபோது அவர் ஞானக்கண்களுக்கு, மகா சரஸ்வதியே காட்சி அளிக்க, தேவி அங்கேயே குடிகொள்ள விருப்பமுள்ளவளாக இருக்கிறாள் என்று இக்கோவிலைக் கட்டியதாக ஐதீகம். இங்கேயே ஆஸ்ரமம் அமைத்து, தாய் இருக்கும் இடத்தில் மகனும் தங்கிவிட்டார்.
சாரதாம்பாள் இன்றும் ஆலயத்தில் பரிசுத்தம் இருக்கிறது. அமைதி இருக்கிறது. அங்கு ஊழியம் பார்க்கும் அர்ச்சகர்களிடம் அன்பும், ஆறுதலான வார்த்தைகளும் இருக்கின்றன. அங்கே யாருக்கும் தட்சணை என்கிற பெயரில் பணம் எதுவும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாருக்கும் வயிறு நிறைய உணவு வசதி இருக்கிறது. காற்றோட்டமான சூழ்நிலையும், கவலைகளை சாரதாதேவி பார்த்துக் கொள்வாள் என்கிற நிம்மதியும் இருக்கிறது. போதாதா? கொடைக்கானலுக்கும், ஊட்டிக்கும் படையெடுத்து அங்கே இருப்பிடமோ, சாப்பாடோ சரியாகக் கிடைக்காமல் அவதிப்படுவதை விட இங்கு ஒரு ட்ரிப் அடியுங்களேன்.
சிருங்கேரிக்குச் சென்று சாரதாதேவியைத் தரிசித்துவிட்டு, இயற்கைச் சூழலில் ஆனந்தமாக இருந்துவிட்டு வரும் வழியில் அன்னபூர்ணா என்கிற இடத்தில் அன்னபூரணியையும் (காசிக்குச் சென்று பார்ப்பதற்குச் சமம்) தரிசித்து கடீல் துர்க்கையை தரிசித்து (பெரிய கோட்டை தாண்டி துர்க்கை இருக்கிறாள்) கொல்லூர் மூகாம்பிகையையும் தரிசனம் செய்து, அங்குள்ள சரஸ்வதி மண்டபத்தில் நம் குழந்தையை சிறிது அமர்த்தி பாட வரும் என்றால் பாடவைக்கலாம்.
மூகாம்பிக ஏனெனில்… மூகனுக்கு (அதாவது ஊமைக்கு) அருளிய அம்பாள் ஆனதால் மூகாம்பிகை சென்று பெயர். பேச்சு வராத ஊமைச் சிறுவனுக்கு தேவி மனம் இரங்கி, அவளை சாடையாய் அழைத்து “எனக்கு மருதாணி பறித்து அரைத்துத்தா” என்று கேட்டு, அவன் அதைப் புரிந்து கொண்டு மருதாணியைப் பறித்து அரைத்துத்தர, அதைத் தன் பாதங்களில் இட்டுக் கொண்ட தேவி அந்த மருதாணி பூசிய பாதங்களைத் தண்ணீரால் அலம்பி, அந்நீரை மூகனைக் குடிக்கச் சொன்னாள். அவ்வாறே தயக்கமின்றிச் செய்த மூகனுக்கு பேசும் சக்தி வந்ததாம்.
இந்த அபூர்வ ஸ்தலத்தையும் தரிசித்து விட்டு, உடுப்பியில் பாலகிருஷ்ணனாய், நித்ய இளைஞனாய், வயோதிக அந்தணனாய், நாம் எப்படி பார்க்கிறோமோ, அப்படியெல்லாம் காட்சியளிக்கும் ஸ்ரீகிருஷ்ணனை தரிசனம் செய்யலாம்.
மனிதர்களாக பிறந்து, பரம்பொருளை கண்டு இன்று நம்மால் வணங்கப்படும் 63 நாயன்மார்களில் பலர் ஏழை பாழைகள் தான். தீண்டத்தகாதவர் என்று ஊராரால் ஒதுக்கிவைக்கப்பட்ட நந்தனாருக்காகத் தானே இறைவன் திருப்புன்கூரில் நந்தியையே விலகச் சொன்னார். (இன்றும் இந்த தளத்தில் நந்தி இறைவனுக்கு நேராக இல்லாமல் சற்று விலகி தான் இருக்கும்.). இறைவன் அனைத்தையும் கடந்தவன். எல்லாவற்றையும் கடந்தவன். உருவத்தை பார்ப்பவன் மனிதன். ஆனால் உள்ளத்தைப் பார்ப்பவன் இறைவன். அதனால்தான் ஆண்டவன் முன் அரசனும் ஆண்டியும் சமம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏழை பணக்காரன் என்கிற பேதமெல்லாம் பார்ப்பது மனிதன் தானே தவிர இறைவன் அல்ல என்பதை உலகிற்கு உணர்த்திய மற்றுமோர் நிகழ்வு இது.
மற்ற கோவிலில் நேரே கர்ப்பகிரஹம் தெரிவது போல இங்கே தெரியாது. பிறைகளால் ஆன ஜன்னல் வழியே தான் கிருஷ்ணனைக் காணமுடியும்.
காரணம்: அங்கு மிகவும் பக்திமானான செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவன் இருக்கிறான். அவன் தினமும் வேளை தவறாமல் கிருஷ்ணனைச் சேவிப்பதில் மிகுந்த பிரியம் உள்ளவன். ஆனால் ஆசார சீலர்களோ செருப்பு தைக்கும் தொழிலாளி கோவிலுக்குள் வரக்கூடாது, கண்ணனை தரிசிக்கக் கூடாது என்று தடைவிதித்து விட்டனர். அவன் சற்று தொலைவில் நின்றபடியே கோவிலைப் பார்த்து அழுது கொண்டிருந்தானாம். ஒரு நாள் இரவு எல்லாரும் தரிசனம் தருகிற வாசல் இறுக்கமாக மூடப்பட -செருப்பு தைக்கும் தொழிலாளி நிற்கும் பக்கமாய் திரும்பி நின்ற கண்ணன் தன்னைச் சுற்றி சாளரத்தை அடைத்துக் கொண்டானாம்.
அதாவது “என் பக்தனுக்கு இல்லாத தரிசனம் உங்களுக்கும் கிடையாது. அவனைப் போலவே நீங்களும் ஜன்னல் வழியாய் என்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்பதைப் போல.
இன்றைக்கும் கூட அர்ச்சகர், ஆராதனை செய்பவர் மட்டுமே உள்ளே போய்வர வழி இருக்கிறது. மற்றவர்கள் எல்லாரும் வெளியில் இருந்துதான் தரிசனம் செய்யவேண்டும்.
இந்தச் செருப்பு தைக்கும் பக்தனுக்கு அவன் தரிசனம் செய்த இடத்திலேயே சிலை நிறுவியிருக்கிறார்கள்.
(அழகுக்காக இந்த கிருஷ்ணர் படத்தை அளித்துள்ளோம். உடுப்பி மூலவரும் சாட் சாத் இதே போல மத்தோடு தான் காணப்படுவார்.)
கையில் மத்தோடு காட்சி தரும் உடுப்பி கிருஷ்ணர்
விஜயதசமி போன்ற விசேஷ நாட்களில் மட்டுமே மூலஸ்தானத்தின் கதவு திறக்கப்படுகிறது. இதன் அருகே உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் பூஜைசெய்யும் மடாதிபதிகள் செல்கின்றனர். கிருஷ்ணரை 9 துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல் போன்ற அமைப்பு) வழியாகத்தான் தரிசிக்க முடியும். (அது மாநிலத்துக்கே கவர்னரானாலும் சரி… முதல்வரானாலும் சரி…).
வெள்ளியால் ஆன இந்த துவாரத்தை “நவக்கிரக துவாரம்’ என்கின்றனர். இதில் கிருஷ்ணரின் 24 வகையான உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆண்டியும் ஒன்று. அரசனும் ஒன்று. சதானந்த கௌடா முதல்வராக இருந்தபோது உடுப்பியில் துவாரத்தின் மூலம் கிருஷ்ணரை தரிசிக்கிறார்
இங்கே அணையாத அடுப்பு உண்டு. எப்பொழுதும் குறையாத அன்னம் உண்டு. வாசற்புறத்தில் நிற்கும் தேர் விறகினால் ஆனது. இந்த விறகும் குறைந்ததே கிடையாது.
சிருங்கேரிக்குப் போவது என்றாலும், திரும்பி வருவது என்றாலும் கொல்லூர், உடுப்பி வழியாகத்தான் வர வேண்டும். மிகப் பெரிய விசேஷம் இங்கெல்லாம் என்னவென்றால் எத்தனை பணக்கார பக்தர்கள் வருகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு மிகமிக ஏழைகளும் வருகிறார்கள்.
மகாவிஷ்ணுவான ஸ்ரீகண்ணனும், பார்வதி தேவியான ஸ்ரீசாரதாதேவியும், மகாலட்சுமியும், அங்கே இருப்பதாலோ என்னவோ பக்தர்களுக்கு வயிற்றுப்பசியும் மனப்பசியும் தீர்ந்து மனநிம்மதியும் கிடைக்கிறது.