உக்கல் ஸ்ரீவைத்தியநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை
முகவரி :
ஸ்ரீவைத்தியநாதர் திருக்கோயில்,
உக்கல், செய்யார் வட்டம்,
திருவண்ணாமலை மாவட்டம் – 631701.
இறைவன்:
ஸ்ரீவைத்தியநாதர்
இறைவி:
ஸ்ரீ மரகதாம்பிகை
அறிமுகம்:
ஊரின் வடமேற்கு மூலையில் ஆலயம் அமைந்துள்ளது. தீராத பிணிகளால் அவதிப்படுபவர்கள் ஸ்ரீவைத்தியநாதருக்கு அபிஷேகித்த ஜலத்தை பருகிட நிவர்த்தி ஏற்படும் தென்முகத் தோரணவாயில் நம்மை வரவேற்கின்றது. இராஜகோபுரம் காணப்படவில்லை. கருவறையின் வெளிப்பக்க சுவற்றில், கல்வெட்டு சாசனங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.பழமையானதொரு சிவாலயம். திருப்பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தல விருட்சமாக வில்வமும், தல தீர்த்தமாக ரோக நிவாரண தீர்த்தமும் திகழ்கின்றன. தினமும் ஒருகால பூஜை நடந்திடும் இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் உள்ள இவ்வூர் காஞ்சிபுரம், வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உக்கல்.
புராண முக்கியத்துவம் :
காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக்கொண்டு, பல்லவநாட்டை கி.பி. 685 முதல் கி.பி. 705 வரை ஆட்சி செய்தார் பல்லவ மன்னன் இராஜசிம்மன். இவர், இரண்டாம் நரசிம்மவர்மன் என்றும் அழைக்கப்பட்டார். சிறந்த சிவபக்தர். காஞ்சிபுரத்திலுள்ள புகழ்பெற்ற கயிலாசநாதர் மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள குடைவரை ஆலயங்களையும் கட்டிய பெருமையைக் கொண்டவர். இவர் ஒரு சமயம், தீராத வயிற்று வலியால் அவதியுற்றார். இவரது கனவில் தோன்றிய கயிலாசகிரிநாதர், ‘சேயாற்றின் அருகில் உள்ள எமது திருத்தலத்தை அடைந்து வழிபாடு செய்ய, உனது தீராத வயிற்று வலி தீரும்’’ என அருள்புரிந்தார்.
அதன்படி, சேயாற்றின் வடகரையில் உள்ள உக்கல் திருத்தலத்திற்கு வந்த நரசிம்மவர்மன், ஸ்ரீவைத்தியநாதப் பெருமானை மனங்குளிர அபிஷேகித்து, பட்டாடைகள் சாற்றி, பல்வகை மலர்களால் மாலை தொடுத்து சூட்டினான். பலவகை நைவேத்தியங்களையும், பலகாரங்களையும் படைத்தான். மகிழ்ந்த பரமேஸ்வரர், ஒரு சித்தர் வடிவில் தோன்றி தல விருக்ஷமான வில்வத்தை மருந்தாகத் தந்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்ட சற்றுநேரத்தில், வயிற்று வலி காணாமல் போனது. சித்தர் வடிவில் வந்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்க நினைத்த அரசன், அவரை எங்கு தேடியும் கிடைக்காததை கண்டு நெகிழ்ந்தான். தனக்கு வைத்தியம் பார்த்தது அந்த வைத்தியநாதப் பெருமானே என்பதை உணர்ந்து, அளவில்லாத ஆனந்தம் அடைந்தான். அதோடு, இக்கோயிலின் முழு திருப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். அன்று முதல் இத்தல ஈசர், ஸ்ரீ பெருந்திரனார் வைத்தியநாதர் என்று போற்றலானார்.
காலம்
10-11 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உக்கல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை