Saturday Jan 18, 2025

உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு கரபுரநாதர் திருக்கோயில், உத்தமசோழபுரம், சேலம் மாவட்டம் – 636010. தொலைபேசி எண்: 9788718970

இறைவன்

இறைவன்: கரபுரநாதர்

அறிமுகம்

கரபுரநாதர் கோயில் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள உத்தமசோழபுரத்தில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த ஆலயம் தமிழ்நாட்டின் திருமண பரிகார ஸ்தலங்களில் ஒன்றாகும், ஆனால் இங்கு தமிழ் கவிஞர் அவ்வையார் முன் பூஜைகள் நடத்தப்படுகின்றன. மூலவர் கரபுரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார், மேலும் சுயம்புவாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று நம்பப்படுகிறது. பாரி மன்னரின் இரண்டு மகள்களான அங்கவை மற்றும் சங்கவை ஆகியோரின் திருமணத்தை பிரபல தமிழ் கவிஞர் அவ்வையார் முன்னின்று நடத்தினார் என்று நம்பப்படுகிறது. கோயிலின் நுழைவாயிலில் அவ்வையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மூன்று மன்னர்கள் வழிபாட்டிற்காக வந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. சோழன் தங்கியிருந்த இடம் உத்தமசோழபுரம் என்றும், பாண்டியர் வீரபாண்டி என்றும், சேரன் சேர்வராயன்மலை என்றும் அழைக்கப்படுகிறது. லிங்கம் ஒருபுறம் சாய்ந்த நிலையில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

ராவணன் சகோதரன் கரதூசனன், ஆயிரம் ஆண்டு தவம் செய்து அக்னிபிரவேசம் செய்யும் நேரத்தில் “நில்’ என்ற அசரீரி வாக்கு கேட்டு நின்றான். இறைவன் கரதூசனனுக்கு காட்சி அளித்தார். அப்போது இறைவனுக்கு கரதூசனன் பூஜை செய்ததால், “கரபுரநாதர்’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. திரேதாயுகத்தில் கரபுரம் என்றும், கலியுகத்தில் சோழபுரி என்றும் கூறப்படும் இத்தலத்தின் சிறப்புகள் பற்றி உத்தமசோழபுரம் கரபுரநாதர் புராணம் என்னும் தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த புராண நூலின் ஆசிரியர் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. அந்த புராணத்தில், “இங்கு சூரியன், சந்திரன், தேவர், முனிவர் ஆகியோர் நாளும் வணங்கி மகிழ்வர். வரங்களையெல்லாம் கொடுக்கும் தெய்வம் எதிரில் தோன்ற, அதை வணங்காமல் வேறு தலத்தில் சென்று அடையக்கூடிய நற்பயன்களையெல்லாம் இத்தலத்திலேயே பெற்று, இம்மையிலும் மறுமையிலும் பயன் பெறலாம்,’ என்று கூறப்பட்டுள்ளது. உத்தமசோழபுரம் கரபுரநாதர் இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளார். திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம், திருமூலர் எழுதிய திருமந்திரம், அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ் போன்றவற்றிலும் கரபுநாதர் பற்றிய செய்யுள் இடம் பெற்றுள்ளது. இந்த கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து தங்கி இறை வழிபாடு நடத்தியதற்கான கல் வெட்டு ஆதாரம் உள்ளது. அதனால் தான் சோழன் தங்கிய இடத்தை உத்தமசோழபுரம் என்றும், பாண்டியன் தங்கிய இடத்தை வீரவீபாண்டி என்றும், சேரன் தங்கிய மலை சேர்வராயன் மலை என்றும் வழங்கப்படுகிறது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்கவும், பகை நீங்கவும் இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

சோழர் காலத்தில் இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பணி நிறைவடையவில்லை. தொடர்ந்து தமிழக அரசால் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த “92ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோயிலுக்கு கடந்த 73 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மரத்தேர் செய்து வெள்ளோட்டம் ஓடி, சித்திரை பவுர்ணமி திதியில் சித்ரா பவுர்ணமி உற்சவம் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து ஆண்டின் 12 மாதங்களும் உற்சவம், சுக்ரவார வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கோயில் சண்டிஹோமம், பிரதோஷம் போன்ற வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது. இந்த கோயில் முகப்பு வாயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் அருகே ஒளவை சிலை நிறுவப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே பெரிய ஒளவையார் சிலை ஆகும். இந்த கோயிலின் பழமையும், வரலாற்று சிறப்பும், இலக்கியங்களில் பெற்ற இடம் பெருமைக்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளன. கொல்லிமலையை ஆண்ட பாரி மன்னனின் மக்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் ஒளவையார் கரபுரநாதர் கோயிலுக்கு அழைத்து வந்து, பகையாளியாய் இருக்கும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பகையை நீக்கி, பாரியின் மக்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததாக ஐதீகம் உண்டு. எனவே தான் சேர, சோழ, பாண்டியனுக்கு கோயிலின் அர்த்த மண்டப கல்தூணில் வில், புலி, மீன் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஈஸ்வரன் தலத்திற்கு அருகிலேயே ஓடும் திருமணிமுத்தாற்றில் பாண்டிய மன்னன் முத்துக்கள் எடுத்து சென்று, மதுரை மீனாட்சிக்கு மாலையாக போட்டதாகவும், அந்த முத்துமாலை இன்னும் மீனாட்சி கழுத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குணசீலன் என்ற சிறுவன் கரபுரநாதர் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். லிங்கம் உயரமாக இருந்ததால் சிறுவனால் மாலை போட முடியவில்லை. இதனால் சிறுவன் கதறி அழுது இறைவனை வேண்டுகிறான். அப்போது கரபுரநாதர் எழுந்தருளி, சிறுவன் உயரத்திற்கேற்றவாறு லிங்கத்தை சாய்த்து கொடுத்தார். அதனால் தான் இன்றும் இந்த கோயிலில் உள்ள லிங்கம் ஒரு புறம் சாய்ந்தவாறு உள்ளது.

திருவிழாக்கள்

12 மாதங்களும் உற்சவம், சுக்ரவார வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கோயில் சண்டிஹோமம், பிரதோஷம் போன்ற வழிபாட்டிற்கு சிறப்பு பெற்றது.

காலம்

1200 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

உத்தமசோழன்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சேலம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி, கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top