Wednesday Dec 18, 2024

இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2769 2412, 94448 65714, 96000 43000

இறைவன்

இறைவன் : தெய்வநாயகேஸ்வரர், அரம்பேஸ்வரர் இறைவி: கனககுசாம்பிகை

அறிமுகம்

இலம்மையங்கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் அல்லது எலுமியன் கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இக் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரை இறைவன் சிறுபிள்ளை போலவும் பின்னர் முதியவர் போலவும் வழிமறித்த பின்பும் அவர் உணராததால் வெள்ளைப் பசு வடிவங் கொண்டு கோயிலை நோக்கிச் சென்று மறைந்தார் என்பது தொன்நம்பிக்கை. அரம்பர் முதலானோர் வழிபட்ட இடம் எனப்படுகிறது. மகாபிரளய காலத்தில் உலகத்தைக் காப்பாற்ற சிவபெருமான் தங்க அமைதியான இடம் என்று தேர்வு செய்த தலம் என்பதால் மன அமைதி தரும் தலமாக வழிபடப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக, மரமல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார். அப்போது, சிவனுடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால், அவர் சிவனது தேரின் அச்சை முறித்தார். தேர் நிலைகுலைந்து சாய்ந்தது. தேர் கீழே கவிழாமல் மகாவிஷ்ணு தாங்கிபிடித்தார். அப்போது, சிவன் கழுத்தில் அணிந்திருந்த கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். ஒருசமயம், சிவத்தலங்களுக்கு சென்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன், அவரிடம் “இவ்விடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அவரைக்குறித்து பதிகம் பாடு!’ என்றார். அதன்படி, இங்கு வந்த சம்பந்தர், சிவன் இருந்த இடத்தை தேடிவிட்டு அவரைக் காண முடியாமல் திரும்பினார். மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை காட்டினார். அதன்பின், சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார். தேவகன்னியர்கள் வழிபாடு: அரம்பையர்களான (தேவலோக கன்னிகள்) ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து, தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருளும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பேரின்ப நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்போரை வசீகரிக்கும் முகப்பொலிவையும், மனஅழகையும் பெறலாம், குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகைப்பெறுவர் என்பது நம்பிக்கை. கோயில் நுழைவுவாயில் அருகே தேவதையர்கள் வணங்கிய சிவன், “ரம்பாபுரிநாதராக’ 16 பேறுகளை அழிக்கும் படி, 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார் பரமன். பூமியே தேராக, சூரிய சந்திரரே சக்கரங்களாக, பிரம்மன் தேரோட்டியாக, மேரு மலை வில்லாக, வாசுகியே நாணாக, நாராயணப் பெருமானை அம்பாகக் கொண்டு தாரகாக்ஷன், கமலாக்ஷன் மற்றும் வித்யுன்மாலி ஆகியோரின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்தப் புறப்பட்டு விட்டார் பரமன். சாய்ந்த தேரில் இருந்த பரமன் தன் கையில் இருந்த வில்லை தரையில் ஊன்றி நின்றார். தேவர்களையும் தெய்வங்களையும் திரிபுர அசுரர்களிடம் இருந்து காக்க வந்ததால் இறைவனுக்கு தெய்வநாயகேஸ்வரர் என்று பெயர்.

நம்பிக்கைகள்

தெய்வநாயகேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், தீண்டாத்திருமேனியான சிவன், கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார். தினமும் கோபூஜை நடக்கும் இத்தலத்து சிவனை, வருடத்தில் ஏப்ரல் 2 – 7 , செப்டம்பர் 5 – 11 வரையில் சூரியன் தனது ஒளிக்கற்றையைப்பரப்பி பூஜிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 246 வது தேவாரத்தலம் ஆகும். தேவர்கள் படைக்கு தலைமையேற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன், “தெய்வநாயகேஸ்வரர்’ என்றும், அரம்பையர்களுக்கு அருளியதால், “அரம்பேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இதனால், அரம்பையங்கோட்டூர் எனப்பட்ட இத்தலம் காலப்போக்கில் “எலும்பியங்கோட்டூர்’ என்று மருவியது. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன், இங்குள்ள மல்லிகாபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி சென்றுள்ளார். இதில் நீராடி சுவாமியை வணங்கினால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை. தங்கள் அழகை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, புதுப்பித்துக் கொள்வது என்று ஆலோசனைக் கேட்க தேவ குரு ப்ரஹஸ்பதியை அணுகினர். அவர், அம்மூவரையும் தெய்வநாயகேஸ்வரரை வழிபடுமாறு கூறினார். அதைக்கேட்ட தேவகன்னியர் தங்கள் தோழியருடன் கூவம் நதிக் கரைக்கு வந்து தெய்வநாயகேஸ்வரரைக் கண்டனர். ரம்பை ஒரு தீர்த்தத்தை அமைக்க, அதில் நீராடிய அனைவரும் தெய்வநாயகேஸ்வரரை வழிபட்டனர். அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு, அருகே ஒரு பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தனர். வழிபாட்டுக்குப் பின் அவர்கள், தங்கள் அழகு புதுப்பொலிவுடன் மிளிர்வதைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர். தெய்வநாயகேஸ்வரர் தீண்டா திருமேனியாகும். பூஜையின்போது கூட அவரை அர்ச்சகர்கள் தொடுவதில்லை. ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன. 1983-ஆம் ஆண்டு, இவ்வூரில் இடி விழுந்தது. பெருத்த சேதம் ஏற்படாமல் தன் விமானத்தில் இடியினைத் தாங்கி ஊரைக் காத்தார் தெய்வநாயகேஸ்வரர்.

திருவிழாக்கள்

குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு போன்றவை இக்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பேரம்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடம்பத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top